தன் மனைவி படும் கஷ்டத்தைக் காணப் பொறுக்காமல், தான் யாசகம் செய்து சேர்த்து வைத்த பணத்தில், பைக் வாங்கியிருக்கிறார் பிச்சைக்காரர் ஒருவர்.
மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர், சந்தோஷ் குமார் சாஹு. இவரும் இவர் மனைவி முன்னியும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக யாசகம் கேட்டுப் பிழைப்பு நடத்தி வருகின்றனர். பேருந்து நிலையம், கோயில், மசூதி எனப் பல இடங்களில் பிச்சை எடுத்து தினசரி 300 முதல் 400 ரூபாய் வரை சம்பாதித்து வருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சாஹுவுக்கு இரு கால்களும் செயலிழந்ததால், மூன்று சக்கர சைக்கிளில் சாஹு அமர்ந்துகொள்ள, முன்னி அவரை நாள் முழுவதும் தள்ளிக்கொண்டு செல்வார். பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நாள் முழுவதும் மழையிலும், கடுமையான வெயிலிலும் மூன்று சக்கர வண்டியைத் தள்ளி வந்ததால், உடல் நலக் குறைவு ஏற்பட்டதோடு, முதுகுவலியாலும் முன்னி அவதிப்பட்டு வந்துள்ளார்.
மனைவியின் இந்த வலியைப் போக்க நினைத்த சாஹு, பிச்சை எடுத்துச் சேர்த்து வைத்திருந்த 90,000 ரூபாய் பணத்தில் இருசக்கர வாகனத்தை வாங்கி மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சாஹும் அவரின் மனைவியும் ஸ்கூட்டரில் அமர்ந்து சென்று யாசகம் கேட்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தன் மனைவியின் வலியறிந்து சாஹு செயல்பட்டதற்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய சாஹு, ``முன்பு எங்களிடம் மூன்று சக்கர சைக்கிள் இருந்தது, என் மனைவி முதுகுவலி எனச் சொன்னதால், 90,000 ரூபாயில் வண்டியை வாங்கினேன். இப்போது நாங்கள் போபால், இந்தூர் வரைகூட செல்லலாம்'' என்று கூறினார்.