Published:Updated:

மைனஸ் டிகிரி வெப்பநிலை.. அடர் பனியில் 7 கி.மீ நடைபயணம்!- காவலர் உயிரைக் காப்பாற்றிய சக காவலர்கள்

இமாசலப் பிரதேசம்
இமாசலப் பிரதேசம்

இமாசலப் பிரதேசத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட காவலரை சக காவலர்கள் அடர்ந்த பனியில் சுமந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

இமாசலப்பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதியில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு கீழே காணப்படுகிறது. ஸ்பிதி மாவட்டத்தில் வெப்பநிலை -9.2 டிகிரி செல்சியஸாக உள்ளது. ஸ்பிதி மாவட்டத்தில்தான் அதிகப்படியாக குளிர் வாட்டி வதைக்கிறது. சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. சாலைகளில் வாகனம் செல்ல முடியாததால் சுற்றுலாப் பயணிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இமாச்சல பிரதேசம்
இமாச்சல பிரதேசம்

பனியின் தாக்கம் காரணமாக 5 தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 322 சாலைகள் மூடப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் 323 மின்சார விநியோகத் திட்டங்களும் 26 நீர் வழங்கல் திட்டங்களும் தடைப்பட்டுள்ளதாக இமாசலப் பிரதேச பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இமாசலப் பிரதேசம் முழுவதும் ஆரஞ்ச் வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் லாஹெளல் - ஸ்பிதி மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட காவலரை சக காவலர்களும் கிராம மக்களும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சுமந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக சாலை முழுவதும் பனி குன்றுகளாகக் காணப்படுகிறது. ஸ்பிதி மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக அவரால் நடக்க இயலவில்லை. சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல முடிவெடுத்த சக காவலர்கள அவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து சுமந்து சென்றனர். குளிரால் அவருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போர்வையை அவரை சுற்றி சுமந்து சென்றனர். காவலருக்கு உதவி தேவைப்பட்டதை உணர்ந்த அப்பகுதி மக்கள் அவரை சுமந்து செல்ல காவலர்கள் உதவி புரிந்துள்ளனர். சுமார் 7 கிலோ மீட்டர் அவரை சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காவலரை சுமந்து சென்ற சக காவலர்களுக்கும் கிராம மக்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பின் செல்ல