ஈரான் இந்தியாவில் ஜொலிப்பது ஏன்? #FIFAU17WC #FootballTakesOver | Iran, minnows in football history is determined to make history of their own

வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (20/10/2017)

கடைசி தொடர்பு:15:03 (20/10/2017)

ஈரான் இந்தியாவில் ஜொலிப்பது ஏன்? #FIFAU17WC #FootballTakesOver

இந்தியாவில் நடந்துவரும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை (#FIFAU17WC) வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ஜெர்மனியை 4-0 எனப் பந்தாடியது ஈரான். கால்பந்து உலகின் மொத்தப் பார்வையும் ஈரான் மீது திரும்பியது. விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி. அடித்தது 12 கோல்கள். கன்சீட் செய்தது இரண்டு கோல்கள் மட்டுமே. FIFA U-17 உலகக் கோப்பையில் ஈரான் அணியின் இந்த செயல்பாட்டை யாருமே எதிர்பார்க்கவில்லை. கோவாவில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மெக்ஸிகோவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறிவிட்டது ஈரான். இதுபோன்ற பெரிய தொடரில் காலிறுதிக்கு முன்னேறுவது ஈரான் கால்பந்து வரலாற்றில் இதுவே முதன்முறை. யார் கண்டது, காலிறுதியில் ஸ்பெயினுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து, அரையிறுதிக்கு முன்னேறினாலும் ஆச்சர்யமில்லை.

FIFAU17WC

இந்த உலகக் கோப்பைக்கு முன் ஈரான்...
3 ஆட்டங்கள்
பெஸ்ட் ரிசல்ட்: ரவுண்ட் ஆஃப் 16
3 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி
அடிக்கப்பட்ட கோல்கள் :10
வாங்கிய கோல்கள்: 14
 
இந்த உலகக் கோப்பையில் ஈரான்...

4 போட்டிகள் 

4 வெற்றி

அடித்த கோல்கள்: 12
வாங்கிய கோல்கள் : 2

பயிற்சியாளர் அப்பாஸ் சமனியன் தலைமையில் ஈரான் அணி ஜொலிக்க என்ன காரணம்? எந்தெந்த விஷயங்களில் ஈரான் மற்ற அணிகளிடம் இருந்து வேறுபடுகிறது. ஓர் அலசல்...

1. துரிதமாக கேம்பிளானை மாற்றுவது... 

ஈரானின் வெற்றி ரகசியம் சிம்பிள். அலட்டல் இல்லாமல் பேசிக் கேம் பிளானுடன் விளையாடுகின்றனர். கோல் ஏதும் வாங்காமல் இருப்பதே அவர்களது முதல் இலக்கு. கோல் அடிப்பது இரண்டாம் பட்சம்தான். வாய்ப்பு கிடைத்து கோல் அடித்து விட்டால், அந்த அட்வான்டேஜை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் திட்டம். கிட்டத்தட்ட, இது ஸ்பெயினில் உள்ள அட்லெடிகோ மாட்ரிட் கேம் பிளான் ரகம். எதிரணியினர் வசம் பந்து இருந்தால், பந்தைப் பிடுங்க ரொம்ப மெனக்கிடக் கூடாது. தங்கள் எல்லையிலேயே நின்றுகொண்டு, எதிரணி பந்தைக் கடத்திச் செல்வதற்கான இடத்தை வழங்காமல், அவர்களுக்கு முட்டுக்கட்டையாக நிற்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக உள்ளனர். அதேநேரத்தில், எதிரணி தவறு செய்யும்வரை காத்திருந்து, கவுன்ட்டர் அட்டாக் மூலம், குறைவான பாஸ், மின்னல் வேகத்தில் கோல் அடிப்பது ஈரான் வீரர்கள் ஸ்டைல். அந்த ஸ்டைலுக்கு ஏற்றாற்போல விளையாடக் கூடிய யூனிஸ் டெல்ஃபி, அலாயர் சயத் ஆகியோரை ஸ்ட்ரைக்கர்களாகக் கொண்டிருப்பது அணியின் ப்ளஸ். 

FIFAU17WC

2. கூட்டு முயற்சியும் ஒற்றுமையும்

ஈரான் அணியிடம் வியக்கும் இன்னொரு விஷயம், அணியில் உள்ள 21 வீரர்களும் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், களத்தில் 100 சதவிகித திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் வெறியாக இருக்கின்றனர். இந்த டீம் ஸ்ப்ரிட்தான் அவர்களுக்கு இங்கே அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்க உதவியாக இருக்கிறது. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு சப்ஸ்டிட்யூட் வீரர்கள், பிளேயிங் லெவனில் உள்ள வீரர்களை முடிந்தவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். இது அரிதான செயல். ஏனெனில்,  பெஞ்சில் இருக்கும் ஒவ்வொரு வீரனும், களத்தில் இருப்பவன் எப்போது தவறு செய்வான் எனக் காத்திருப்பான். அந்த ஏக்கம், காழ்ப்புணர்ச்சி எதுவும் ஈரான் வீரர்களிடம்  இல்லை. “நாங்கள் ஓரே அணி. ஒற்றுமையாலும் கூட்டு முயற்சியாலும் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்துள்ளோம்.’’ எனும் முகமது கோபெய்ஷாவியின் வார்த்தைகளில் மிளர்கிறது அணியின் டீம் ஸ்பிரிட்.

3. Possession இல்லாவிடினும் கட்டுப்பாடு

கால்பந்தில் பந்தை நீண்ட நேரம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது (possession) மிக முக்கியம். possession சதவிகிதம் அதிகம் வைத்திருக்கும் அணி, ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும். விதிவிலக்காக, possession சதவிகிதம் குறைவாக வைத்திருந்து, டெக்னிக்கல் மூவ் மூலம் சிலர் கோல் அடிப்பர். ஈரான் அணியைப் பொறுத்தவரை நான்கு போட்டிகளிலும் possession, எதிரணியைவிடக் குறைவாகவே வைத்திருந்தது. “பந்து எங்கள் வசம் இல்லாதபோது எதிரணியிடம் இருந்து ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயல்வது மிகவும் கடினம். பந்தைக் கட்டுக்குள் கொண்டுவர அதிக ஆற்றலை இழக்க நேரிடும். ஆனால், நாங்கள் எங்களின் முழு சக்தியையும் கொடுத்து வருகிறோம். அதனால்தான், possession அதிகமாக இல்லாதபோதும் வெற்றிபெறமுடிகிறது ’’ என்றார் மிட்ஃபீல்டில் அணியை வழிநடத்தும் முகமது ஷர்ஃபி.

Possession விகிதம்

ஈரான்  40 % – 60 % கினியா

ஈரான் 43 % – 57 % ஜெர்மனி

ஈரான் 48 % – 52 % கோஸ்டா ரிகா

ஈரான் 35 % – 65 % மெக்ஸிகோ

FIFAU17WC

4. ஒவ்வொரு பொசிஷனிலும் தேர்ந்த வீரர்கள்

ஈரானின் முதல் போட்டியில் நடுகளத்தில் பட்டையைக் கிளப்பி வெற்றிக்கு வழிவகுத்தார் முகமது ஷர்ஃபி. இரண்டாவது போட்டியில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது சய்யத், டெல்ஃபி அடங்கிய முன்கள கூட்டணி. கோஸ்டா ரிகாவுக்கு எதிரான மேட்ச்சில் நாயகனாக உருவெடுத்தார் கோபெய்ஷாவி. கடைசிவரை கோல் கம்பத்தை முற்றுகையிட்ட மெக்ஸிகோ அணியின் வெற்றியைத் தடுத்து, ஈரான் காலிறுதிக்கு நுழைய முக்கிய காரணமாக இருந்தார் கோல் கீப்பர் அலி கோலம் ஜடேயா. 

கூட்டு முயற்சிதான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது ஈரான் அணியின் தாரக மந்திரமாக இருந்தாலும், மிட்ஃபீ்ல்ட், டிஃபன்ஸ், ஃபார்வேர்டு, கோல் கீப்பிங் என ஒவ்வொரு பொசிஷனிலும் தேர்ந்த வீரர்களைப் பெற்றிருப்பது ஈரானுக்கு ப்ளஸ்.

ஒன்று மட்டும் நிச்சயம். வரலாறு படைப்பதில் ஈரான் உறுதியாக இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்