Published:Updated:

`இப்படியும் ஒரு புரொபோசலா?' - காதலிக்காகப் படத்தையே மாற்றியமைத்த காதலன் #ViralVideo

இந்த வீடியோவை 6 மில்லியன் மக்களுக்கு மேல் யூடியூபில் பார்த்திருக்கின்றனர்!

வைரல் புரொபோசல்
வைரல் புரொபோசல்

சிலர் தனது காதலைக் காதலியிடம் தெரிவிப்பதில் வித்தியாசம் காட்ட நினைப்பார்கள். அப்படி வித்தியாசமானது லீ லொச்சலர் என்பவரின் புரொபோசல். இவர் கடந்த டிசம்பர் 30 அன்று தன் காதலி ஸ்டுதி டேவிட்டை அவருக்கு மிகவும் பிடித்த படமான `ஸ்லீப்பிங் ப்யூட்டி' சிறப்பு காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அமெரிக்காவின் ப்ரூக்லினில் உள்ள ஹிஸ்டாரிக் குளிட்ஜ் கார்னர் திரையரங்கில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தப் படத்தை எல்லோரும் பார்க்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்க நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரெட்டிட் வாடிக்கையாளர்கள் எனக் கணிசமான கூட்டத்தையும் அழைத்திருந்தார் லீ. இந்தப் படத்தில் தனக்கான ஆச்சர்யங்கள் நிறைந்திருக்கின்றன என்பதை அறியாமலேயே படத்தைப் பார்க்கத்தொடங்குகிறார் ஸ்டுதி டேவிட் .

காதல் ஜோடி லீ லொச்சலர் & ஸ்டுதி டேவிட்
காதல் ஜோடி லீ லொச்சலர் & ஸ்டுதி டேவிட்

அனிமேஷன் படமான 'ஸ்லீப்பிங் ப்யூட்டி' தொடங்கி எப்போதும் போல ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், முக்கியமான காட்சி ஒன்றில், அதில் வரும் கதாபாத்திரத்தின் தலைமுடிகள் மற்றும் நிறங்கள் மாறுபட்டுக் காணப்பட்டதால் ஸ்டுதி டேவிட்டை குழப்பம் தொற்றிக்கொண்டது. அதில் வரும் இரண்டு கதாபாத்திரங்களும் ஸ்டுதி மற்றும் லீ போலவே இருக்கின்றன. இதில் படத்தின்படி, இளவரசர் பிலிப்பாகத் தோன்றும் லீ லோச்சலர், அரோராவாகத் தோன்றும் ஸ்டுதி டேவிட்டிடம் திரையரங்கின் முன் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை நீட்டுகிறார். இந்தக் காட்சியுடன் அந்தப் படம் முடிவடைகிறது.

Vikatan

இந்தக் காணொளியானது கடந்த வியாழக்கிழமை அன்று இணையத்தில் வைரலானது. திரையரங்கின் அதிகாரபூர்வ இணையதளம் இந்த நிகழ்வை பற்றிக் கூறுகையில், ``காதலர் லீ லோச்லர் ஆறு மாத காலத்தில் இந்தப் படத்தின் அனிமேஷன் கதாபாத்திரங்களை மாற்றியமைத்தார். இதில் ஸ்டுதியின் விருப்பமான காட்சியான இளவரசர் பிலிப் பிரின்ஸஸ் அரோராவை முத்தமிடும் காட்சியின் மூலம்தான் தனது காதலை தெரிவிக்கப் போவதாக முடிவெடுத்தார்" என்றது.

இதைப் பற்றி லீ லோச்சலர் தெரிவிக்கையில், ``எப்போதும் உங்களது பள்ளிக்கால தோழியிடம் சரியான முறையில் காதலைச் சொல்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. அதனால் காதலைச் சொல்வதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்வதாக முடிவெடுத்தேன்" என்றார்.

இந்தக் காட்சி முடிந்ததும் காதலி ஸ்டுதியிடம் ``நான் உன்னை இதயப்பூர்வமாக நேசிக்கிறேன். அதில் எனது ventricles, articles, valves என அனைத்தும் அடங்கும்" என்கிறார். அவர் ஒரு இதயநோய் நிபுணர் அதனால்தான் இப்படிக் காதலைத் தெரிவித்தேன் என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

கடைசியாக டேவிட்டிடம், ``இனிமேல் என்னுடன் எப்போதும் சந்தோஷமாக வாழ விருப்பமா?" என லோச்சலர் கேட்கிறார். அதற்குச் சரி என்ற பதில் ஸ்டுதியிடமிருந்து வருகிறது. இதற்கு அங்கு கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரிக்க காதல் ஜோடி முத்தத்தைப் பரிமாறிக் கொள்கின்றனர். இந்த புரொபோசல் வைரலாகி வருகிறது.