
ஓசூரில் அதிகளவிலான தொழிற்சாலைகள் உள்ளதால் இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நெடுநாள்களாக எழுப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பெரும்பான்மை நகரங்களை விமானப் போக்குவரத்தின் மூலம் இணைக்கும் நோக்குடன் 2017-ம் ஆண்டு, 'உதான் திட்டம்' மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் ஓசூர் விமான நிலையம் உருவாக்கப்பட்டு விமானப் போக்குவரத்து தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இதுவரை ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கவில்லை.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், வாசகர் பிரவீன்குமார் இதுதொடர்பான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். "உதான் திட்டத்தின்கீழ் ஓசூர் விமான நிலையம் எப்போது அமையும்? பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் இந்தத் திட்டம் வருமா, வராதா?" என்பதுதான் அவரது கேள்வி. களத்தில் இறங்கி விசாரித்தோம்.
ஏன் தாமதம்?
ஒரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கி.மீ தூரத்துக்குள் இன்னொரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால், அந்தச் சர்வதேச விமான நிலைய நிர்வாகத்திடமிருந்து, 'அங்கு விமான நிலையம் அமைப்பதால் எங்களுக்கு எந்தவிதமான வருமான இழப்பும் ஏற்படாது' என்று தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். இந்திய விமான நிலையங்களின் வருவாயைப் பாதுகாக்கும் வகையில் போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கியுள்ள விதிமுறை இது. ஓசூரிலிருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் கர்நாடக மாநிலத்தின் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலைய நிர்வாகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதைத் தாமதப்படுத்தியது. அதனால், தொடக்க நிலை பணிகளே தேங்கிவிட்டன. தமிழக அரசு, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டுசெல்ல சமீபத்தில்தான் அந்த விமான நிலைய நிர்வாகம் தடையில்லாச் சான்றிதழை வழங்கியது. இதனால் தற்போது அந்தத் தடை நீங்கிவிட்டது.

அடுத்து, விமான நிலையம் அமைக்க வேண்டுமென்றால், அதிக நிலப்பரப்பு தேவை. தவிர, ஏராளமான உள்கட்டமைப்பு பணிகளும் செய்யப்பட வேண்டும். தற்போதுள்ள சூழலில் நிலம் கையகப்படுத்துவது பெரும் பிரச்னையாக மாறுகிறது. அதனால், தளியில் அமைந்துள்ள தனுஜா வான்வெளி வானூர்தி லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனத்தோடு இணைந்து விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டது.

தற்போது தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தனுஜா விமான நிலையம் செயல்படுகிறது. தற்போது விமான சர்வீஸ் ஸ்டேஷனாக மட்டுமே இந்த நிறுவனம் இயங்கிவருகிறது. விமானச் சேவை தொடங்க வேண்டுமென்றால், சர்வதேச விமான நிலைய விதிமுறைகளின்படி, தேவையான அடிப்படை வசதிகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்தாக வேண்டும். இது தனியார் விமான நிலையம் என்பதால், அங்கு இந்த வசதிகளை ஏற்படுத்தத் தேவையான நிதியை ஒதுக்க இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தயங்குகிறது. விதிகளும் அதற்குத் தடையாக உள்ளன. இதுவும் காலதாமதத்துக்கு முக்கியக் காரணம்.
ஓசூரில் விமானச் சேவை தொடங்க வேண்டுமென்றால், தனுஜா விமான நிலையத்துடன் நீண்டகால ஒப்பந்தம் செய்தாக வேண்டும். அதன் பிறகே, இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்யும். அதன் பிறகே அடிப்படை வசதிகளை உருவாக்கி, விமானச் சேவையைத் தொடங்க முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.

தமிழக அரசு தரப்பில், தனுஜா விமான நிறுவன உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். ஓசூரில் விமானம் தரையிறங்க இன்னும் சில வருடங்கள் ஆகும் என்பதுதான் யதார்த்தம்!
