Published:Updated:

நாடோடிச் சித்திரங்கள்: `கடவுள் தனியாக அமர்ந்திருக்கும் கதை - ஜம்மு வைஷ்ணவி தேவி ’ | பகுதி 24

நாடோடிச் சித்திரங்கள்

அவளைச் சீண்டும்விதமாக "எந்த அம்மா மனீஷா" என்றேன். மனீஷா என்னை ஏறிட்டுப் பார்த்தாள். பின்பு மீண்டும் குறுக்கும் நெடுக்குமாக ஓடினாள். சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள அக்குழந்தை மேற்கொண்ட முயற்சிகள் என்னுள் மகிழ்வையும் ஆற்றாமையையும் ஒருசேரத் தோற்றுவித்தன.

நாடோடிச் சித்திரங்கள்: `கடவுள் தனியாக அமர்ந்திருக்கும் கதை - ஜம்மு வைஷ்ணவி தேவி ’ | பகுதி 24

அவளைச் சீண்டும்விதமாக "எந்த அம்மா மனீஷா" என்றேன். மனீஷா என்னை ஏறிட்டுப் பார்த்தாள். பின்பு மீண்டும் குறுக்கும் நெடுக்குமாக ஓடினாள். சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள அக்குழந்தை மேற்கொண்ட முயற்சிகள் என்னுள் மகிழ்வையும் ஆற்றாமையையும் ஒருசேரத் தோற்றுவித்தன.

Published:Updated:
நாடோடிச் சித்திரங்கள்

"இது யோகிகளும் பண்டிதர்களும் வாழ்ந்த பூமி" என்று அருகிலிருந்த நெல்லி மரத்தைச் சுட்டிக்காட்டி பெருமூச்சுடன் கூறினார் அந்த மூதாட்டி. ஜம்மு-நக்ரோட்டா-வில் எனக்கு அறிமுகமான முதல் மனிதர் அவர். கடந்த சில நாள்களாக வீசிய 'லூ' எனும் கோடைப் புயலுக்கு நெல்லி மரம், தனது இலைகளைத் துறந்திருந்தது. கோடையின் முடிவில் பருவ மழையின் வருகைக்குப் பின் துளிர்க்கத் தொடங்கும் நெல்லிமரம், பனிக்காலம் தொடங்குவதற்கு முன்பு கனிகள் தந்துவிட்டு, மீண்டும் இலையுதிர்க்கத் தொடங்கிவிடும். தாவரங்களின் பருவ மாற்றங்கள் அழகானவை. ஒரு மரத்தை வெவ்வேறு பருவங்களில் காண்பது மனதைப் பக்குவப்படுத்தும். மரங்களே பெரும்பாலான நாடோடிக் கதைகளின் கதைசொல்லிகள். அவை காலத்தின் சாட்சியங்கள். "இதுவும் கடந்து போகும், எதுவும் கடந்து போகும்" என்பதை மரங்களிடமே நான் கற்றேன்.

"கோனுயர குடி உயரும்" என்று கூறி அதியமானின் உடற்நலனுக்காக நெல்லிக்கனியை பரிசளித்த ஔவையையும், போர்த்தொழில் புரிவதை வெறுத்த மாமன்னர் அசோகர் புவி வாழ்வின் நிலையாமையை உணர்ந்து துறவு மேற்கொண்ட பின் அரையளவு நெல்லிக்கனியை மட்டுமே உண்டு உடல்நலம் பேணினார் என்பதையும் படித்த நினைவுகள் மனதில் தோன்றி மறைந்தன. நான் நெல்லி மரத்தைத் தழுவிக்கொண்டேன். "எனக்கும் சில உண்மைகள் நீ உணர்த்திட வேண்டும்" என்று அதனிடம் வேண்டினேன். நெல்லி மரம் அசைவற்று நின்றது. அது எனக்குப் புகட்டப்போகும் பாடங்கள் ஒவ்வொன்றாக விளங்கத் தொடங்கின.

`மனீஷா கி தாதி' (மனிஷாவின் பாட்டி) என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அம்மூதாட்டியின் பெயர்த்தி மனீஷாவுக்கு அப்போது ஐந்து வயது. மனீஷாவின் தாய் சில தினங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை 1-A-வில் பால் வாங்குவதற்காக சாலையைக் கடக்க முயன்றபோது லாரி மோதி உயிரிழந்தார். மனீஷா, தனது தந்தை பாண்டே மற்றும் பாட்டியுடன் வசித்தாள். பாண்டே பிற்பகல் வேளைகளில் நெல்லி மரத்தடியில் அமர்ந்து ஆனந்தமாக யாருடனோ உரையாடினார். "அப்பா எனது புது அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கிறார்" என்று குதூகலமாகக் கூறினாள் மனீஷா. "புது அம்மா, பழைய அம்மாவைப்போல் அல்லவாம், உயரமாக இருப்பாளாம், நிறைய படித்தவளாம், ஆங்கிலம் பேசுபவளாம், ஸ்கூல் டீச்சராம், நானும் அவளுடன் ஸ்கூலுக்குச் செல்வேன்" என்ற மனீஷாவின் கண்கள் மின்னின.

"புது அம்மாவின் பெயரென்ன?" என்றேன். "காஞ்சனா" என்றாள். "அப்படியென்றால் பழைய அம்மாவை மறந்துவிட்டாய்தானே..." என்றேன்.

மனீஷா சற்றுத் தயங்கினாள், பின்பு சுதாரித்துக்கொண்டு "அந்த அம்மாவுக்கு அறிவே இல்லை. யாராவது பால் வாங்கச் செல்லும்போது இறந்துபோவார்களா... கவனமாகச் சாலையைக் கடக்காதது அம்மாவின் தவறு. புது அம்மா அப்படிச் செய்பவளல்ல என்று அப்பா கூறியிருக்கிறார்" என்றாள். நான் பாண்டேவை ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். ஆனந்தமயமாகத் தனது தலைமுடியைக் கோதியபடி பேசிக்கொண்டிருந்தார் பாண்டே. அவர் கைகளில் தடிமனான புத்தகம் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
Hitesh Singh

என்னைக் கடந்து சென்றவர் ஒரு நொடி நின்று ``உருது மற்றும் சம்ஸ்கிருதக் கவிதைகளில் இருக்கும் ஒற்றுமை பற்றி நானும் காஞ்சனாவும் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் படித்துப் பார்க்கிறீர்களா?" என்று அந்தப் புத்தகத்தை என்னிடம் நீட்டினார். "மனீஷாவின் அம்மா இறந்தது பெருந்துயரம். உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்" என்றேன். அவர் புருவம் நெரித்துக்கொண்டார். பின்பு தத்துவார்த்தமான தொனியில் "அவள் அப்படித்தான், அவசரக்காரி. எல்லாவற்றிலும் அவசரம். போய்விட்டாள். நானென்றால் அவளுக்கு உயிர். எனக்கு எருமைத் தயிர் பிடிக்கும் என்பதற்காகவே நெடுஞ்சாலையைக் கடந்து சென்று, மறுபுறமிருக்கும் கிராமத்திலிருந்து பால் வாங்கி வந்து தயிரும் வெண்ணெயும் தயாரித்துத் தருவாள். அவள் உலகம் சமையலறையோடு நின்றுவிட்டது. அறிவு சார்ந்த விஷயங்களோ, கவிதையோ, இலக்கியமோ எதுவுமே தெரியாதவள் அவள்."

"உங்களை நேசித்திருக்கிறாளே... அது போதாதா?" என்றேன். பாண்டே பதிலேதும் கூறவில்லை. மீண்டும் அலைபேசி சிணுங்கியது. "காஞ்சனா" என்று புன்னகையுடன் தனது பேச்சைத் தொடர்ந்தார். மனீஷாவும், புது அம்மாவை அப்பா அளவுக்கதிகமாக நேசிப்பதைப்போல், தானும் நேசிக்க வேண்டுமென்று எண்ணியிருந்தாள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோடை முடிந்து மாரிக்காலம் தொடங்கியது. நம் பகுதியில் ஆடி மாதம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ, அதேபோல் சாவன் மாதம் அப்பகுதிகளில் தெய்வ வழிப்பாட்டுக்கு உகந்த மாதமாகப் பார்க்கப்படுகிறது. ஜம்மு டவுனிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில கட்ரா மலைப்பகுதியில் மாபெரும் தலமமைத்து அமர்ந்திருக்கிறாள் `வைஷ்ணவி தேவி.’

