பிரேசிலின் ஹோம் கிரவுண்டான கொச்சி... அடிபொலி ரெஸ்பான்ஸ்! #FIFAU17WC #FootballTakesOver | Kochi fans support Brazil football team

வெளியிடப்பட்ட நேரம்: 19:13 (19/10/2017)

கடைசி தொடர்பு:19:13 (19/10/2017)

பிரேசிலின் ஹோம் கிரவுண்டான கொச்சி... அடிபொலி ரெஸ்பான்ஸ்! #FIFAU17WC #FootballTakesOver

கேரளா, கடவுளின் தேசம் மட்டுமல்ல, கால்பந்தின் தேசமும்கூட. ஐ.எஸ்.எல் தொடரின் ஒவ்வொரு போட்டியின்போதும் 60,000 இருக்கைகள் கொண்ட கொச்சி ஜவஹர் லால் நேரு மைதானம் மஞ்சள் மயமாகக் காட்சியளிக்கும். இதோ, அதே மஞ்சள் ஜெர்ஸியுடன் தற்போது கொச்சியில் நடந்துவரும் உலகக் கோப்பையிலும் (FIFAU17WC) மைதானத்தை நிறைக்கின்றனர் கேரள ரசிகர்கள். இந்தியா, உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய பின், கொச்சி ரசிகர்கள் ஏகமனதாக பிரேசிலை ஆதரிக்க முடிவுசெய்துவிட்டனர். பிரேசில் அணியும் கொச்சியில் விளையாடுவதை, பிரேசிலில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் விளையாடுவதைப்போல உணர்கிறது. அதனால்தான் கொச்சியில் நடந்த மூன்று போட்டிகளிலும் அவர்களால் வெல்ல முடிந்தது. 

FIFAU17WC

புதன்கிழமை நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேசில் - ஹோண்டுராஸ் அணிகள் மோதின. இது, பிரேசில் அணி கொச்சியில் விளையாடும் கடைசிப் போட்டி. அதுவும் நாக் அவுட் சுற்று. பார்க்காமல் இருக்க முடியுமா. ஹோண்டுரஸை பிரேசில் எளிதில் வீழ்த்திவிடும் எனத் தெரியும். வீழ்த்தினால், கொல்கத்தாவில் நடக்கவுள்ள காலிறுதியில் ஜெர்மனியை எதிர்கொள்ளும் பிரேசில். அந்தப் போட்டியைப் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியாது. அதனால்,  ஆட்டம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாகவே, மைதானத்தை முற்றுகையிட்டனர் ரசிகர்கள். அதில் சில டீன் ஏஜ் சிறுவர்கள் கன்னத்தில் பிரேசில் தேசியக்கொடியை வரைந்து, கையில் ஒரு பேனருடன், பிரேசில் அணியின் பஸ்ஸை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த பேனரில்  `‛We’ll miss you Brazil’ என எழுதப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அந்தச் சிறுவர்களை அங்கிருந்து விரட்டிக்கொண்டேயிருந்தனர். காவலர்கள் வேறு பக்கம் சென்றதும், மீண்டும் அந்த கேட் அருகே கொடிப்பிடித்து நின்றனர் சிறுவர்கள். மீண்டும் போலீஸார் விரட்டினர். மீண்டும் சிறுவர்கள் முற்றுகையிட்டனர்.

ஒருவழியாக, பிரேசில் அணியின் பஸ் வந்துநின்றது. மொதுமொதுவென சிறுவர்கள் அங்கு படையெடுத்தனர். சிறுவர்கள் மட்டுமல்லாது அவர்களின் நண்பர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் கூடிவிட்டனர். கும்பல் இப்போது கூட்டமாகிவிட்டது. போலீஸாரால் அவர்களை விரட்டமுடியவில்லை. மாறாக, அவர்களும் பிரேசில் வீரர்கள் பஸ்ஸில் இருந்து இறங்குவதை வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டனர். அவுட் ஆஃப் போக்கஸ் என்றாலும் சிறுவர்கள் செல்ஃபி எடுக்கத் தவறவில்லை. இந்தியாவில், அதுவும் கொச்சியில் தங்களுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைப்பதை எதிர்பார்த்திராத பிரேசில் வீரர்கள், சிறுவர்களை நோக்கி தம்ஸ் அப் காட்டியவாறு மைதானத்தை நோக்கிச் சென்றனர். மறுபுறம் இன்னொரு பஸ்ஸிலிருந்து  ஹோண்டுரஸ்  அணி சத்தமின்றி இறங்கிச் சென்றது. 

FIFAU17WC


மேட்ச் தொடங்கிவிட்டது. ரசிகர்கள் எப்படி எதிர்பார்த்தார்களோ அப்படியே விளையாடியது பிரேசில். பிரென்னர் 11வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கினார். முதல் பாதி முடிவதற்கு ஒரு நிமிடத்துக்கு முன் மார்கஸ் ஆன்டோனியா ஒரு கோல் அடிக்க பிரேசில் 2-0 என முன்னிலை. இரண்டாவது பாதி தொடங்கிய 10 நிமிடத்தில் மற்றொரு கோலை அடித்தார் பிரென்னர். பிரேசில் அணி கோல் மழையால் ரசிகர்களை நனைத்தது. மைதானத்துக்குள் பட்டாசுகளைக் கொண்டுவரத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மைதானத்துக்கு வெளியே லைவ் ஸ்ட்ரீமிங்கில் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கைகளில் பட்டாசு இருந்தன. மைதானத்துக்குள் ஒரு கோல் அடித்ததும், வெளியே இருந்தவர்கள் பட்டாசு வெடித்தனர். ஒவ்வொரு கோலுக்கும் சரவெடி. பிரேசில் மொத்தம் அடித்தது மூன்று கோல்கள். ஆனால், அவர்களிடம் 10 கோல்களைக் கொண்டாடும் வகையில் வெடி இருந்தது. அவர்கள் எதிர்பார்த்த கோல்கள் அடிக்கப்படாததால், மீதமிருந்த மொத்த வெடிகளையும் போட்டி முடிந்தபின் வெடித்தனர். 

கோல்களைக் கொண்டாடிய ரசிகர்கள், பிரேசில் வீரர்கள் தங்களுக்குள் பாஸ் செய்து, நேரத்தை வீணடித்ததால் உச் கொட்டினர். ஹோண்டுரஸ் வீரர் லூயிஸ் பல்மா அடித்த ஷாட், கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியபோது பெருமூச்சுவிட்டனர். மற்றொரு கோல் வாய்ப்பை பிரேசில் கோல் கீப்பர் கேப்ரியல் பிரஸோ தடுத்தபோது, கைதட்டி வரவேற்றனர். இப்படி ஒவ்வொரு தருணத்திலும் பிரேசில் ரசிகர்களாகவே மாறி இருந்தனர் கொச்சி ரசிகர்கள். அவர்களைப் பொறுத்தவரை, இன்னும் நான்கைந்து கோல்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால், ஜெர்மனிக்கு எதிரான காலிறுதியைக் கருத்தில்கொண்டு, இரண்டாவது பாதியில் கீ பிளேயர்களை பெஞ்சில் உட்கார வைத்தார் பிரேசில் பயிற்சியாளர் கார்லஸ் அமடேயு. வீரர்கள் மைதானத்தில் இருந்து பெஞ்சுக்குத் திரும்பும்போது, ஒவ்வொருவருக்கும் எழுந்துநின்று கைதட்டி மரியாதை செலுத்தினர் ரசிகர்கள்.

FIFAU17WC


இந்த உலகக் கோப்பையில் விளையாடிய பல பிரேசில் வீரர்கள், எதிர்காலத்தில் சீனியர் அணியில் இடம்பெறவாய்ப்பிருக்கிறது. அவர்களது வாழ்வில் என்றும் நிலைத்து நிற்கும் வகையிலான வரவேற்பைக் கொடுத்திருக்கிறது கொச்சி. காலிறுதி நடக்கவுள்ள கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் இன்னும் அனல் பறக்கும் என்றாலும், பிரேசில் அணி நிச்சயம், கொச்சி ரசிகர்களை மிஸ் செய்யும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close