வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (29/10/2017)

கடைசி தொடர்பு:19:56 (29/10/2017)

அண்டர் 17 சாம்பியனானது இங்கிலாந்து - த்ரீ லயன்ஸின் மிரட்டல் கம்பேக்! #FIFAU17WC

கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் குழுமியிருந்த 60,000-கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவாரத்துக்கு நடுவில், ஃபில் ஃபோடன் இரண்டு கோல்கள் அடித்து அசத்த, ரியான் ப்ரூஸ்டர் இந்த உலக்கக்கோப்பையில்  தனது எட்டாவது கோலை அடித்து மிரட்ட,  5-2 என்ற கோல் கணக்கில் அசுர பலம் கொண்ட ஸ்பெயின் அணியை வீழ்த்தி, 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை (FIFAU17WC) தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறது இங்கிலாந்து. ஆட்டத்தின் முதல் பாதிக்கு சற்று முன்னர் வரை 0-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த ஸ்டீவ் கூப்பரின் இந்த இளம் ஆங்கிலப்படை, மெர்சல் கம்பேக் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

FIFAU17WC

`கோப்பை நமக்குத்தான்' என்ற ஸ்பெயின் அணியின் எண்ணத்தில் மண்ணைப்போட்டு மூடியவர்கள் மான்செஸ்டர் சிட்டியின் பிளேமேக்கர் ஃபில் ஃபோடனும், லிவர்பூல் ஸ்டிரைக்கர் ரியான் ப்ரெஸ்டரும். ஆட்டம் முதல் பாதியை நெருங்கிய சமயத்தில் இங்கிலாந்து அணிக்கு ப்ரூஸ்டரின் சூப்பர் ஹெடர் மூலம் கிடைத்த முதல் கோல் நம்பிக்கையளிக்க, இரண்டாவது ஈக்வலைசர் கோலை அடித்து ஸ்பெய்ன் மீது ப்ரஷரைக் கூட்டினார்  மோர்கன் கிப்ஸ் ஒயிட். பினிஷிங் டச்சாக இரு சூப்பரான கோல்களை அடித்து ஃபில் ஃபோடன் வெற்றிக்கு அடித்தளமிட, ஸ்பெயினின் கோல்பாக்சிற்குள்ளே மிகக் குறுகிய தொலைவிலிருந்துகொண்டு பந்தை வலைக்குள் அனுப்பி வெற்றிக்கோட்டையை கட்டியெழுப்பினார் டிஃபெண்டர் மார்க் கியூஹி. ஸ்கோர்போர்டில் பெயர் வராவிட்டாலும் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர்கள் செல்சீ வீரர்களான ஹட்சன் ஒடாய் மற்றும் செசக்னன் ஆகியோர் தான். இரண்டு கோல்களை வாங்கி துவண்டிருந்த இங்கிலாந்து அணியை தட்டியெழுப்பி ஒரு கம்பேக் கொடுத்து உற்சாகப்படுத்தியது இவர்கள் இருவரின் துல்லியமான கிராஸ்கள் தான்.

ப்ரூஸ்டர்

மூச்சுவிடக்கூட நேரமில்லாத அளவு பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தில், முதல் நிமிடத்திலிருந்தே அனல் பறந்தது. இது உண்மையிலேயே அண்டர் 17 உலகக் கோப்பைதானா என ரசிகர்கள் ஆச்சரியப்படுமளவுக்கு சீனியர் வீரர்களைப் போலவே டஃப் கொடுத்தனர். முதல் 10 நிமிடங்களில் இரு அணிகளின் கோல் பாக்சுக்குள்ளும் பந்து பல ரவுண்டுகள் சென்று வந்தது. 10 வது நிமிடத்தில் சூப்பரான பேக் ஹீல் கிக் மூலம் இங்கிலாந்து கீப்பர் ஆண்டர்சனை ஏமாற்றி பந்தை போஸ்டுக்குள் திணித்து முதல் கோலை அடித்தார் ஸ்பெயின் வீர்ர் செர்ஜியோ கோமெஸ். பதில் கோல் திருப்ப இங்கிலாந்து வீரர்கள் என்னதான் ஸ்பெயின் கோல் பாக்சிற்குள் மேஜிக் காட்டினாலும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.ஸ்பெயினும் பேக் டூ பேக் கவுண்டர் அட்டாக்குகளால் இங்கிலாந்தை பதற்றத்திலேயே வைத்திருக்க, ஆட்டமும் விறுவிறுப்பாகவே இருந்தது. 31 வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் பாக்சிற்கு வெளியே வலப்புறத்திலிருந்து பாக்சிற்குள் இருந்த சீசருக்கு பாஸ் செய்தார் ஸ்பெய்ன் கேப்டன் அபெல் ரூயிஸ். இங்கிலாந்து டிபென்ஸை ஏமாற்றி பாக்சிற்குள்ளே இடப்புற மூலையிலிருந்த செர்ஜியோ கோமெஸுக்கு அவர் பாஸ் செய்ய, அதை தனது இடது காலால் அற்புதமாக கோலாக்கி ஸ்பெயினுக்கு 2 கோல் முன்னிலை அளித்தார்.அபெல் ரூயிஸ், சீசர் மற்றும் செர்ஜியோ கோமெஸ் என மூவருமே வெரைட்டியான ஸ்கில்களில் வெளுத்துக்கட்டினர். முதல் பாதி இறுதி கட்டத்தை அடைந்தபோது, அட்டாக்கில் வேகங்கொண்டனர் இங்கிலாது வீரர்கள். ஹட்சன் அடித்த ஷாட் வலப்புற கோல்கம்பியில் பட்டு வெளியேறிவிட அடுத்த நிமிடத்திலேயே தங்களுது முதல் கோலை அடித்தது இங்கிலாந்து. செசக்னன் கொடுத்த அருமையான கிராஸை லோ ஹெடர் மூலம் கோலாக்கி இந்த உலகக் கோப்பைத்தொடரில் தனது எட்டாவது கோலைப் பதிவு செய்தார் ரியான் ப்ரூஸ்டர். முதல் பாதியின் முடிவில் 2-1 என ஸ்பெய்ன் முன்னிலை வகித்தது.

அண்டர் 17

இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளுமே அட்டாகிங் கேமையே கையாண்டனர். குறிப்பாக இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டு வர வெகுவாகப் போராடியது. போராட்டத்தின் பலனாக இங்கிலாந்து அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது. ஃபோடன் மற்றும் மோர்கன் கிப்ஸ் ஒயிட்டின் ஷாட்டுகள் வீணாகினாலும், 58-வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து ஆட்டத்தை சமன்படுத்தியது இங்கிலாந்து. மீண்டும் ஒரு சூப்பரான கிராஸ் மூலம் செசக்னன்,  பந்தை ஸ்பெய்ன்  கோல்போஸ்டிலிருந்து ஆறு யார்டுகள் தொலைவிலிருந்த மோர்கன் கிப்ஸ் ஒயிட்டுக்கு கடத்த, அதை அவர் அழகாக கோலாக்கினார். இரண்டு அணிகளும் ஆக்ரோஷமாக ஆட, ரசிகர்களுக்கு ஆரவாரம் குறையவே இல்லை. தொடர்ந்து மிரட்டிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் விரைவில் கைகூடி வந்தது. 69 வது நிமிடத்தில் ஸ்பெய்ன் டிஃபன்ஸை ஏமாற்றி, இங்கிலாந்தில் ஹட்சன் ஒடாய் கொடுத்த லோ கிராஸை கோலாக்கி இங்கிலாந்துக்கு ‘லீட்’ கொடுத்தார் ஃபில் ஃபோடன். தொடர்ந்து கிடைத்த சில வாய்ப்புகளை ஸ்பெய்ன் அணியினர் வீணடிக்க, அவர்களின் அனைத்து கவுன்டர் அட்டாக்குகளையும் உடைத்தனர் இங்கிலாந்து டிஃபண்டர்கள். ஆட்டம் கடைசி பத்து நிமிடங்களுக்கு வந்தபோது ஆட்டத்தில் ஆக்ரோசம் அதிகமானது. 84 வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பில் மீண்டும் ஹட்சன் ஒடாய் ஸ்பெயினின் கோல்பாக்சுகுள் கிராஸ் செய்ய இம்முறை பந்து இங்கிலாந்து டிஃபெண்டரான மார்க் கூஹி காலில் சிக்க, 4 வது கோலை பதிவுசெய்து அமர்க்களப்படுத்தியது இங்கிலாந்து. நான்கு நிமிடங்கள் கழித்து இந்த ஆட்டத்திற்கும் ஸ்பெயின் அனியின் உலகக் கோப்பைக் கனவிற்கும் தனது இரண்டாவது கோலால் ‘எண்ட் கார்ட்’ போட்டு முடித்துவைத்தார் ஃபில் ஃபோடன். இம்முறையும் ஹட்சன் ஒடாயின் துல்லியமான கிராஸ்தான். அதை ‘நீட்டாக’ ஃபினிஷ் செய்தார் மிரட்டல் ஃபார்மிலிருந்த ஃபில் ஃபோடன். ஆட்டமே முடிந்தாற்போல மொத்த அணியும் கூடி நின்று கொண்டாடி மகிழ்ந்த்து. கூடுதல் நேரத்தில் அங்கங்கு வீரர்கள் லேசாக உரசிக் கொண்டாலும் ஆட்டம் நல்லபடியாகவே முடிந்தது.

FIFAU17WC

வெற்றி இங்கிலாந்தின் கைகளில் விழுந்து விட்டது. முதல் பாதி முடியுமுன்னரே ஸ்பெயின் இரண்டு கோல் வித்தியாசத்தில் லீடிங்கில் இருந்தாலும் தங்களது போராட்டக்குணத்தால் சதித்துவிட்டனர் இளம் இங்கிலாந்து வீரர்கள். ஸ்பெய்ன் வீரர்களைச் சொல்லியும் குற்றமில்லை. முடிந்தவரை முயற்சித்த அவர்களும் திறமை மிக்கவர்களே. இருந்தாலும் அட்டாக்கிங் மற்றும் டிபெண்டிங்கில் ஒரு முழுமை பெற்ற அணியாக விளங்கிய இங்கிலாந்து அணியில் அனைவரின் ஆட்டமும் ரசிக்கும்படியாக இருந்தது. இந்த உலகக் கோப்பை தொடரில் 8 கோல்களை அடித்த இங்கிலாந்தின் ரியான் ப்ரெஸ்டர் தங்க ஷூ விருதைப் பெற்றார். பிரேசில் கோல்கீப்பர் ப்ரசாவோ சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் க்ளவுஸ் விருது வென்றார். தொடரின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பால் விருதை ஃபில் ஃபோடன் வென்றார். 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பைத்தொடரின் இறுதிப்போட்டி இதற்குமேலும் ஒரு தரமான போட்டியாக இருந்துவிட முடியாது. அதில் போராடி வென்ற இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்துக்கு தகுதியான அணிதான். இவ்வெற்றியின் மூலம் மீண்டும் சர்வதேச கால்பந்து உலகில் இங்கிலாந்து தன் ஆதிக்கத்தை மீட்டெடுத்துவிட்டது என்றே சொல்லலாம். 3 Lions are back!


டிரெண்டிங் @ விகடன்