வெளியிடப்பட்ட நேரம்: 15:04 (06/10/2017)

கடைசி தொடர்பு:08:05 (10/10/2017)

உலகக் கோப்பை பார்க்க 5,000 மாணவர்களுக்கு இலவச அனுமதி..! #BackTheBlue #FIFAU17WC

இந்தியாவில் நடக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டி, நம் நாட்டில் கால்பந்தைப் பிரபலப்படுத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு. கால்பந்து விளையாடும் சிறுவர்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கும் இந்தப் போட்டி மாபெரும் நம்பிக்கை. இந்தப் போட்டியை, இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மேற்குவங்க அரசு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இலவசமாக உலகக்கோப்பை போட்டிகளைப் பார்க்க ஏற்பாடுகளை செய்துவருகிறது.

உலகக் கோப்பை

FIFA U-17 உலகக்கோப்பை போட்டிகளில் இறுதிப்போட்டி உள்பட பத்து போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள `சால்ட் லேக்’ மைதானத்தில் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளைக் காண்பதற்கு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்க முடிவுசெய்துள்ளது மேற்குவங்க அரசு. இந்த மாநில கல்வித் துறையின் உயர் அதிகாரி ஒருவர், ``ஒவ்வொரு போட்டியையும் காண, ஏறத்தாழ 5,000 மாணவர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்தப் பத்து போட்டிகளில் அக்டோபர் 28-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியும் அடங்கும். அதற்கான அனுமதிச் சீட்டுகள் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் எனக் கலந்து, இங்கு நடக்கும் பத்து போட்டிகளுக்கும் தலா 5,000 ரூபாய் வழங்கப்படும்.

எனினும், கால்பந்து மற்றும் மற்ற போட்டிகளில் விளையாடும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மொத்தம் உள்ள 5,000 அனுமதிச் சீட்டுகளில், 2,000 பள்ளி மாணவர்களுக்கும், 2,000 கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்படும். பாலிடெக்னிக் மாணவர்கள் மற்றும் மெட்ராசேஸ் மாணவர்களுக்கு தலா 500 வழங்கப்படும்.

உலகக் கோப்பை

சால்ட் லேக் மைதானத்தில் இந்த மாணவர்கள் அமர்வதற்கென தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளைக் காண விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலை முன்கூட்டியே கொடுக்குமாறு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேற்குவங்க விளையாட்டு ஆணையம் இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதோடு, விளையாட்டில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களைக்கொண்டு இறுதிப் பட்டியலை தயாரிக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள மாணவர்களே, போட்டிகளைக் காண்பதற்கு அனுமதிக்கப்படுவர்.

மாணவர்களை பள்ளியிலிருந்து சால்ட் லேக் மைதானத்துக்கு அழைத்துச் சென்று வர, 70 பேருந்துகள் அனுப்புமாறு போக்குவரத்துத் துறையிடம் கேட்டுள்ளோம். மைதானத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் மாணவர்கள் இங்கே வந்து போட்டிகளைக் காண்பது மிகவும் கடினம். எனவேதான் அவர்கள் பாதுகாப்பாக இங்கே வந்து செல்லுவதற்கும், உணவு மற்றும் தங்குமிடம் போன்றவை இலவசமாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.

உலகக் கோப்பை

“மிகப்பெரிய ஒரு விளையாட்டுத் திருவிழா நம் ஊரில் நடக்கும்போது, வெளிநாட்டு வீரர்கள் விளையாடும் விதத்தையும், உயர் தரமான விளையாட்டு நடைபெறும் விதத்தையும் மாணவர்களுக்குக் காண்பிக்கவேண்டியது நம் கடமை. இதுபோன்ற விளையாட்டுகளை மிக அருகில் பார்க்கும்போது சிறந்த கால்பந்தாட்ட வீரராகும் கனவுகள் அதிகரிக்கும். இது அவர்களுக்கு ஒரு சிறந்த உத்வேகத்தை தரும்” என்றும் அவர் கூறினார்.

கால்பந்து உலகின் மிகப்பெரிய போட்டித்தொடர் நம் நாட்டில் நடக்கும்போது, அதை நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், அதை எல்லா வழிகளிலும் வெற்றி பெறவைக்க வேண்டுமென்று நினைத்திருக்கும் மேற்குவங்க அரசின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கால்பந்து விளையாடும் பல்லாயிரம் சிறுவர் சிறுமியருக்கும் இந்தத் தொடர் சென்றடைவதே இதன் உண்மையான வெற்றி. அந்த வெற்றியை அடைய, மேற்குவங்கத்தை மற்ற மாநிலங்களிலும் பின்பற்றலாம்!


டிரெண்டிங் @ விகடன்