Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லூயிஸ் நார்டன் எனும் இந்திய அணியின் அச்சாணி! #BackTheBlue #FIFAU17WC

Chennai: 

ஆரம்பிக்கப்போகிறது 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை. இந்தியாவில் நடக்கும் இந்தத் தொடரில் பிரேசில், சிலி, கொலம்பியா, அமெரிக்கா உள்ளிட்ட  உலகின் முக்கியமான 23 நாடுகள் கலந்துகொள்கின்றன. அவர்களோடு களமிறங்குகிறது இந்தியா! ஒரு வண்டிக்கு அச்சாணி எவ்வளவு முக்கியமோ, அப்படித்தான் விளையாட்டு அணிகளுக்குப் பயிற்சியாளர். அதிலும் கால்பந்து என வந்துவிட்டால், போட்டிக்கு முன்னர் அளிக்கும் பயிற்சிகளைப்போலவே போட்டியின்போதும் களத்தில் நின்று வீரர்களுக்கு ஆலோசனைகள் அளிப்பதும், அவர்களை ஊக்கப்படுத்துவதும் அவசியம். அப்படி நம் இந்திய அணியின் அச்சாணியாக விளங்கும்  பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் பற்றிய பதிவு இது.

FIFAU17WC

கால்பந்து வீரராக...

தற்போது 63 வயதாகும் லூயிஸ், போர்ச்சுக்கல் நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர். தன் கால்பந்து வாழ்க்கையை ஸ்ட்ரைக்கராகத் தொடங்கியவர். 28 வருடங்களுக்கும் மேலாக பயிற்சியாளர் அனுபவம்கொண்டவர். லிஸ்பன் நகரின் லோக்கல் க்ளப்பான `பென்ஃபிகா'வின் யூத் டீமில்  இணைந்த லூயிஸ், ஃபார்வேர்டு பொசிஷனில் ஆட ஆரம்பித்தார். 1972-74 வரை பென்ஃபிகா சீனியர் டீமில் இவர் பெயர் மட்டும் இருந்ததே தவிர, விளையாட வாய்ப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. அடுத்து போர்ச்சுக்கல் நாட்டில் இருக்கும் எஸ்டொரில், அத்லெடிகோ எனப் பல க்ளப்புகளில் சேர்ந்தார். ஆனாலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. அடுத்து பெல்ஜிய  க்ளப்பான ஸ்டாண்டர்டு லீஜ் அணியில் சேர்ந்தார். மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் போர்ச்சுக்கலுக்கே திரும்பி போர்ச்சிமோனென்ஸ் க்ளப்பில் ஒப்பந்தமானார். கடைசியாக, பெலனென்ஸெஸ் அணியிலும் எஸ்ட்ரெலா அமடோரா அணியிலும் தலா இரண்டு சீஸன்களைக் கழித்த பிறகு, தன் 33-வது வயதில் ஓய்வை அறிவித்தார். போர்ச்சுக்கல் நாட்டின் வித்தியாசமான ஐந்து க்ளப்புகளுக்காக 210 போட்டிகளில் விளையாடிய லூயிஸ், 36 கோல்கள் அடித்துள்ளார். போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக வெறும் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள லூயிஸ், தன் பெயரில் ஒரு கோலை மட்டுமே பதிவுசெய்திருக்கிறார்.

FIFAU17WC

பயிற்சியாளராக...
வீரராக இருந்ததைக்காட்டிலும் பயிற்சியாளராகத்தான் அதிக ஏற்றங்களைச் சந்தித்துள்ளார் லூயிஸ். 1989-ம் ஆண்டு போர்ச்சுக்கல் இரண்டாம் டிவிஷனில் தன் முன்னாள் அணியான அத்லெடிகோ அணியின் பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார் லூயிஸ். பிறகு, சில க்ளப்புகளுக்கு மாறிமாறி பயிற்சியளித்த லூயிஸ், 2005-ம் ஆண்டு  விட்டோரியா டி செட்யூபல் க்ளப்புக்குப் பயிற்சியாளராக அமர்த்தப்பட்டார். அந்த அணியை 15 ஆட்டங்களில் ஒன்பது முறை வெற்றி பெறவைத்தார். அத்துடன் அவரின் பயிற்சியின்கீழ் விளையாடிய விட்டோரியா அணி வெறும் நான்கு கோல்களை மட்டுமே எதிரணிகளுக்கு விட்டுக்கொடுத்தது. அந்த சீஸனில் ஐரோப்பிய கால்பந்தில் அது ஒரு சாதனையாகக் கருதப்பட்டது. அந்தப் புள்ளிதான் அதுவரை டல்லடித்த அவர் கரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக மாறியது. விட்டோரியா க்ளப்பை லூயிஸ் ஊரெங்கும் பிரபலப்படுத்தினாலும், அந்த அணியின் பொருளாதார நெருக்கடியால் வேறு வழியின்றி  தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், ஆச்சர்யமாக  லூயிஸைத் தேடி வந்தது ஸ்போர்டிங் க்ளப்பின் இயக்குநர் ஆகும் வாய்ப்பு. அதைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட லூயிஸ், 2008-ம் ஆண்டு கினியா பிசோ தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராகத் தேர்வானார். அடுத்தடுத்த வருடங்களில் `பெனிஃபிகா பி' மற்றும் உனையோ டமெய்ரா போன்ற அணிகளுக்குப் பயிற்சியளித்தார்.


இந்திய அணிக்குள்...

2017-ம் ஆண்டு சமீபத்தில் ருவாண்டா தேசிய கால்பந்து அணிக்குப் பயிற்சியளிக்க ஆசைப்பட்ட லூயிஸ், தன் விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார். அதே நேரத்தில் கடந்த ஜனவரியில் இந்திய அண்டர் 17 கால்பந்து அணியின் பயிற்சியாளரான ஜெர்மனியைச் சேர்ந்த நிக்கோலாய் ஆடம் இந்திய கால்பந்து கூட்டமைப்பால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். எனவே, இங்கும் ஒரு விண்ணப்பத்தைப் போட்டுவைத்தார் லூயிஸ். `அடுத்து யார்?' எனக் கேள்வி எழுந்தபோது, இந்திய கால்பந்து கூட்டமைப்பால் கைகாட்டப்பட்டார். விண்ணப்பித்திருந்த 71 பேரில் லூயிஸ் பெயரைத்தான் `நம்பர் ஒன் சாய்ஸ்' என டிக் அடித்தனர்.

கால்பந்து

முதலில் இந்திய வீரர்களைப் பார்த்துப் பார்த்து தேர்வுசெய்தார். பிறகு தேர்வுசெய்த வீரர்களை கடின பயிற்சிகளுக்கு உட்படுத்தினார். முக்கியமாக, கோடிகளைக் கொட்டி இந்திய வீரர்களை கடந்த சில மாதங்களாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்று பல வெளிநாட்டு அணிகளோடு அவர்களை மோதவிட்டு, பேருக்கு மட்டுமே இருந்திருக்கவேண்டிய பயிற்சி ஆட்டங்களை, உண்மையிலேயே கடினமான பயிற்சிகள் நிறைந்த ஆட்டங்களாக மாற்றினார். தான் முன்னர் பயிற்சியளித்த அணிகள் மற்றும் தான் முன்னர் விளையாடிய க்ளப்புகள் எனப் பல அணிகளோடு நம் இந்திய வீரர்களை மல்லுக்கட்டவிட்டு அவர்களின் பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றினார். அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்திய அணி விட்டோரியா டி செட்யூபல், பெனிஃபிகா, எஸ்டோரில் மற்றும் ஸ்போர்டிங் போன்ற க்ளப்களின் அண்டர் 17 அணிகளோடு போட்டியிட்டது. தோல்வியுடன் பயனுள்ள அனுபவங்களையும் கற்றுக்கொண்டது. 

பலே முன்னேற்றங்கள்!

`லேசியோ கோப்பை' தொடரில் கலந்துகொண்ட இந்திய அணி, அங்கு முதல் இரண்டு ஆட்டங்களில் டிரா செய்தாலும் கடைசி ஆட்டத்தில் வால்மோண்டோன் சிட்டி அணியை வீழ்த்தியது. பிறகு ஜூன் மாதத்தில் செர்பியா, மாசிடோனியா, அல்கார்கான் ஆகிய நாடுகளுடனும் ஆகஸ்ட் மாதத்தில் மெக்ஸிகோ, கொலம்பியா மற்றும் சிலி போன்ற நாடுகளின் அண்டர் 17 அணிகளுடனும் மோதி, கிடைத்த தோல்விகளிலிருந்து மீண்டும் அனுபவம் பயின்றது இந்தியா. கடைசியாக, சென்ற மாதத்தில் விளையாடிய மூன்று பயிற்சிப் போட்டிகளில் இந்தியா அண்டர் 19 மற்றும் மொரீஸியஸ் அண்டர் 17 அணிகளுக்கு எதிராக இந்திய அணி பெற்ற வெற்றி, நம் வீரர்களின் நம்பிக்கையை பல மடங்கு அதிகரித்துள்ளது.

நார்டன்

பதவியேற்ற சில மாதங்களிலேயே இவ்வளவு வேகமாக ஒரு கத்துக்குட்டி அணியை உலகின் வலிமையான அணிகளோடு மோதும் அளவுக்குப் பயிற்றுவித்திருக்கிறார் நார்டன். வீரர்கள் தேர்விலிருந்து எதிர் அணிக்கான வியூகங்கள் வரை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்திருக்கும் லூயிஸ், வெறும் ஏழே மாதங்களில் தன் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இதுவரை உள்ளூரில் மட்டுமே பயிற்சிகளை மேற்கொண்ட இந்திய அணியை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பல்வேறு வகையான அணிகளோடு மோதவைத்து, உலகின் சிறந்த நாடுகள் பங்குபெறவுள்ள  ஓர் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடும் அளவுக்கு போதிய அனுபவம் பெறவைத்த லூயிஸ், உண்மையிலேயே இந்திய அணியின் அச்சாணியாகவே விளங்குகிறார் எனச் சொன்னால், அது மிகையாகாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement