டெல்லி ரசிகர்கள் மூலம் சர்வதேச கால்பந்து உலகுக்கு இந்தியாவின் செய்தி!  #BackTheBlue #FIFAU17WC

"இந்தியாவில் கால்பந்து எனும் மிருகம் உறங்கிக் கொண்டிருக்கிறது’’ என்றார், சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) முன்னாள் தலைவர் செப் பிளேட்டர். அந்த மிருகம் இப்போது விழித்துவிட்டது. ஆம், FIFA நடத்தும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை முதன்முறையாக இந்தியாவில் நடக்கிறது. அதுவும் ஜோராக... டெல்லியில் நேற்று நடந்த போட்டிகளைக் காண, நேரு மைதானத்தை முற்றுகையிட்ட 46,321 ரசிகர்களே அதற்குச் சான்று.

Back The Blue

டெல்லி கலாசார நகரம். ஆனால், கால்பந்து கலாசாரம் நிறைந்த நகரம் அல்ல. இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும். ஆனால், டெல்லியில்தான் ரசிகர்களின் வரத்து குறைவாக இருக்கும். ஒருபோதும் அங்கு அரங்கம் நிறைந்ததில்லை. ஆனால், நேற்று டெல்லி ஜவஹர் லால் நேரு மைதானத்தில் காலி இருக்கைகளே இல்லை. கால்பந்து காலசாரம் இல்லை என்பதற்காக, உலகக் கோப்பைப் போட்டிகளைக் காலி இருக்கைகளில் நடக்க அனுமதிக்க மாட்டோம் என, மைதானத்துக்குப் படையெடுத்துவிட்டனர் டெல்லி ரசிகர்கள். அவர்கள் இந்தியக் கால்பந்து வரலாற்றில் தங்கள் இருப்பை அழுந்தப் பதிவுசெய்து விட்டனர்.

ஒரு கால்பந்து போட்டியைப் பார்க்க 50,000 பேர் திரள்வதெல்லாம் ஐரோப்பாவில் பெரிய விஷயமில்லை. ஆனால், இந்தியாவில் அது பெரிய விஷயம். அதுவும் டெல்லியில் பெரிய விஷயம். ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்து, "17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டிகளின் அற்புதமான தருணங்களில் இதுவும் ஒன்று’’ என மெய்சிலிர்த்தார், அமெரிக்க அணியின் பயிற்சியாளர் ஜான் ஹேக்வொர்த்.  "ஓய்வு அறையிலிருந்து முதன்முறையாக மைதானத்துக்குள் அடியெடுத்து வைக்கிறேன். என் கண் முன் 40 ஆயிரம் ரசிகர்கள். இதற்கு முன் இத்தனை பேருக்கு முன் விளையாடியதே இல்லை’’ எனப் போட்டி முடிந்த பின் பேட்டியளித்தார் அமெரிக்க வீரர் கிறிஸ் டர்கின். இவர், முதல் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்தவர்களில் முக்கியமானவர். அமெரிக்கா அடித்த மூன்று கோல்களில் ஒன்று இவர் அடித்தது.

Back The Blue

விளையாட்டில் வெற்றி தோல்வி இயல்பு. முதன்முறையாக இந்தப் பாலகர்கள் பெரிய சர்வதேசப் போட்டியில் விளையாடுகின்றனர். அதுவும் உலகக் கோப்பை. பதற்றம் இருக்கத்தான் செய்யும். எடுத்த எடுப்பிலேயே அவர்களை விமர்சிக்கக் கூடாது. ரிசல்ட் என்னவாக இருந்தாலும் அவர்களை ஆதரிப்பது (BackTheBlue) நம் கடமை. டெல்லி ரசிகர்கள் அதைச் சரியாகச் செய்திருந்தனர்.  "Of course... இந்தியா இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். அமெரிக்கா வலுவான அணியாக இருக்கலாம். அதற்காக இந்திய இளம் படையும் சோடை போகவில்லை. அவர்களை ஆதரிக்க வேண்டியது நம் கடமை. முதன்முறையாக அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள். அதை மைதானத்தில் சென்று பார்க்காமல் இருக்க முடியுமா?’’ எனக் கேள்வி எழுப்பினார்  JLN மெட்ரோ ஸ்டேஷனில் தன் நண்பர்களுக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவர் ஒருவர்.

Back The Blue

டெல்லி ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியக் கால்பந்து ரசிகர்களும், இந்த வாய்ப்பை மிஸ் செய்யவில்லை. முதல் போட்டி தொடங்குவதற்கு முன், #BackTheBlue, #FIFAU17WC என்ற Hashtag-களில் சோசியல் மீடியாவில் உலகக் கோப்பையைப் ப்ரொமோட் செய்யக் கிளம்பிவிட்டனர். சச்சின் முதல் விராட் கோலி வரை, விளையாட்டு வீரர்கள் முதல் நடிகர்கள் வரை எல்லோரும் ட்விட்டரில் இந்திய அணியை ஆதரித்து வீடியோக்கள் வெளியிட்டனர். மைதானத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு. கன்னத்தில் இந்திய தேசியக் கொடியின் சாயம். கைகளில் பதாகைகள். எங்கெங்கும் ஊதா நிற டீ சர்ட்கள் என அமர்க்களமாக இருந்தது டெல்லி நேரு மைதானம். சுனில் சேத்ரி உள்ளிட்ட ஜாம்பவான்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டி, போட்டியைத் தொடங்கி வைத்த அடுத்த நிமிடத்திலிருந்து தொடங்கி விட்டது இந்தியாவில் கால்பந்து ஜுரம்.

டெல்லியிலேயே மைதானம் நிரம்பியபோது கொச்சியில் சொல்லவா வேண்டும்? மூன்று நாள்களுக்கு முன்பிருந்தே கொச்சிக்குப் படையெடுத்துவிட்டனர் கால்பந்து ரசிகர்கள். கடவுளின் தேசம் கால்பந்தையும் கொண்டாடும் தேசம் என்பது கொச்சி மெட்ரோ ரயில் ஸ்டேஷன் எங்கும் நிறைந்திருந்த உலகக் கோப்பை படங்களில் எதிரொலித்தது. டெல்லியில் அப்படி இல்லை. மைதானத்தை நெருங்கும் வரையிலும் உலகக் கோப்பை குறித்த பெரிய விளம்பரங்கள் எதுவும் இல்லை. ஆனால், கொச்சியில் எங்கெங்கும் கட் அவுட்கள். பிளெக்ஸ்கள். மலையாளிகள், பிரேசிலில் உலகக் கோப்பை நடந்தபோதே இங்கு கொண்டாடியவர்கள். சொந்த மண்ணிலேயே உலகக் கோப்பை எனும்போது, விடுவார்களா என்ன? 

கொச்சியில் இப்படி எனில் கொல்கத்தா, கோவா, கவுகாத்தி பற்றி எல்லாம் சொல்ல வேண்டியதே இல்லை. இப்போதே அங்கு எல்லாப் போட்டிகளுக்குமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. கொல்கத்தா அரசு, கால்பந்தைப் பிரபலப்படுத்துவதற்காக 5,000 மாணவர்களுக்கு இலவச டிக்கெட் கொடுத்து, போக்குவரத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டது. கோவா டூரிஸ்ட் ஸ்பாட் என்பதால் களை கட்டும். சந்தோஷ் டிராபி நடந்தாலே ஒட்டுமொத்த வடகிழக்கு மாநில மக்களும் கவுகாத்தியில் ஒன்றுகூடி விடுவர். நடப்பது உலகக் கோப்பை. விடுவார்களா?

Back The Blue

எது எப்படியோ, கால்பந்தைப் பார்க்க நேற்று டெல்லியில் கூடிய கூட்டம், இன்று கொச்சியில் இருக்கும் பட்டாளம், நாளை கவுகாத்தி, கொல்கத்தாவில் கூடப்போகும் கூட்டம், சர்வதேச கால்பந்து உலகத்துக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விட்டது... FIFA போட்டிகளை நடத்த இந்தியா ஏற்ற நாடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!