சக்தி பீடங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் வைஷ்ணவி தேவி கோயிலை தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் உலகம் முழுவதுமிருந்து வருவதுண்டு.

சுமார் பதினான்கு கிலோமீட்டர் மலையேற்றத்தின் முடிவில் வைஷ்ணவி தேவியின் தரிசனம் கிடைக்கும். கன்னிச் சிறுமியாக கோயில்கொண்டிருக்கும் வைஷ்ணவியை தரிசிக்க புதுமணத் தம்பதிகளும், குழந்தைப்பேறு வேண்டி காத்திருப்பவர்களும் தவறாமல் வந்து சென்றனர். சாவன் மாத காலம் முழுதும் சிறுமியரை வைஷ்ணவியின் அவதாரங்களாகக் கருதி அனைவரும் வழிபடுவர். மனீஷாவுக்கு அந்த வழிபாடுகளில் முதன்மையான இடம் கிடைத்தது. `தாயில்லாப் பிள்ளை’ என்ற அடைமொழியோடு அவள் சுற்றுப்புறக் குடும்பங்களால் பெரிதும் கவனம்பெற்றாள். அவளுக்கு கைவளையல்களும் புத்தாடைகளும் பரிசாகக் கிடைத்தன. தினமும் கைநிறைய பரிசுப் பொருள்களோடு ஆனந்தமாக வீடு திரும்பும் மனீஷாவை நான் புன்னைகையுடம் பார்த்திருப்பேன். சாவன் மாதம் முடியும் வரை மனீஷாவைக் கையில் பிடிக்க முடியாது. என்னுடன் நேரம் செலவழிக்க முடியாமல் போனதற்கு அவள் வருத்தம் தெரிவித்தாள்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
Deepak Verma

ஒருமுறை வைஷ்ணவி கோயிலுக்குச் சென்று வர எண்ணியிருந்தபோது, மனீஷாவையும் உடன் அழைத்துச் செல்லுமாறு பாண்டே கூறினார். காஞ்சனாவின் குடும்பம் அங்கு வருவதால், அச்சமயத்தில் மனீஷா அங்கிருப்பது அனைவருக்கும் அசெளகரியமாகப் போய்விடுமென்பதால் மனீஷாவை எங்களுடன் அழைத்துச் செல்லுமாறு வேண்டிக்கொண்டார்.

"ஆனால் மனீஷா புது அம்மாவைக் குறித்து ஆர்வமாகப் பேசுகிறாளே..." என்றேன்.

"அவள் குழந்தை. அவளுக்கென்ன தெரியும்... காஞ்சனாவின் இடத்திலிருந்து நீங்கள் யோசிக்க வேண்டும். தான் மணமாகி வரவிருக்கும் வீட்டில் ஏற்கெனவே தாயென்னும் பொறுப்பு அவளுக்காகக் காத்திருக்கிறது என்பது எந்தவொரு பெண்ணுக்கும் சுமைதானே. நீங்கள் படித்தவர். சற்று யோசித்துப் பாருங்கள்" என்று கனிவு பொங்கக் கூறிய பாண்டேவின் சாதுர்யம் எனக்கு புரியாமலில்லை. மனீஷாவின் வருங்காலம் குறித்த அச்சம் என் மனதை அழுத்தியது. அச்சிறுமி இனி காணப்போகும் நாள்கள் எனது மனக்கண் முன்னே விரிந்தன. நான் மெளனமாகத் தலையசைத்தேன்.

மலையேற்றம் அப்போது எனக்குப் பழகியிருக்கவில்லை. நாங்கள் ஒரு குழுவாகச் சென்றோம். தங்களது உடல்தகுதி பொறுத்து சிலர் குதிரைகளை வாடகைக்கு எடுத்து மலையேறினர். மேலும் சிலர் 'டோலி' என்கிற பல்லக்கில் ஏறிச் சென்றனர். நான் நடந்தே ஏறிவிட வேண்டும் என்று உறுதியேற்றேன். ஏழெட்டு மணி நேரம் மலையேறவேண்டியிருந்தது. அன்றிரவு அங்கு தங்கிவிட்டு, மறுநாள் அதிகாலை நன்னீராடி வைஷ்ணவியை தரிசித்துவிட்டு மலையிறங்குவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
Hitesh Singh

மலையேற்றம் சிறிதும் அசதியை ஏற்படுத்தவில்லை என்பது எனக்கு ஆச்சர்யம் தந்தது. பசுமையான மலைக்காற்றும், தனிமையான பாதைகளும் பயணத்தை இன்பமயமாக மாற்றிவிட்டிருந்தது. மனீஷா ஆர்வமாக என்னுடன் மலையேறினாள். வழிநெடுகிலும் தனது புது அம்மா குறித்துப் பேசினாள். கோயில் வளாகத்தை அடைந்தபோது அந்தி சாய்ந்துவிட்டிருந்தது. அனைவரும் உணவருந்திவிட்டு உறங்கினோம். மனீஷாவின் கைகள் என் கழுத்தைச் சுற்றி இறுகப் பற்றியிருந்தன.

அதிகாலை அனைவரும் எழும்போதே மனீஷாவும் எழுந்துவிட்டாள். சாவன் மாதப் பரிசாகக் கிடைத்த வளையல்களையும், புத்தாடையொன்றையும் அணிந்துகொண்டு வேகமாகத் தயாரானாள். அவள் வைஷ்ணவியைக் காண ஆர்வமாக இருந்தாள். கோயில் தரிசனம் சில மணி நேரங்களில் முடிந்தது. பாறைக் குகையொன்றினுள்ளே பிண்டமாகக் காட்சியளித்தாள் வைஷ்ணவி. குறுகலான பாதையில் குனிந்து செல்லவேண்டியிருந்தது. அப்போது சிலருக்கு மூச்சிரைத்தது. அவர்களது சோர்வைப் போக்கும்விதத்தில் மற்றவர்கள் "ஜெய் மாதா தீ" என்று கோஷமிட்டனர். மனீஷா முன்பைவிட உற்சாகமாக "ஜெய் மாதா தீ" என்று கூறியபடி வரிசையில் முன்னேறினாள்.

தரிசனம் முடிந்து சற்று இளைப்பாறிய பிறகு அங்கிருந்து சில கிலோமீட்டர் உயரத்தில் 'பைரோன் பாபா' வை தரிசிக்கக் கிளம்பினோம். அவன் ஓர் அசுரன். தேவியால் வதைக்கப்பட்ட அவனுக்கு மன்னிப்பருளி, தனது சிரத்தில் அவனை அமர்த்திக்கொண்டாள் தேவி.

"என்னைக்காண வரும் யாவரும் உன்னையும் கண்டு செல்வர்" என்று பைரோன் பாபாவுக்கு வரமளித்தாள் தேவி.

அவளது ஆணைக்கிணங்கி பைரோன் பாபா அம்மலையின் காவல் தெய்வமாக மாறினான். அவனையும் தரிசித்துவிட்டு யாத்திரையின் பலனை முழுமையாகப் பெற்ற மனநிறைவில் அனைவரும் மலையிறங்கத் தயாரானோம்.

தத்தமது குதிரைகளுக்காகவும், டோலிகளுக்காகவும் மற்றவர்கள் காத்திருந்த நேரத்தில் நானும் மனீஷாவும் தனியாக அமர்ந்து உரையாடினோம். அவள் என்னை `ஷாலு...’ என்றழைப்பதையே விரும்பினாள்.

"ஷாலு, இவ்வளவு பெரிய மலையில் வைஷ்ணவி தனியாக இருக்கிறாளே... அவளுக்கு பயமாக இருக்காதா?" என்றாள்.

"தனியாக இருப்பதில் பயமென்ன... எல்லோருமே தனியாகத்தானே இருக்கிறோம். கடவுள் எப்போதும் தனியாகத்தான் இருக்கும். வைஷ்ணவி கடவுள்தானே... அதில் உனக்குச் சந்தேகம் இருக்கிறதா?" என்றேன்.

"இல்லையில்லை"என்று வேகமாகத் தலையசைத்தாள்.

எங்கள் உரையாடலை நண்பரொருவரின் அலறல் தடுத்து நிறுத்தியது. அவருக்காக வரவழைக்கப்பட்டிருந்த குதிரை அவரது கால் விரல்களை மிதித்து நசுக்கிவிட்டிருந்தது. அவர் கடுமையான வலியால் துடித்தார். தெய்வ குற்றம் நேர்ந்துவிட்டதாக அவரது மனைவி பதைபதைத்தார். கோயில் வளாகத்திலிருந்த முதலுதவி மையத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர். அந்தத் தம்பதியரை அங்கேயே விட்டுவிட்டு மற்றவர்கள் மலையிறங்கத் தொடங்கினோம். மலையேற்றம்போல் இறக்கம் சுலபமாக இருக்கவில்லை. புவிவிசை வேகமாக இழுத்துச் சென்றாலும், கால்களின் தசைகள் இறுகுவதை என்னால் நன்குணர முடிந்தது. மனீஷா மலைப் படிக்கட்டில் குறுக்கும் நெடுக்குமாக இறங்கினாள். "ஷாலு மலையிலிருந்து நேராக இறங்கக் கூடாது, கால்கள் இறந்துவிடும், வளைத்துதான் இறங்க வேண்டும் என்று அம்மா கூறுவாள்" என்றாள் மனீஷா. அவளைச் சீண்டும்விதமாக

"எந்த அம்மா மனீஷா?" என்றேன். மனீஷா என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

பின்பு மீண்டும் குறுக்கும் நெடுக்குமாக ஓடினாள். சூழலுக்கேற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள அக்குழந்தை மேற்கொண்ட முயற்சிகள் என்னுள் மகிழ்வையும் ஆற்றாமையையும் ஒருசேர தோற்றுவித்தன.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
Hitesh Singh

பாதி தூரம் கடந்துவிட்ட நிலையில், என் கால்களின் தசைகள் முற்றிலுமாக இறுகிவிட்டிருந்தன. இடுப்புப் பகுதியில் வலி கூடியது. சிறுநீர் கழித்த பின்பு நிலைமை மோசமானது. இரண்டு முழங்கால்களும் முற்றிலும் செயலிழந்துபோயின. ஓர் அடி முன்னே எடுத்து வைக்க முடியாத அளவுக்கு இறுகிவிட்ட தசைகளின் வலியால் சோர்வுற்றேன். குதிரை ஒன்றின் மீதேறி நானும் மனீஷாவும் மிச்சமிருந்த தூரத்தைக் கடந்து ஒரு வழியாக மலையிறங்கினோம். வழிநெடுகிலும் மனீஷா என்னை எள்ளி நகையாடியபடி வந்தாள். ``நான் அப்பவே சொன்னேன்ல ஷாலு, நீங்க கேக்கவே இல்லை, இப்ப பாருங்க... நீங்களும் நாலு காலுல நடக்குறீங்க" என்று பலமாகச் சிரித்தாள். நான் அதை ரசித்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நக்ரோட்டா சென்றடைந்தபோது வீட்டு வாசலில் இரண்டு கார்கள் நின்றிருந்தன. விடைபெறும் தோரணையில் அவை வேகமாகக் கிளம்பின. பாண்டே ஒரு கார் சன்னலினருகே நின்று ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு வளைக்கரங்கள் அவரது கரங்களைப் பற்றியிருந்தன. பிரிய மனமில்லாமல் அவர்களது கைகள் பிரிந்தன. கார்கள் புறப்பட்டன. பாண்டே அந்த காரின் பின்னே சிறிது தூரம் ஓடிச் சென்றார். வளைக்கரங்கள் மறையும் வரை அவர் கையசைத்து நின்றிருந்தார். எங்களது கார் வீடு வந்தடைந்ததை அவர் கவனித்திருக்கவில்லை.

கார் கதவைத் திறந்துகொண்டு வேகமாகப் பாய்ந்தாள் மனீஷா. "அப்பா யாரப்பா அது, யாரப்பா அது?" என்று பாண்டேவின் சட்டையை இழுத்துக்கொண்டே கேட்டாள் மனீஷா.

"அம்மா போகிறாள்" என்றார் பாண்டே. அன்றுவரை மனீஷா அழுது நான் பார்த்திருக்கவில்லை.

புல்தரையில் விழுந்து புரண்டு புழுவெனத் துடித்து அழுதாள் மனீஷா. அவளை நான் கடந்து சென்றேன். அவளுக்கு எந்தத் தற்காலிக சுகத்தையும் நான் அளித்து, அவளை ஏமாற்றிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். நானும் ஒருநாள் அவளைக் கைவிட்டுச் செல்வேன் என்பதை அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உறுதியாடு அவளைக் கடந்து சென்றேன்.

மனீஷா என்னை சந்திப்பதைத் தவிர்த்தாள். அவளைக் காண ஆவல் மிகுந்தபோது நானே அவளைத் தேடிச் சென்றேன். அப்போதும் அவள் என்னைத் தவிர்த்தாள். என்னால் அவளைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவளிடத்திலிருந்து வளர்ந்தவள்தானே நானும்.

விடுமுறைக்கு சென்னை வந்துவிட்டு மீண்டும் ஜம்மு திரும்பியபோது மனீஷாவின் வீட்டில் நிறைய மாற்றங்கள் நேர்ந்திருப்பதைக் காண முடிந்தது. பாண்டே-காஞ்சனாவின் திருமணம் முடிந்திருந்தது. தொலைக்காட்சியில் ஆங்கிலச் செய்திகள் வாசிக்கப்படுவது கேட்டது. திரைச்சீலைகள், சோபா செட், அலங்காரத் தரைவிரிப்புகள் என்று வீடே புதுப்பொலிவுடன் காணப்பட்டது. பாண்டேவின் சீருடையில் மேற்கத்திய பர்ஃப்யூம் மணம் கமழ்ந்தது. அவர் என்னை வணங்கிவிட்டுக் கடந்து சென்றார். மிஸஸ் பாண்டே என்னைத் தேநீருக்கு அழைத்திருந்தார்.

வீட்டினுள் நுழைந்ததிலிருந்து மனம் மனீஷாவை மட்டுமே தேடியது.

ஆனால் அதை நான் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. மனீஷாவின் பாட்டியையும் காணவில்லை. "அம்மா எங்கே?" என்றேன். "அவர் சமைத்துக்கொண்டிருக்கிறார். இந்த முதியவர்களுக்கு வேலை கொடுக்காவிட்டால் அவர்களது வாய் ஓயாமல் வேலை செய்யும்" என்று அசட்டையாகக் கூறினார் மிஸஸ் பாண்டே.

வரவேற்பறையில் மூங்கில் கட்டைகளாலான புத்தக அலமாரி ஒன்று வைத்திருந்தார் காஞ்சனா. அதன் இரு முனைகளிலும் அழகிய புத்தர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

"நீங்களும் இலக்கியம் பயின்றவரா?" என்றார்.

"ஆம், ஆங்கில இலக்கியம்" என்றேன்.

"நான் உருது மற்றும் சம்ஸ்கிருத இலக்கியம் பயின்றேன்" என்றார். தொடர்ந்து அவர், "உலகிலேயே பழைமையான மொழி தமிழ் என்று மார்தட்டிக்கொள்கிறீர்களே... ஆனால் அதைப் பயிலாமல் ஆங்கில இலக்கியம் படித்ததாகக் கூறுகிறீர்களே... மதராஸிகளுக்கே உரிய ஆங்கில மோகத்தின் வெளிப்பாடுதானே இது?" என்று தனது கல்விச் செருக்கை நயமாக வெளிப்படுத்தினார் காஞ்சனா.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்

"தமிழ் இலக்கியத்தை நான் பயிலவேண்டியதில்லை அல்லவா, அது என் மொழி, என்னிடமே இருக்கும். என்னுள்ளிருந்தும் பிறக்கும். தாய் மொழி அல்லவா..." தாய் என்பதை அழுந்தக் கூறினேன்.

காஞ்சனாவுக்கு மொழியறிவு மிகுந்திருந்ததை மறுப்பதற்கில்லை. அவளும் பாண்டேவும் நெடுநேரம் உரையாடினர். சில சமயங்களில் என்னையும் அழைப்பர். நான் கவனமாக அவ்வழைப்புகளைத் தவிர்த்துவிடுவேன். இலக்கிய தர்க்கங்கள் புரிவது எனக்கு பிடித்தமானதல்ல என்று கூறிவிடுவேன்.

மனீஷா கண்களிலிருந்து மறைந்துவிட்டிருந்தாள். அவளும் அவளது பாட்டியும் முற்றிலுமாக மறைந்துபோய், காஞ்சனா மட்டுமே அவ்வீடு முழுதும் நிறைந்திருந்தாள்.

தவறியும் நாங்கள் சந்தித்துவிட்டால் பாட்டி, பெயர்த்தி இருவருமே என்னிடம் பேசுவதைத் தவிர்த்துவிடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. யாருடைய கட்டளையாக அது இருக்கக்கூடும் என்பதும் புரியாமலில்லை.

பாண்டேவின் வாழ்வில் வசந்தம் பிறந்துவிட்டதாக அவர் ஒரு நிகழ்ச்சியில் கூறினார். காஞ்சனா ஆமோதித்துச் சிரித்தாள். சில மாதங்களில் அவர்கள் டெல்லி செல்வதாக காஞ்சனா மகிழ்ச்சி தெரிவித்தாள். மனீஷாவையும், அவளுடைய பாட்டியையும் தங்களது சொந்தக் கிராமமான கத்துவாவில், பாண்டேவின் சகோதரர் ஒருவரின் பராமரிப்பில் விட்டுச் செல்வதாகக் கூறினாள். "மனீஷா உங்களை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் காஞ்சனா... கதையின் அப்பகுதியை பாண்டே உங்களிடம் கூறவில்லையா?" என்றேன்.

காஞ்சனா தடுமாறினாள். பின்பு " நீங்களே யோசித்துப் பாருங்கள் ஷாலு... என் கணவரின் இன்னொரு மனைவியின் குழந்தையை நான் எப்படி அரவணைக்க முடியும்? தியாகம் பெருந்தன்மை இவையெல்லாம் கட்டுக்கதைகள். மனிதர்களை முட்டாளாக்கும் சொற்கள். என் படுக்கையை எனக்கு முன்னமே பயன்படுத்திய பெண்ணின் மகளை, என் மகளாக எப்படி அணுக முடியும்... நான் ரொம்ப ப்ராக்டிக்கல் ஷாலு, இதையெல்லாம் பாண்டேவிடம் முன்னமே கூறிவிட்டேன். அவரும் ஆமோதித்த பின்னரே எங்களது திருமணம் நடந்தது" என்று தெளிவாகப் பேசினாள் காஞ்சனா.

அதற்குப் பிறகு சில பிற்பகல் வேளைகளில் மனீஷாவும், அவளுடைய பாட்டியும் எங்கள் வீட்டின் பின்புறமிருந்த வயலில் நடமாடுவதைக் காண முடிந்தது. ஒருமுறை அவர்களை யதேச்சையாகச் சந்தித்தபோது," ஏன் இவ்வேளையில் இங்கு நடமாடுகிறீர்கள்?’’ என்றேன்.

அப்போதும் மனீஷா சிரித்த முகத்துடனே "அம்மா, அப்பாவைத் தொந்தரவு செய்யக் கூடாது. இது அவர்கள் ஓய்வெடுக்கும் நேரம்" என்றாள்.

தன் குடும்பத்தைப் பற்றி மற்றவர் எவரும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதில் மற்றவர்களைவிட மனீஷா அதிக கவனமாக இருந்தாள்.

