Published:Updated:

`நேசமணி', `அதிசயம் அற்புதம்', `அதுதான் நெசம்' - 2019-ன் டாப் டிரெண்டிங் வார்த்தைகள் #2019Rewind

டிரெண்டிங் ஆன பல சம்பங்களும் வார்த்தைகளும் பாசிட்டிவில் முடிய, சில நெகட்டிவ்களும் பரவாமல் இல்லை.

எது எப்போது டிரெண்ட் ஆகும் என்றே கணிக்க முடியாத சோஷியல் மீடியா யுகத்தில் இருக்கிறோம். டிரெண்டிங் ஆன பல சம்பங்களும் வார்த்தைகளும் பாசிட்டிவிட்டியில் முடிய, சில நெகட்டிவிட்டிகளும் பரவாமல் இல்லை. அப்படியிருக்க, இந்த வருடம் என்னென்ன வார்த்தைகள் டிரெண்டு ஆனது? #2019trendingwords

2
கான்ட்ராக்டர் நேசமணி

கான்ட்ராக்டர் நேசமணி:

ஃபேஸ்புக்கின் ஒரு மீம் பக்கத்தில், சுத்தியல் படத்தைப் போஸ்ட் செய்து, `இந்தக் கருவிக்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்' எனக் கேட்க... அதற்கு, `இதற்கு சுத்தியல் என்று பெயர். இதை எதன் மீதாவது அடித்தால், டங்...டங் என சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் மண்டை, ஜமீன் வீட்டில் சுத்தியல் மூலம்தான் உடைக்கப்பட்டது. பாவம்! அவருக்காக எல்லாரும் சேர்ந்து ப்ரே பண்ணுவோம்' என ஒருவர் குறும்பாக கமென்ட்டிட, 10 வருடங்களுக்குப் பிறகு நேசமணியின் கதாபாத்திரம் மீண்டும் உயிர்த்தெழுந்து #PrayForNesamani ஹேஷ்டேக் மூலம் எல்லாப் பக்கமும் டிரெண்டு ஆனது. வடிவேலு ஃபார் லைஃப்!

3
ரஜினி ( அதிசயம் அற்புதம் )

அதிசயம் அற்புதம்:

``2021ல் அரசியலில் அற்புதம், அதிசயத்தை தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள்" என ரஜினி ஒரு பக்கம் பேட்டி தர, ``2021ல் மீண்டும் அதி.மு.க ஆட்சிக்கு வருவதைத்தான் ரஜினி அப்படிச் சொல்கிறார்" என எடப்பாடி பழனிசாமி மறுபக்கம் பதில் பேட்டி கொடுக்க... டிரெண்டு ஆனது அதிசயமும் அற்புதமும்.

மீண்டும் 'கமல் 60' விழாவில், ``எடப்பாடி ஆட்சி இரண்டே மாதங்களில் கவிழும் என்றார்கள். அற்புதம் அதிசயம் நிகழ்ந்தது'' என மீண்டும் கூற, `யார் சார் இவரு?' என ரஜினியை ஒரு பக்கம் கலாய்த்தனர். சமூக வலைதளங்களில் திரும்பிய பக்கமெல்லாம் அதிசயமும் அற்புதமும் நிகழ்ந்துகொண்டே இருந்தன.

4
Go back Modi

கோ பேக் மோடி:

மோடி தமிழகம் வருவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் வரும்போதெல்லாம் #GoBackModi ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டு செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர், தமிழக மக்கள்.

கடந்த வருடம், தமிழகத்தில் நடைபெற்ற ராணுவ கண்காட்சி விழாவில் பங்கேற்க மோடி வந்ததுதான் இந்த #GoBackModi-யின் அடிநாதம். ஜிஎஸ்டி, கறுப்புப் பணம், தமிழகத்திற்குப் பாராமுகம் என மத்திய அரசால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களும், பல இயக்கங்களும் கட்சிகளும் கறுப்புக்கொடி பலூன்களைப் பறக்க விட்டு தங்களது எதிர்ப்புகளைத் தெரிவிக்க, நெட்டிசன்கள் தங்களுடைய பங்கிற்கு #GoBackModi-யை டிரெண்டு செய்தனர்.

5
கானா ஸ்டீபன்

புள்ளீங்கோ:

கானா பாடல்கள் அதிக அளவில் கவனம்பெற்றது இந்த வருடமாகத்தான் இருக்கும். அதில், `புள்ளீங்கோ' பாடல், பல மில்லியன் வியூஸ்களைக் கடந்து கலக்கியது. கானா ஸ்டீபன், `கும்பலாக சுத்துவோம்' என்ற கானா பாடலை யூடியூபில் இறக்க, அந்தப் பாடலில் வந்த `புள்ளீங்கோ' வார்த்தை, இந்த வருடத்தின் டிரெண்டிங் வார்த்தைகளில் டாப்பில் வந்தது. டீ-ஷர்ட், கடைப்பெயர், புள்ளீங்கோ ஹேர்ஸ்டைல், டிரெஸ் கோட் என அவைகளை வைத்து பல விவாதங்கள், ப்ரோகிராம்கள், மீம்கள் எனத் திரும்பிய பக்கமெல்லாம் புள்ளீங்கோதான் டிரெண்டு. எங்க புள்ளீங்கோ எல்லாம் பயங்கீரம்!

6
பிக்பாஸ்

பிக்பாஸ்:

மற்ற இரண்டு சீசன்களை விடவும், இந்த வருடம் தமிழில் ஒளிபரப்பான `பிக்பாஸ்' மூன்றாவது சீசனும் அதன் வார்த்தைகளும்தான் அதிக டிரெண்டு ஆனது. `குருநாதா', `வீ ஆர் த பாய்ஸூ', `நைனா ஓ நைனா' எனப் பல வார்த்தைகள் டீன் டிக்‌ஷனரியில் சேர்ந்துகொண்டன. சமூக வலைதளங்களிலும் மீம்களாக வலம் வந்தன.

7
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்

நீங்க நம்பலைனாலும் அதுதான் நெசம்!

`அசுரன்' படமும் ஹிட் அடித்தது போலவே, பிரைமில் வந்த பிறகு பல காட்சிகளும் மீம் டெம்ப்ளேட்டாகி ஹிட்டாகின. அதில், இந்த வருடக் கடைசியில் மீம் போட அதிகம் உபயோகிக்கப்பட்ட டெம்ப்ளேட், `நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்'.

தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பசுபதி எனக் கதையின் முக்கிய பாத்திரங்கள் இருக்க, பசுபதி இந்த வசனத்தைச் சொல்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.

8
பிகில்

பிகில்:

ஒரு படத்தில் இடம்பெறும் வசனங்கள் டிரெண்டு ஆகும். வழக்கம் போலவே, பாடலின் வரிகளும் வார்த்தைகளும் டிரெண்டிங்கில் வந்தது இந்த படத்தில்தான். `வெறித்தனம்', `சிங்கப்பெண்ணே' எனப் பாடலின் வார்த்தைகளும், `பிகிலேய்ய்', 'கப் முக்கியம் பிகிலு' எனப் படத்தின் வசனங்களும் இந்த வருடம் பலராலும் உபயோகப்படுத்தப்பட்டது.

9
பப்ஜி

பப்ஜி- வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்:

பப்ஜி ஆன்லைன் கேம், இந்த வருடம் பலரது மொபைலை ஆக்ரமித்திருக்க, இறுதியில் `வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்' என க்ரீட்டிங் கொடுத்து டிரெண்டு ஆனது இந்த வின்னரும் டின்னரும். தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் `பட்டாஸ்' படப் பாடலில்கூட வரியாகப் பயன்படுத்தியிருந்தார்கள்.

`பப்ஜி விளையாட்டால் பலர் மரணம், விளையாட அனுமதிக்காத தந்தையை மகன் வெட்டிக் கொலை' எனப் பகீர் செய்திகளும் பப்ஜியை வைத்து வெளியானதுதான் இதன் ஹைலைட்.

அடுத்த கட்டுரைக்கு