Published:Updated:

சுற்றுலா: மோனலிசாவும் உறைபனி உலகமும்!

ஈஃபிள் டவர்
பிரீமியம் ஸ்டோரி
ஈஃபிள் டவர்

பிருந்தா கணேசன்

சுற்றுலா: மோனலிசாவும் உறைபனி உலகமும்!

பிருந்தா கணேசன்

Published:Updated:
ஈஃபிள் டவர்
பிரீமியம் ஸ்டோரி
ஈஃபிள் டவர்

ரோப்பா... நம்முடைய சரித்திரப் புத்தகங்கள், செவிவழிச் செய்திகள் மூலமாக அது ஏதோ ஓர் எட்டாத கண்டம்போலவும், ஒரு புது உலகம்போலவும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டணியில் ஒரு சில இடங்களையாவது காண வேண்டும் என்கிற ஆவல் எல்லோரும் உண்டுதானே... அந்த வகையில், நாங்கள் ஐரோப்பாவின் மூன்று நாடுகளுக்குச் சென்றோம். முதலில் கால்பதித்த முதல் நாடு பிரான்ஸ்... நகரம் பாரிஸ்!

உலகப் புகழ்பெற்ற கலைப்பொக்கிஷங்கள், நினைவுச்சின்னங்கள் நிறைந்த நகரம் பாரிஸ். இரவு 8 மணிக்கு பாரிஸில் தரை இறங்குகிறோம். ஏர்போர்ட்டுக்கு வெளியே வந்து பார்த்தால் ஒரே வெளிச்சம். சூரியன் இன்னும் மறையவில்லை. இந்த சீஸனில் இரவு 8.30 மணி வரை இப்படித்தான் இருக்குமாம்.

நட்சத்திர ஹோட்டலில் தங்க ஏற்பாடு. ``எந்தவிதமான அறை சேவையும் கிடையாது.

சுற்றுலா: மோனலிசாவும் உறைபனி உலகமும்!

தண்ணீரைக் குளியலறையில் பிடித்துக்கொள்ளுங்கள். அவரவர் பொருள்களை அவர்களே எடுத்துச் செல்லவேண்டியதுதான்” - டூர் மேனேஜர் அறிவிக்கிறார். இந்தியாவில் இப்படிப் பழக்கமில்லாத நமக்கு, இது அதிசயமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில் கண்டது, லூவர் அருங்காட்சியகம். உலகத்திலேயே பெரிய அருங்காட்சியகம் என்கிறார்கள். அருமையான சேகரிப்புகள். முழுமையாகக் காண்பதற்கு ஒரு மாதம் ஆகும். உலகப்புகழ் பெற்ற லியோனார்டோ டா வின்சியின் மோனாலிசா ஓவியம் இங்குதான் உள்ளது. பெரிய கண்ணாடிக் கூம்பு அமைப்பின் கீழ் இறங்கித்தான் உள்ளே நுழைய வேண்டும். பல படிக்கட்டுகள் ஏறி இறங்கி, பல அறைகளைக் கடந்துதான் லிசாவைக் காண முடியும். கடைசியில் ஓர் அறையில் தம்மாத்தூண்டு படம். சற்றே மங்கிப்போய் கிடக்கிறது. ஆனால், மற்றவையெல்லாம் அற்புதத் திரட்டுகள். மொத்தத்தில் அரிய கலைக்களஞ்சியம். அடுத்தது, ஆர்கே மியூசியம். சிறியது. ஆனால், நேர்த்தியானது. இங்கு இருக்கும் பெரிய கடிகாரம் அவசியம் காணவேண்டியது. பின்னர் செயின் நதி படகுச் சவாரி, இரவில் செல்லவேண்டியது.

அடுத்தது உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபிள் டவர். இங்கு செல்வதற்கு முன்பே எச்சரிக்கப்படுகிறது, `இங்கு திருட்டு அதிகம்’ என்று. அதற்கேற்ப என்னை அறியாமலேயே என் கேமரா பறிபோகிறது. இந்த அதிசயக் கோபுரத்தை எந்த இரும்பால் கட்டினார்கள், எப்படிக் கட்டினார்கள் என வியக்கிறோம். கோபுரத்தின் இரண்டாவது நிலையிலிருந்து பார்த்தாலே ஊர் முழுவதும் தெரிகிறது. ஆனால், நெடுநேரம் வரிசையில் நிற்க வேண்டும்.