மனீஷாவின் பாட்டி எதுவும் பேசவில்லை. அவர் கைகளில் ஒரு கூழாங்கல் இருந்தது. அதை இறுகப் பற்றியபடி ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார்.

பாண்டே குடும்பம் விடைபெறத் தயாராகியிருந்தது. பாண்டேவும் காஞ்சனாவும் தங்களது குழந்தைப்பேறு நல்லபடியாக நிகழ்ந்திட வேண்டி வைஷ்ணவியை தரிசித்துவிட்டு வந்திருந்தனர். காஞ்சனாவின் வயிற்றுப் பகுதி மேடிட்டிருந்தது. காஞ்சனாவும் பாண்டேவும் நண்பகலில் புறப்படுவதாகவும், மனீஷாவையும் அவளுடைய பாட்டியையும் மறுநாள் உறவினர் வந்து அழைத்துச் செல்வதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மனீஷாவையும் அவளுடைய பாட்டியையும் வழியனுப்பும் பொறுப்பு எனக்களிக்கப்பட்டது.

அன்றிரவு மனீஷாவின் பாட்டி சீக்கிரமே உறங்கிவிட்டார். நானும் மனீஷாவும் உறங்கவில்லை. அதேசமயம் பேசிக்கொள்ளவுமில்லை. அந்தக் குழந்தையின் மனதில் சூல்கொண்டிருந்த பெரும் பிரளயத்தை என்னுடைய எந்த ஆறுதலும் தணிக்காது என்பதை அறிந்தேயிருந்தேன். அவள் எப்போது உறங்கினாள் அல்லது உறங்கினாளா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. கண்களை மூடிப் படுத்திருந்த மனீஷாவை எழுப்பினேன்.

நாடோடிச் சித்திரங்கள்
நாடோடிச் சித்திரங்கள்
Hitesh Singh

இருவரும் நெல்லி மரத்தினருகே சென்றோம். அங்கிருந்து பார்த்தால் வைஷ்ணவி தேவி மலைச்சிகரம் தெரியும். நெல்லி மரத்தின் கிளைகள், கனிகளின் சுமை தாங்காமல் குனிந்திருந்தன. மனீஷா நெல்லி இலைகளைப் பறித்து உள்ளங்கையில் வைத்து ஊதினாள். ஒரு மூச்சுக்கு அவை பறந்துவிட்டன. அவர்களை அழைத்துச் செல்ல உறவினர் வந்துவிட்டார். பேருந்து நிலையம் வரை செல்ல ரிக்‌ஷா வரவழைக்கப்பட்டது. மனீஷா முதலில் தன் பாட்டியை ஏற்றிவிட்டு, பின்பு தானும் ஏறி அமர்ந்துகொண்டாள். மனீஷாவின் பாட்டி அப்போதும் பேசவில்லை. "உணவளித்தமைக்கு நன்றி மகளே" என்று ஆசி வழங்கினார்.

நான் மனீஷாவை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் உதடுகளை இறுகப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தாள். நான் ``மனீஷா..." என்றழைத்தேன்.

அவள் தடுமாறினாள். மீண்டும் சுதாரித்துக்கொண்டாள். என்ன என்பதுபோல் என்னைப் பார்த்தாள்.

"அவ்வளவு பெரிய மலை மேல வைஷ்ணவி எப்படி உட்கார்ந்திருக்கா?"

"தனியா உட்கார்ந்திருக்கா."

மீண்டும் நான் "எப்படி உட்கார்ந்திருக்கா?"

"தனியா உட்கார்ந்திருக்கா ஷாலு" என்றாள் மனீஷா.

"கடவுள் எப்படி இருக்கும்?"

"தனியா இருக்கும்.’’

இருவரும் புன்முறுவலுடன் விடைபெற்றோம். அவளது வளைக்கரங்கள் கண்களிலிருந்து மறையும் வரை நான் அங்கேயே நெல்லி மரத்தடியில் நின்றிருந்தேன். வைஷ்ணவி சிகரத்தின் பின் சூரியன் மறைவதைப் பார்க்க அழகாக இருந்தது.

(தொடரும்...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism