Published:Updated:

ஜல்லிக்கட்டு மாடு வளர்க்க வாழ்க்கையையே அர்ப்பணித்த மதுரை செல்வராணி!

தான் வளர்க்கும் ஜல்லிக்கட்டு மாடுகளை கவனித்துக்கொள்ள, அதனுடன் நேரம் செலவிட என இருந்த பெண் ஒருவர், தன் வாழ்நாளில் திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''ஜெயிச்சா மட்டுமில்ல மாடுக தோத்தாலும் கவனமா வளக்கணும்'' என்கிறார் செல்வராணி. மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ளது சென்னகரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் 45 வயதுடைய செல்வராணி என்ற பெண், தன்னிடம் உள்ள ஜல்லிக்கட்டுக் காளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என திருமணமே செய்து கொள்ளாமல் காளைகளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பு செய்துள்ளார்.

செல்வராணி
செல்வராணி

செல்வராணியை நேரில் சந்தித்து பேசினோம். "எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. எங்கப்ப எங்க மூணு பேரையும் ஆம்பளை பிள்ள மாதிரி தான் வளர்த்தாரு. பூர்விகாம சல்லியட்டு காளை குடும்பம் எங்க குடும்பம். அத அப்பாவும் நல்லபடியா கொண்டு செலுத்துனாரு. அவர் சல்லியட்டுக்கு போகும் போது நானும் போவேன். 'பொட்ட பிள்ளைய வீட்ல விட்டுட்டு போப்பானு' சொந்தக்காரங்க சொல்லுவாங்க. அதலாம் எங்க அப்பா காதுல வாங்கிக்க மாட்டாரு. என்னையும் 'வாத்தா போவம்'னு கூட்டி போயிருவார். அதனால சல்லியட்டு காளைகனா எனக்கு உசுரு. அதனால சல்லியட்டு போட்டிக்கு மாட்ட நான்தே கூட்டி போவேன். அன்னைக்கு ஆரம்பிச்சுது இன்ன வரைக்கும் அத கொண்டு செலுத்துறேன்.

அலங்காநல்லூர் வாடிவாசலில் தமிழ் மரபுவழித் திருமணம்! - ஆட்சியரிடம் அனுமதி கோரிய ஜோடி
செல்வராணி
செல்வராணி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் பொம்பளை பிள்ளங்கிறதால எனக்கு எல்லாரும் சப்போட்டா இருந்தாங்க. என் மாடு தோத்தாலும் ஜெயிச்சாலும் நல்ல பேரு கிடைச்சது. ஆரம்பத்தில எங்க போனாலும் என் மாடு தோத்துக்கிட்டுதான் இருந்துச்சு. அப்புறம், அடிச்சு தூள் பண்ணி ஜெயிச்சாந்துருச்சு. தோல்விக்கெல்லாம் சுனங்கி ஒக்காந்தா சல்லியட்டு மாடு வளக்க முடியாது. தோத்தாலும் மாடுகள கவனமா வளர்க்கணும். இப்பதைக்கு என்கிட்ட மூணு மாடு இருக்கு. அதுல ஒரு மாடு காங்கேயம். அது ஜல்லிக்கட்டு போட்டில பரிசா கிடைச்சது. இந்த வருஷம் தான் பெரிய மாடா நிக்குது. ஜல்லிக்கட்டுல இறக்கலாம்னு பார்த்தா அதுக்கு டோக்கன் கிடைக்கல. என் மூணு மாட்டுல ஒரே ஒரு மாட்டுக்குதேன் டோக்கன் கிடச்சுருக்கு. அதையும் இந்த வருஷம் எப்புடி கொண்டு போகப்போறேனு தெரியல. இடியும், மின்னலுமா இருக்கு.

செல்வராணி
செல்வராணி
ஜல்லிக்கட்டு காளைகள்... வாடிவாசலில் கெத்து காட்ட எதெல்லாம் அவசியம்?

எப்பயும் இல்லாத மாதிரி இந்த வருஷம் மழை அடிச்சு ஊத்துது. அதுனால ஜல்லிக்கட்டுக்கு கூட்டி போயி கூட்டியாறது கடுசுதேன். என் மாடுகளுக்கு பெரிய அளவு பயிற்சி எல்லாம் குடுக்க மாட்டேன். தானா பிள்ளையா அடிச்சு வந்துரும். நிறைய பரிசு வாங்கி குடுத்துருக்கு. அப்பையே எங்க வீடு நிறைய பரிசு கெடக்கும். ஆனா அந்த பரிசுக்கெல்லாம் பெருசா ஆசைப்பட்டதில்லை. மாடுகள வாடிக்கு கூட்டி போயி சிலுப்பவிட்டு கூட்டியாரனும், அதேன் என் ஆசையா இருக்கும். எனக்கு ஒன்னுனா என் மாடுக சுனங்கிரும். அதுகளுக்கு ஒன்னுனா நானும் தாங்க மாட்டேன். அதுகளுக்கு முடியலேனா ராவயெல்லாம் தூங்காம முழிச்சுக்கிட்டு கெடப்பேன். அந்த பாசம் தான் நான் கல்யாணம் கூட பண்ணிக்காம மாடுகள வளத்து எடுக்கிறேன்.

செல்வராணி
செல்வராணி
ஜல்லிக்கட்டு காளைகளோடு விளையாடும் 4 வயது மதுரை சிறுமி... வியக்கும் ஊர்மக்கள்!

எத்த வறுமை வந்தாலும் மாடுகளை விட்டுக்குடுக்க மாட்டேன். நிறைய பேர் விலைக்கு கேட்டுருக்காக. ஆனா, நான் குடுக்க மாட்டேன். வாழ்ந்தாலும் இந்த மண்ணுதேன், மறைஞ்சாலும் இந்த மண்ணுதேன். அப்படி பாசம் காட்டி வளக்கிறேன். இந்த வருஷம் அடிலயும், மிதியிலையும் ஒரு டோக்கன வாங்கிட்டு வந்துட்டேன். நல்லபடியா சல்லியட்டுக்கு கூட்டி போயி கூட்டியாரணும்” என்று முடித்தார் செல்வராணி. அருகில் இருந்த காளை, ‘ஆமாம்...’ என்பது போல தலையாட்டியது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு