Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமர்ஜித் சிங் - இந்திய அணியை வழிநடத்தும் மீன் வியாபாரியின் மகன்! #FIFAU17WC #BackTheBlue

FIFAU17WC

Chennai: 

மணிப்பூரில் குளிரைப் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டார் அந்தப் பெண். தௌபால் கிராமத்திலிருந்து வெகுதூரத்தில் இருக்கும் இம்பாலுக்குச் செல்ல வேண்டும். தினமும் 40 ரூபாய் மிச்சம் செய்ய, அவரின் கணவர் சைக்கிளிலேயே பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுகிறார். பேருந்தைப் பிடித்து சில மணி நேரத்தில் இம்பால் மார்க்கெட்டை அடைகிறார் அந்தப் பெண். மீன் வாங்கிச் சென்று அருகில் இருக்கும் வீதிகளில் அதை விற்க வேண்டும். மீன்களை நிரப்ப, நல்ல பைகள் இல்லை. தான் வைத்திருக்கும் சுமாரான பிளாஸ்டிக் பைகளில் நிரப்பிக்கொள்கிறார். அங்கே தனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் கூப்பிட்டுச் சொல்கிறார், “என் புள்ள, இந்திய கால்பந்து டீமோட கேப்டன்." அவர்தான் 17 வயதுக்குட்பட்டோருக்கான இந்தியக் கால்பந்து அணி கேப்டன் அமர்ஜித் சிங்கின் தாய். ஆம், உலகக்கோப்பை அரங்கில் இந்திய அணியை முதன்முதலாக வழிநடத்தப்போகும் அந்தச் சரித்திர நாயகன் ஒரு விவசாயிக்கும் மீன் வியாபாரிக்கும் பிறந்தவர்!

அமர்ஜித்

முதல்முறையாக இந்தியாவில் நடக்கும், இந்தியா பங்கேற்கும் இந்த உலகக்கோப்பைக்காக, இந்திய அணி தீவிரமாகத் தயாரானது. பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் சோதனை செய்யப்பட்டு, இறுதியில் 21 வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில் யாரை அணியின் தலைவராக நியமிப்பது? பயிற்சியாளர் நார்டனே அதைத் தேர்வுசெய்திருக்கலாம். ஆனால், அந்தப் பொறுப்பை தன் வீரர்களிடமே விட்டார். ஒவ்வொருவரும் ஓர் ஆளுக்கு ஓட்டு போட வேண்டும். தங்களுக்கேகூட ஓட்டு போட்டுக்கொள்ளலாம். 21 வீரர்களும் ஓட்டு போட்டு முடித்ததும், அதை எண்ணிப்பார்த்துவிட்டு அறிவிக்கிறார் நார்டன். “இந்திய உலகக்கோப்பை அணியின் முதல் கேப்டன்... அமர்ஜித் சிங் க்யாம்." இந்தியக் கால்பந்து எதிர்காலத்தின் முதல் பக்கத்தில், முதல் வரியில் அவனது பெயர் எழுதப்படுகிறது.

“நம்ப முடியவில்லை. நானே எனக்கு ஓட்டுப் போடவில்லை" என்று ஆச்சர்யப்படும் அம்ர்ஜித், அணியின் வயது குறைந்த வீரர்களில் ஒருவர். அணியில் இருக்கும் 21 வீரர்களில் அவருக்குப் பிறகு பிறந்தது கோல்கீப்பர் பிரபுஷ்கன் கில் மட்டுமே.

அமர்ஜித்துக்கு ஆதரவு குவிந்தது ஏன்?

அவரது ஆட்டமும் குணமும் அப்படி. களத்தில் அணியை ஒருங்கிணைப்பதிலும் ஆட்டத்தின் போக்கைக் கட்டுப்படுத்துவதிலும் அவர் கில்லி. இனியஸ்டாவின் ரசிகன் ஆயிற்றே. அவரைப்போலவே இவரும் மிட்ஃபீல்டர். அவரைப் பார்த்து தன்னை தினம்தினம் வளர்த்துக்கொள்பவர். பார்சிலோனா அணியின் பாஸிங் கேமுக்கு அடிமை.

கால்பந்துக்காக ஒன்பது வயதிலேயே குடும்பத்தினரைவிட்டு சண்டிகர் சென்றார் அமர்ஜித். அங்கு தன் கால்பந்து திறனை வளர்த்துக்கொண்டார். ஒரு சமயம், CHFA அணிக்கும் 16 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்குமான போட்டியில் ஹாட்ரிக் அடித்து, இந்திய அணியை 3 - 0 என்ற கோல்கணக்கில் வெற்றிகொண்டார். அவர்மீது அப்போதே பார்வை செலுத்தத் தொடங்கிவிட்டனர் இந்திய அணியின் தேர்வாளர்கள். உடனடியாக, கோவாவில் உள்ள AIFF-இன் அகாடமிக்குத் தேர்வானார். இன்று கேப்டனாக உயர்ந்திருக்கும் அமர்ஜித், அணியில் தேர்வுசெய்யப்பட்டது ரிசர்வ் பிளேயராகத்தான். அவரின் அதிரடி ஆட்டத்தால் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் கண்டு வியந்த முன்னாள் பயிற்சியாளர் நிகோலாய் ஆடம் இவரை ப்ரமோட் செய்ய, அதன் பிறகு அமர்ஜித்தின் பெர்ஃபாமன்ஸில் முன்னேற்றம் மட்டும்தான். 

CHFA அணியின் பயிற்சியாளர் ஹர்ஜிந்தர் சிங்தான், அமர்ஜித்தின் பயிற்சியாளர். அவரது முன்னேற்றங்களை உடனிருந்து கண்டவர். “அவர் மாபெரும் திறமைசாலி. எப்போதும் கூலாக இருப்பார். சண்டிகரில் அவருக்குத் தேசிய அணிக்கான செலெக்‌ஷன் இருந்தது. அப்போது என்னிடம் வந்து, `சண்டிகரில் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்களெல்லாம் இருக்கின்றன?' என்று கேட்டார். செலெக்‌ஷன் பற்றிய பயம் அவரிடம் இல்லை. சில சமயங்களில் தேர்வை மறந்து கால்பந்தில் மூழ்கிவிடுவார்" என்று அவர் ஆற்றல் கண்டு வியக்கிறார் ஹர்ஜிந்தர். 

அமர்ஜித்

“நார்டனின் பயிற்சியின் கீழ் அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. நிறைய கற்றுக்கொண்டோம். வெளிநாடுகளுக்குச் சென்று போட்டிகளில் பங்கேற்றது, அணியினரின் மனவலிமையைக் கூட்டியுள்ளது. இந்தத் தொடரில் முழுத் திறனையும் வெளிப்படுத்த விரும்புகிறோம். எங்களால் நன்றாக விளையாட முடியும். நம் அணிக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் புதிய அணியாக இருந்தாலும், எந்தப் பலமான அணியைக் கண்டும் எங்களுக்குப் பயமில்லை" என்று நம்பிக்கையுடன் கர்ஜிக்கிறார் அமர்ஜித்.

இவரின் இந்த வளர்சிக்குக் காரணம், தன் பால்யத்திலிருந்தே இந்த விளையாட்டின் மீதுகொண்டிருந்த காதல். சந்திரமணி சிங் - அசாங்பி தேவி தம்பதியின் மூன்றாவது மற்றும் கடைசிக் குழந்தை அமர்ஜித். அவருக்கு ஒரு சகோதரன், ஒரு சகோதரி. தன் மாமா இவருக்குக் கால்பந்தைக் கற்றுக்கொடுக்க, அதையே தன் கனவாக்கிக்கொண்டார். அவர் குடும்பத்தின் ஏழ்மை, ஒருநாளும் அவர் கனவுகளைப் பாதிக்கவில்லை. ஒரு நாளைக்கு 250 - 300 ரூபாய்க்கு மீன் விற்று குடும்பத்தை நடத்திவந்தார் அசாங்பி தேவி. அமர்ஜித்தின் அப்பா விவசாயி. கொஞ்சம் நிலம் இருக்கிறது. அவ்வப்போது பயிர் செய்வார்கள். பயிர் செய்யாத நேரத்தில் அவர் தச்சு வேலைக்குச் சென்றுவிடுவார். குறைந்த வருமானம். ஐந்து பேர். இருப்பினும், அந்தக் குடும்பம் நிம்மதியாக இயங்கியது.

அமர்ஜித்

இந்திய உலகக்கோப்பை அணிக்கான தேர்வு. மீண்டும் சண்டிகர் செல்ல வேண்டும். செலவாகும். தான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த 6,000 ரூபாயை யோசிக்காமல் எடுத்து நீட்டுகிறார் அசாங்பி. 6,000 ரூபாய் இன்று சிறிய தொகையாகத் தெரியலாம். இந்தியா புதியதாக இருந்தாலும், ஏழ்மையும் வறுமையும் பழையதுதானே! அவர்களுக்கு அந்தத் தொகை பெரியதுதான். அந்தப் பணம்தான், அவரை சண்டிகர் செல்லவைத்தது; இந்திய அணிக்குத் தேர்வுசெய்தது; கேப்டன் ஆக்கியது; ஐரோப்பிய கண்டம் வரை அவர் அழைத்துச் சென்றது.

பயிற்சிப் போட்டிக்கு ஸ்பெயின் சென்றது அமர்ஜித்துக்கு மாபெரும் சந்தோஷம். தான் நேசிக்கும் பார்சிலோனா அணியின் பேருந்துக்கு முன்னாள் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார். அவர் ஹேப்பி! அம்மாவுக்கு? பரிசுகள் வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. இருக்கும் குறைந்த பணத்தில் அம்மாவுக்கு என்ன வாங்கலாம்? அம்மாவிடம் நல்ல பை இல்லை. அதை வாங்குவோம். மீன் விற்கவே பிளாஸ்டிக் பைகள்தானே எடுத்துச் செல்கிறார். தன் அம்மாவுக்கு ஒரு பை வாங்கிச் சென்றார். தான் இந்திய அணியை டெல்லி நேரு மைதானத்தில் வழிநடுத்துவதைப் பார்க்க வர வேண்டும் என்று அம்மாவுக்குச் செல்லக் கட்டளை. தன் மகன் சரித்திரம் படைக்கப்போகும் அந்தக் காட்சியைக் கண்டு பூரிக்கக் கிளம்பிவிட்டார் அந்தத் தாய், அவர் வாங்கிக் கொடுத்த பையை எடுத்துக்கொண்டு. அந்தத் தாய் சுமந்து செல்லும் பையை நிரப்பியிருப்பது, பணமோ, பண்டமோ அல்ல... தன் மகன் சேர்த்துக் கொடுத்த பெருமை!

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement