வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (12/10/2017)

கடைசி தொடர்பு:18:31 (12/10/2017)

இந்திய வீரர்களின் ஆட்டிட்யூட் சேஞ்ச்... காரணம் யார்? #BackTheBlue #FIFAU17WC

2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில், இந்திய அணி ஒற்றை வெண்கலப் பதக்கத்துடன் திரும்பியது. அப்போதைய ராணுவத் தலைமை அதிகாரி எஸ்.பத்மநாபன் சொன்னார், ``நம்மால் விளையாட்டில் வெல்ல முடியவில்லை எனில், போரிலும் வெல்ல முடியாது." அவரது  இந்த எண்ணமே `ராணுவ விளையாட்டு நிறுவனம்' என்ற அமைப்பைத் தொடங்க காரணமாக அமைந்தது. அவரது இந்த வார்த்தை,  புனேவில் பற்களைச் சீரமைக்கும் நிபுணராக இருந்த மருத்துவர் ஸ்வரூப் சாவனுரையும் உலுக்கியது. அன்றே முடிவு செய்தார், இந்திய அணிக்காக எதாவது செய்ய வேண்டும். அதுவும் தனக்குப் பிடித்த கால்பந்துடன் தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும். உடனே இந்திய கால்பந்து கூட்டமைப்பை அணுகினார். இதோ, இன்று உலகக் கோப்பையில் (அண்டர் 17) பங்கேற்கும் இந்திய அணிக்கு அவர்தான் மனநல ஆலோசகர்.

கால்பந்து

உலகக்கோப்பை சொந்த மண்ணில் நடப்பதால், வீரர்களுக்கு நெருக்கடி இருக்கும். மனரீதியாக அழுத்தத்தில் இருப்பார்கள் என்பது ஸ்வரூப்புக்குப் புரிந்திருந்தது. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அது வெளிப்படையாகத் தெரிந்தது. இதுபோன்ற தருணங்களில்தான் மனநல ஆலோசகர்களின் முக்கியத்துவம் புரிகிறது. 

கால்பந்து

 இந்தியா விளையாடிய முதலிரண்டு போட்டிகளை நுணுக்கமாக அலசினாலே வீரர்களிடத்தில் ஏற்பட்டிருக்கும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது புரியும்; சாவனூரின் தேவை புலப்படும். சாவனூர் சொன்னதுபோலவே, முதல் போட்டியின் ஆரம்பத்தில், வீரர்கள் ஒருவித நெருக்கடியில் இருப்பது தெரிந்தது. பதற்றத்தில் சில தவறுகள் செய்தனர். நேரம் செல்லச் செல்ல அதைச் சரிசெய்துகொண்டனர். அவர்களால் அழுத்தமின்றி விளையாட முடிந்தது. ஆனாலும் சில வீரர்கள் அடிக்கடி `எமோஷனல்' ஆகத்தான் செய்தனர்.

மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அணியின் கோல்கீப்பர் தீரஜ், பலமுறை கோபப்பட்டு நம் அணி வீரர்களையே திட்டினார்.  அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 எனப் பின்தங்கியிருந்தது இந்தியா. ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் அமெரிக்காவுக்கு கார்னர் வாய்ப்புக் கிடைத்தது. கிறிஸ் டர்கின் கோல் நோக்கி அடித்த பந்து, அன்வர் அலியின் காலில் பட்டு கோலானது. அன்வர் கொஞ்சம் முயன்றிருந்தால் அந்த கோல் வாய்ப்பைத் தடுத்திருக்கலாம். அதனால் மனமுடைந்த தீரஜ், தன் கோபத்தை அன்வரிடம் கொட்டினார். இதுபோன்ற சம்பவங்கள் அணியின் கெமிஸ்ட்ரியைப் பாதித்துவிடும். 

ஆனால், கொலம்பியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில், வீர்ர்களின் மனநிலையில், அணுகுமுறையில் ஏகப்பட்ட மாற்றங்கள். முதல் நிமிடத்திலிருந்தே பாசிட்டிவ் `மைண்ட் செட்'டோடு ஆடினர். சக வீரர்களை நன்றாக ஊக்கப்படுத்தினர்; பாராட்டினர். தீரஜ்ஜின் அணுகுமுறையும் முற்றிலும் மாறியிருந்தது. முதல் போட்டியைப்போல் அல்லாமல், மிகவும் கூலாக, அதேநேரத்தில் இன்னும் சிறப்பாக விளையாடினார். இந்த மனநிலை மாற்றம்தான், இந்திய அணிக்கு உலகக்கோப்பை அரங்கில் முதல் கோலைப் பெற்றுத் தந்துள்ளது. வீரர்கள் இன்னும் திடமாகும் பட்சத்தில், இன்று நடக்கவுள்ள போட்டியில் கானா அணிக்கு கடும் சவால் அளிக்கலாம்.

ஒரு விளையாட்டு அணியைப் பொறுத்தவரை, பயிற்சியாளர் இருந்தால் மட்டும் போதாது. மனநல ஆலோசகர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள், நியூட்ரிஷியன், பிசியோ எனப் பலரும் ஓர் அணிக்குத் தேவை. ஒவ்வொருவரின் பங்களிப்பும் வீரர்களுக்கும் அணிக்கும் மிக முக்கியம். மருத்துவர் சாவனூர் சிறந்த முறையில் தன் பங்களிப்பை அணிக்குக் கொடுத்துள்ளார். அதன் விளைவு கண்கூடாகத் தெரிகிறது. இந்திய அணியை அவர் சிறந்த முறையில் இந்த உலகக்கோப்பையை எதிர்கொள்ளத் தயார்படுத்தியுள்ளார்.

இந்தியா, போருக்குத் தயார்! 


டிரெண்டிங் @ விகடன்