Published:Updated:

`கைகள் இல்லாமல் விமானம் ஓட்டும் பெண்'- வைரல் வீடியோ பின்னணி இதுதான்!

ஜெசிகா காஸ்| Jessica Cox
ஜெசிகா காஸ்| Jessica Cox

இவர் கால்களால் விமானம் ஓட்ட முறைப்படி பைலட் லைசென்ஸ் வாங்கியவர்!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் கைகள் இல்லாத பெண் ஒருவர் விமானம் ஓட்டும் பழைய வீடியோ ஒன்று செம வைரலானது. ஃபேஸ்புக்கில் மட்டும் இந்த வீடியோவை மூன்று நாள்களில் சுமார் 17 மில்லியன் (1.7 கோடி) பேர் பார்த்திருக்கின்றனர்.

"என்னுடைய குறையை எப்போதும், ப்ளஸ்ஸாகதான் பார்க்கிறேன். எலும்பும் சதையும் சேர்ந்த கைகளுக்கே அவ்வளவு சக்தி இருக்கிறது என்றால், என்னுடைய நம்பிக்கைக்கு இன்னும் வலிமை அதிகம்" என்று நம்பிக்கை பொங்கப் பேசும் இந்த ஜெசிகா காஸ் யார்?

A woman who was born without arms has become the first licensed pilot to fly a plane with her feet ✈️

Posted by Born Different on Wednesday, December 4, 2019

அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த இந்த ஜெசிகா மரபுக் குறைபாடு காரணமாகப் பிறப்பிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால், தன்னுடைய கால்களால் விமானம் ஓட்ட பயிற்சி பெற்று, 'கால்களால் விமானம் ஓட்ட உரிமம் பெற்ற முதல் பெண் பைலட்' என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

தன்னுடைய குறையை எப்படியெல்லாம் பாசிட்டாவாக மாற்ற முடியும் எனச் சிந்தித்த ஜெஸ்சிகா, இளம் வயதிலேயே பியானோ, ஸ்குபா டைவிங், டேக்வாண்டோ எனப் பல கலைகளைக் கற்க ஆரம்பித்தார். டேக்வாண்டோவில் பிளாக் பெல்ட் சாம்பியனான ஜெஸ்சிகா, கால்களால் விமானம் ஒட்டுவதற்கு உரிமம் பெற்றது பற்றி ஊடகம் ஒன்றிடம் கூறுகையில்,

"என்னுடைய 3 வயது வரை எனக்கான எல்லா வேலைகளையும் என் அம்மாதான் செய்துவிடுவாங்க. என்னைப் பார்ப்பவர்கள் எல்லோருமே முதலில் என்னுடைய குறையைத்தான் பார்ப்பாங்க. பரிதாபமும் காட்டுவாங்க. மத்தவங்களோட பரிதாப பார்வைதான் என்னுடைய குறையாக எனக்கு தோணுச்சு. அதை உடைத்து எறியணும்னு நினைச்சேன். அதுக்காகப் போராட ஆரம்பிசேன்.

வைரல் பெண் ஜெசிகா காஸ்
வைரல் பெண் ஜெசிகா காஸ்
jessicacox.com

என்னுடைய 3 வது வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். 6 வயதில் டேப் டான்ஸ் என என் குறையை என்னுடைய திறமையால் மாற்ற முயன்றேன். மத்தவங்களோட பார்வையிலும் மாற்றங்கள் ஏற்பட்டதை உணர முடிஞ்சுது. என் குறைகளை மறந்து எல்லோரும் என் திறமைகளைப் பார்க்க ஆரம்பிச்சாங்க.

ரூ.191 கோடி, 7,000 கி.மீ பயணம்!- குஜராத் முதல்வருக்காகத் தயாராகும் சொகுசு விமானம்

என்னுடைய வேலைகளைக் கால்களால் செய்ய முயற்சி செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்கள் இருந்துச்சு. ஆனால், தொடர் பயிற்சியால் கைகளால் செய்யும் எல்லா வேலையையும், என்னால் கால்களால் வேகமாகச் செய்ய முடிந்தது. நாளடைவில் எனக்கு கைகள் இல்லை என்ற சிந்தனையே இல்லாமல் போனது. இப்போது என்னுடைய குழந்தையைக் கூட என்னால் சிறப்பாக பார்த்துக்க முடியுது. என் குழந்தைக்கு நான்தான் சாப்பாடு ஊட்டுவேன்" என்று பைலட் ஆனது எப்படி என்று தொடர்கிறார்,

ஜெசிகா காஸ்
ஜெசிகா காஸ்
jessicacox.com

"எனக்கு உயரம் என்றால் பயம். ஒரு நாள் என் அப்பாவின் நண்பரான ஃபைட்டர் பைலட் ஒருவர் என்னிடம் வந்து, 'தனியாக இன்ஜின் விமானத்தில் பறக்கக் கற்றுத்தரட்டுமா? என்றார். ஆரம்பத்தில் அவரின் அருகில் அமர்ந்து விமானத்தை எப்படி இயக்க வேண்டும் என்பதை மட்டும் கற்றுக்கொண்டேன். என்னுடைய கால்களை ஒன்றன் மீது ஒன்றாகப் பெருக்கல் குறி போன்று வைத்து விமானத்தை இயக்க ஆரம்பித்தேன். அதிகப்படியான பயிற்சிகளுக்குப் பின் 2008-ம் ஆண்டு பைலட்டுக்கான உரிமத்தைப் பெற்றேன்.

இப்போது ஒரே நாளில் மூன்று மாநிலங்கள் வரை என்னால் வேகமாகப் பறக்க முடிகிறது. கைகள் இல்லாத எனக்கு சிறகுகள் முளைச்ச மாதிரி இருக்கு. கல்லூரிகள் பள்ளிகளுக்குத் தன்னம்பிக்கை உரையாற்ற அழைக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையைச் சுயசரிதமாகவும் எழுதியிருக்கிறேன். கைகள் இல்லாத என்னுடைய இந்த வெற்றி என்னுடைய தன்னம்பிக்கையால் மட்டுமே சாத்தியமானது" என்று அவர் கூறுகிறார்.

முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு இவர் மற்றுமொரு உதாரணம். மேலும் உயர வாழ்த்துகள் ஜெசிகா!

அடுத்த கட்டுரைக்கு