மறுநாள், `இந்தியா கேட்' போல உள்ள அழகான ஆர்ச். அடுத்தது, `நோட்ரே டாம்’ தேவாலயம். வசீகரமான கட்டட அமைப்பு. நுழைவாயிலில் நேர்த்தியான செதுக்கல்கள். உள்ளே கண்ணாடி வேலைப்பாடுகள், ஓவியங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதிய உணவு, இந்தியர் வாழும் பகுதியில் உள்ள சரவண பவனில். சிப்பந்திகள் எல்லோரும் சிங்களத்தவர். தமிழர்களும் உள்ளனர். அளவு சாப்பாடு ஒன்று எவ்வளவு தெரியுமா? 14 யூரோ. அதாவது 1,120 ரூபாய்.

சுற்றுலா: மோனலிசாவும் உறைபனி உலகமும்!

ஆப்பக்கடை, சங்கீதா ஹோட்டல் என்றெல்லாம் தமிழிலேயே எழுதியிருக்கிறது. நீரை எங்கும் விலை கொடுத்துதான் வாங்கவேண்டியிருக்கிறது. ஒரு லிட்டர், இரண்டு யூரோ. அதாவது 160 ரூபாய். நம் ஊர் பணத்தில் எவ்வளவு என நினைத்தால், மயக்கம்தான் வரும்!

அடுத்த பயணம் சுவிட்சர்லாந்து. பாரிஸிலிருந்து செல்வதற்கே ஆறு மணி நேரம். இது, அநேகமாக எல்லோருக்கும் கனவுலகம். நாட்டை நெருங்க நெருங்க, இயற்கைக் காட்சிகள் கண்களை ஈர்க்கின்றன. இரு பக்கங்களிலும் எங்கும் பச்சைப் புல்வெளிகள் செப்பனிட்டு வைத்தாற்போல இருக்கிறது. அவற்றில் ஆங்காங்கே நட்டுவைத்தாற்போல அழகிய வீடுகள். அவ்வப்போது நீர்நிலைகள். பின்னணியில் பால் போன்ற பனியால் போர்த்தப்பட்ட ஆல்ப்ஸ் சிகரங்கள்!

மேலே செல்லச்செல்ல பனிமலைகள் நம்மைச் சூழ்ந்துகொள்கின்றன. சுவிஸ்ஸில் முதலில் சென்ற இடம், இன்டர்லாக்கென். எங்கும் பசுமைதான். துன் ஏரி சவாரி, கண்களுக்கு விருந்து. மதியம் ஒரு ஹெலிபேட் எதிரே நிறுத்துகிறார்கள். அங்கே அமெரிக்கர்கள் நடத்தும் உணவுவிடுதி ஒன்றில் லஞ்ச். காஸ்ட்லிதான்!

இந்த அதிசயக் கோபுரத்தை எந்த இரும்பால் கட்டினார்கள், எப்படிக் கட்டினார்கள் என வியக்கிறோம். கோபுரத்தின் இரண்டாவது நிலையிலிருந்து பார்த்தாலே ஊர் முழுவதும் தெரிகிறது.

இங்கு காண, இல்லை... இல்லை... கற்றுக் கொள்ளவேண்டியது ஒன்று உள்ளது. அதுதான் சுத்தம். தொட்டுத் துலக்கிவைத்ததுபோல காட்சியளிக்கிறது. திருட்டு கிடையாது. எங்கும் கண்காணிப்பு கேமராக்கள். பொருள் வைத்த இடத்தில் அப்படியே இருக்கும்.

அடுத்தது, தலைநகரான பெர்ன் நகரம். நாடாளுமன்றத்தைக் காட்டுகிறார்கள். டிராம் ஓடுகிறது. பேருந்துகளும் உள்ளன. அழகான பொம்மைகள்போல அவை ஊர்ந்து செல்கின்றன.

அடுத்த நாள்... மவுன்ட் டிட்லிஸ். மலை உச்சியில் பனிக்கு நடுவே வித்தை காட்டுகிறார்கள். கேபிள் கார், பனிக்குகை, பனிச்சறுக்கு விளையாட்டு, மூடுபனியினூடே இழுத்துச்செல்லும் கேபிள் என்று அசத்துகிறார்கள். நிச்சயம் செல்லவேண்டிய இடம். இந்த இடத்தின் நுழைவாயிலிலேயே இட்லி, தோசை என்று நம்ம ஊர் உணவுகள் கிடைக்கின்றன!

பனி அரசனின் ஆட்சியையும் இயற்கையின் ரம்மியத்தையும் அள்ளிப் பருக, சரியான இடம் சுவிஸ்!

சுற்றுலா: மோனலிசாவும் உறைபனி உலகமும்!

கடைசி நாள் அன்று, `நாகரிகத்தின் தலைமையகம்’ என்றழைக்கப்படும் மிலான் நகரம், நாடு இத்தாலி. இந்த நாடுகள் எல்லாமே சிறியவைதாம். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குச் செல்வதற்கு 6 - 7 மணி நேரம்தான் ஆகிறது. மிலானில் பெரிய தேவாலயம் உள்ளது. இரு பக்கங்களும் பளபளவென்று கடைகள். பெரிய பெரிய மால்கள். ஒரு தெரு முழுக்க பாதசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தத் தேவாலயத்தில்தான் வின்சியின் மற்றொரு படைப்பான `இயேசு நாதரின் கடைசி விருந்து' ஓவியம் உள்ளது.

மூட்டையைக் கட்டிக்கொண்டு ஊர் திரும்புவதற்காக ஏர்போர்ட்டில் நுழைகிறோம். `சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப்போல வருமா...’ பாடல் பாடும் சத்தம் கேட்கிறது, நம்ம டூர் மேனேஜர்தான். கொஞ்சம் தமிழ் தெரியுமாம். பாரிஸில் பறிகொடுத்ததும், சரியான உணவு கிடைக்காமல் தவித்ததும் நினைவுக்கு வருகிறது. அவர், தன் அலைபேசியை உயர்த்திப்பிடிக்கிறார்... அந்தப் படத்தில் `இளையராஜா 75’ என்னைப் பார்த்து சிரிப்பதுபோலவே இருந்தது!

ஐரோப்பா போகிறீர்களா?

ன்றாகப் பார்த்து இஷ்டப்படி ரசிக்க வேண்டுமென்றால், தனியாக டூர் ஏற்பாடு செய்துகொண்டு செல்லுங்கள். டூர் பேக்கேஜ் மூலம் சென்றால் நிறைய நாடுகளை குறிப்பிட்ட நாள்களுக்குள் பார்க்கவேண்டியிருக்கும். கொஞ்சம் வேகம்தான்!

  • ஐரோப்பாவில் தண்ணீர் மிகவும் சுத்தமாகவே உள்ளது. பாட்டில்களில் பிடித்துக்கொண்டு வெளியில் செல்லுங்கள். தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொண்டே இருந்தால் ஒரு பக்கம் யூரோ கரைந்துகொண்டே இருக்கும்.

  • எங்கு சென்றாலும் ஆங்காங்கே கழிவறைகள் உள்ளன. மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.

  • சாப்பாட்டின் விலை கொஞ்சம் அதிகம்தான். அதிலும் இந்திய உணவு மிகவும் அதிகம், நம் மதிப்பில்.

  • பிரான்ஸ் நாட்டில், குறிப்பாக பாரிஸில் உடமைகள்மீது தனி கவனம் இருக்கட்டும். எப்படி அடிக்கிறார்கள் என்றே தெரிவதில்லை!

  • செலவுக்கு யூரோக்கள் கொண்டு செல்லலாம் அல்லது பாதிப் பணம் டிராவல் கார்டு மூலமாகக் கொண்டு செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism