காப்பாற்ற வேண்டியது கால்பந்தை மட்டுமல்ல, படைச்சிறுத்தைகளையும்தான்! #Kheleo #BackTheBlue #FIFAU17WC | Under threat clouded leopard is the mascot for u-17 football world cup

வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (04/10/2017)

கடைசி தொடர்பு:10:28 (04/10/2017)

காப்பாற்ற வேண்டியது கால்பந்தை மட்டுமல்ல, படைச்சிறுத்தைகளையும்தான்! #Kheleo #BackTheBlue #FIFAU17WC

மாஸ்காட் - ஒரு மாபெரும் போட்டித் தொடரின் சிறப்பம்சம். அது, போட்டியை நடத்தும் நாட்டின் அடையாளம். ஒவ்வொரு நாடும், தங்கள் நாட்டின் அடையாளமாகக் கருதப்படும் விலங்குகளில் ஒன்றை மாஸ்காட்டாகத் தேர்வுசெய்யும். 2011-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை நடத்திய இந்தியா, வங்கதேசம் மற்றும் இலங்கை ‘ஸ்டம்பி’ எனப் பெயரிடப்பட்ட யானையைத் தேர்வுசெய்தன. 2014-ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பைக்கு ‘ஃபுலேகா' என்ற எறும்புத்திண்ணியை மாஸ்காட்டாக்கியது பிரேசில். இந்நிலையில், இந்தியாவில் நடக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக்கு மாஸ்காட்டாக, படைச்சிறுத்தை (clouded leopard) தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

படைச்சிறுத்தை

17 வயதுக்குட்பட்ட கால்பந்து உலகக்கோப்பையை நடத்தும் உரிமையைப் பெற்ற இந்தியா, கடந்த பிப்ரவரி மாதம் இந்த உலகக்கோப்பை தொடருக்கான மாஸ்காட்டை அறிமுகம் செய்தது. ‘கெலோ’ (kheleo) எனப் பெயரிடப்பட்ட படைச்சிறுத்தையை, அன்றைய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலும், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் பட்டேலும் இணைந்து அறிமுகம்செய்தனர். பலருக்கும் ஆச்சர்யம். `தேசிய விலங்கான புலியைத் தேர்வுசெய்யாமல், படைச்சிறுத்தையைத் தேர்வுசெய்தது ஏன்?' என்ற கேள்வி எழாமல் இல்லை.

படைச்சிறுத்தை

படைச்சிறுத்தை - சாதாரண சிறுத்தையிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது. உடலில் கருமையான வட்டப்பட்டைகளும் பட்டைகளுக்கு இடையே மங்கலான இடைவெளியும் இருப்பதால், இது இப்பெயர் பெற்றது. அதன் கால்கள் சற்று வளர்ச்சி குறைந்து காணப்படும். வால்கள் மிகவும் நீளமாகவும் பற்கள் மிகக் கூர்மையாகவும் இருக்கும். முகத்தில் பட்டைகளுக்கு நடுவே புள்ளிகளும் இருக்கும். பூனைக் குடும்பத்தில் மரம் ஏறுவதில் படைச்சிறுத்தைகளுக்கு ஈடுஇணை ஏதுமில்லை.

சரி, படைச்சிறுத்தையை ஏன் மாஸ்காட்டாகத் தேர்வுசெய்தார்கள்?

கடந்த 2008-ம் ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம், அழிய வாய்ப்புள்ள இனங்களின் பட்டியலில் படைச்சிறுத்தையையும் சேர்த்தது. இன்றளவில் உலகில் 10,000-க்கும் குறைவான படைச்சிறுத்தைகளே வாழ்கின்றன. இமயமலைப் பகுதியிலிருந்து நேபாளம், பூடான், தாய்லாந்து, சீனா வரையில் இவற்றின் வாழ்விடங்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் அசாம், மேற்குவங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் இவை வாழ்கின்றன. 1860-ம் ஆண்டு வாக்கில் அழிந்துவிட்ட இனமாகவே இவை கருதப்பட்டன. சுமார் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, நேபாளத்தில் சில படைச்சிறுத்தைகள் அடையாளம் காணப்பட்டன.

படைச்சிறுத்தை

மாஸ்காட்கள் வெறும் விளம்பரத்துக்காகவும் பெருமைகளை எடுத்துரைப்பதற்காகவும் மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அவற்றால் மக்களிடையே ஒரு விஷயத்தைக் கொண்டு சேர்க்கவும் முடியும். கால்பந்தின் மூலம், அந்த இனத்தைக் காப்பாற்ற மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதான் படைச்சிறுத்தை மாஸ்காட்டாகத் தேர்வுசெய்யப்படக் காரணம். மாஸ்காட்டாக இந்த விலங்கு தேர்வுசெய்யப்படாமல் இருந்திருந்தால், இப்படியோர் இனம் இருப்பதே பலருக்கும் தெரியாமல்போயிருக்கும்.

இந்த அண்டர்-17 உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படும் பந்துக்கு `கிரசாவா' (Krasava) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரஷ்ய மொழியில் அது `அற்புதமான செயல்பாட்டை'க் குறிக்கும். ரஷ்ய ரூபியைக் குறிக்கும் வகையில் இந்தப் பந்து சிவப்பு நிறப் பட்டைகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிடாஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பந்து, அந்த நிறுவனத்தின் கடைகளில் கிடைக்கும். அதன் விலை 1,799 முதல் 2,499 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து

கால்பந்து, வெறும் விளையாட்டு மட்டுமல்ல; பல வகைகளில் சமூக மாற்றங்களையும் நிகழ்த்தியுள்ளது. பல தருணங்களில் மக்களை விழிக்கச் செய்திருக்கிறது. இந்தியாவில் இது முதல் அடி. நாம் காப்பாற்றவேண்டியது இந்திய கால்பந்தை மட்டுமல்ல, இந்தப் படைச்சிறுத்தைகளையும்தான்.


டிரெண்டிங் @ விகடன்