
மகேஸ்வரியின் சட்டவிரோதச் செயல்களை எதிர்ப்பதால் எனக்கும், முனிராஜ் என்பவருக்கும் கொலை மிரட்டல் வருகிறது. போலீஸாரும் கூட்டு சேர்ந்து எங்களை மிரட்டுகிறார்கள்.
வாணியம்பாடியையே தனது அடாவடிகளால் அச்சுறுத்தி வந்த சாராய வியாபாரி மகேஸ்வரி, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ‘வந்ததும், பகை தீர்க்கும் விதமாகத் தன்மீது புகார் கொடுத்த இளைஞர்களை விரட்டத் தொடங்கியிருப்பதாகவும், இதனால் பலர் ஊரைவிட்டே ஓட்டம் பிடிப்பதாகவும்’ புகார் எழுந்திருக்கிறது!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் சாராய சாம்ராஜ்ஜியம் நடத்திவந்தவர் மகேஸ்வரி. எட்டு முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட அவர்மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. இவரது அட்ராசிட்டி குறித்து, ‘அடங்காத மகேஸ்வரி... கைகட்டி நிற்கும் போலீஸ்!’ என்ற தலைப்பில், கடந்த 13.04.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம்.
இதழ் வெளியான அன்று நள்ளிரவே மகேஸ்வரி உட்பட அவரின் குடும்பத்தினர் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மகேஸ்வரியிடம் மாமூல் வாங்கிக்கொண்டு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் உட்பட 30 போலீஸார் கூண்டோடு பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர். அதுமட்டுமன்றி சட்டவிரோதச் செயல்கள் மூலம் மகேஸ்வரி வாங்கிக்குவித்த, எட்டு அசையாச் சொத்துகளையும் ஜப்தி செய்தார் திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன்.

சிறைக்குள் எட்டு மாதங்களைக் கழித்த மகேஸ்வரி, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். ‘மீண்டும் அவர் போதை பிசினஸில் தீவிரம் காட்டுவதோடு, தன்மீது புகார் தெரிவித்த இளைஞர்களைக் குறிவைத்து அவர்கள் மீது பொய்ப்புகார் கொடுத்து பழி வாங்கும் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறார்’ என்றொரு கடிதம் நமது அலுவலகத்துக்கு வந்தது. அதில், ‘மகேஸ்வரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் நேதாஜி நகர், இந்திரா நகர், காமராஜர் நகர், லாலா ஏரிப்பகுதியில் வசிக்கும் மக்கள் பலரும் நிம்மதியிழந்து, தங்களுடைய பிள்ளைகளை வெளியூர்களுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, கள விசாரணைக்காக வாணியம்பாடி சென்றது ஜூ.வி டீம். நம்மிடம் பேசிய இளைஞர் ராஜேஸ், ‘‘மகேஸ்வரியின் போதை பிசினஸ் குறித்துத் தகவல் சொன்னால் நடவடிக்கை எடுக்காத போலீஸார், புகார் கொடுத்தவர்கள் யாரென்ற தகவலை மட்டும் மகேஸ்வரியிடமே போட்டுக் கொடுத்து விடுகிறார்கள். மகேஸ்வரியின் ஆட்கள் என்னையும், என் மாமன் மகனையும் கொலை செய்யத் திட்டம் போட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. எனக்குத் திருமணம் செய்யப் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ‘சாகப்போகிறவனுக்கு எதற்குக் கல்யாணம்...’ என்று மகேஸ்வரியின் குடும்ப ஆட்கள் என் உறவினர்களிடமே மிரட்டலாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அப்படி ஏதேனும் எங்களுக்கு நேர்ந்துவிட்டால், அதற்கு மகேஸ்வரியும், அவரின் குடும்பத்தினரும்தான் காரணம்’’ என்றார் படபடப்பாக.
பழனி என்ற பெரியவர் பேசுகையில், ‘‘மகேஸ்வரியின் சட்டவிரோதச் செயல்களை எதிர்ப்பதால் எனக்கும், முனிராஜ் என்பவருக்கும் கொலை மிரட்டல் வருகிறது. போலீஸாரும் கூட்டு சேர்ந்து எங்களை மிரட்டுகிறார்கள். என்னுடைய மூத்த மகன் அஜித்குமாருக்கு இப்போதுதான் குழந்தை பிறந்தது. பொய் வழக்கில் போலீஸார் கைதுசெய்ய முயன்றதால், குழந்தையின் முகத்தைக்கூடப் பார்க்காமல் அவனும் ஊரைவிட்டே போய்விட்டான். இப்போது என் இரண்டாவது மகன் ஜெயக்குமாரையும் ஏதோ வழக்கு சம்பந்தமாக போலீஸ் தேடுகிறது’’ என்றார் குமுறலாக.
இவர்களுக்கு மத்தியில், பெயர் வெளியிட விரும்பாத சிலர் நம்மிடம், “உள்ளூர் மக்களின் புகாரால் பாதிக்கப்பட்ட போலீஸாரும், மகேஸ்வரி தரப்பும் கைகோத்துக்கொண்டு எங்களைப் பழிவாங்குகிறார்கள்” என்றார்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு மகேஸ்வரியிடமே பேசினோம். ‘‘நான் இப்போதுதான் கண்டிஷன் பெயிலில் வெளியே வந்து தினமும் கையெழுத்து போட்டுக் கொண்டிருக்கிறேன். நானும், எங்கள் ஆட்களும் யார் பேச்சுக்கும் போவதில்லை. யாரையும் மிரட்டவுமில்லை. என்னிடம் வீண் வம்பு இழுக்கவே ஊருக்குள் 10 பசங்களுக்கு மேல் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே கஞ்சா விற்கிறார்கள். அவர்களில் நான்கு பேர் என் வீட்டுக்குள் வந்து என்னையும், என் ஆட்களையும் ‘வெட்டுகிறோம், குத்துகிறோம்’ என்று மிரட்டினார்கள். இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் போலீஸில் புகாரளித்தேன். அதன் பேரில்தான் போலீஸார் அவர்கள்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்’’ என்றார்.
‘‘உங்கள் ஆட்கள்தான் சாராயம், கஞ்சா சப்ளை செய்வதாகப் புகார் வருகிறதே... ஒருவேளை இது தொழில் போட்டியா?’’ என்று நாம் கேட்டதும், ‘‘நாங்கள் உள்ளூரில் சாராயம் காய்ச்சுவது கிடையாது. வெளியூர்களிலிருந்துதான் சாராயம் வாங்கி வந்து, ஆட்களை வைத்து விற்பனை செய்துவந்தேன். அதனால் என்மீது பல வழக்குகள் இருக்கின்றன. ஆனாலும், கஞ்சாவை நான் பார்த்ததும் கிடையாது; விற்பனை செய்ததும் கிடையாது. நான் இப்போதைக்கு யார் வம்புக்கும் போவதில்லை. வீட்டிலேயே அமைதியாக இருக்கிறேன். ஆனாலும், எதற்காக இப்படியெல்லாம் என்மீது புகார் மனு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை’’ என்றார்.
இந்த விவகாரம் குறித்து திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணனிடம் பேசியபோது, ‘‘மகேஸ்வரியின் சொத்துகளை அரசுடைமையாக்கியதுடன், அவரின் சட்டவிரோதச் செயல்களையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். உள்ளூர் இளைஞர்கள்மீது பொய் வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. சமீபத்தில் மகேஸ்வரியின் வீட்டில் தகராறு செய்ததாகவே சிலர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மகேஸ்வரியால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் என்னிடம் நேரடியாகப் புகார் தெரிவிக்கலாம். அதேபோல, மகேஸ்வரிக்கு ஆதரவாக போலீஸார் மிரட்டினாலும் தைரியமாகப் புகார் தெரிவியுங்கள். கட்டாயமாகக் கடும் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்றார்.
காக்கிச் சட்டைக்கான மதிப்பையும் பொறுப்பையும் மறந்து, மகேஸ்வரிக்காகக் களமாடிய 30 போலீஸார் கூண்டோடு மாற்றப்பட்டார்கள் என்ற வரலாற்றை வாணியம்பாடி போலீஸார் மறந்துவிடக் கூடாது!