தேவை பாலியல் கல்வி!

வ்வொரு நாளும் செய்தித்தாளை திறந்தால் எட்டாம் வகுப்பு மாணவி பலாத்காரம்..பதினோராம் வகுப்பு மாணவி பலாத்காரம் என்ற செய்திகள் தவறாமல் இடம்பெற்றுள்ளன. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதி பெயரை மாற்றி எழுதி இருப்பார்கள். மாற்றி எழுதப்பட வேண்டியது அந்த பெண்களின் பெயர்கள் மட்டுமல்ல. நம் கல்வி முறையும், பாடத்திட்டமும்தான்.

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகள் உண்டு. அறமும் பொருளும் மட்டுமே வாழ்க்கையல்ல என்பதால்தான் திருவள்ளுவர் காமத்துப்பாலை இயற்றினார். ஆனால் காமத்துப்பாலின் ஒரே ஒரு குறள் கூட இது வரை பள்ளிப் பாட புத்தகங்களில் இடம்பெற்றது இல்லை என்பதே நிதர்சனம். உண்மையில் காமம் விலக்கப்பட வேண்டியதா?

ஏறக்குறைய பன்னிரண்டு வயதின் ஆரம்பத்தில் ஆண் மற்றும் பெண்ணின் பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கான தேடல் துவங்குகிறது. உடலுறவு ,மாதவிடாய், பிறப்புறுப்புகள், எதிர்பாலின கவர்ச்சி என நீளும் அந்த தேடல் பட்டியலுக்கான விடைகள், துரதிர்ஷ்டவசமாக பள்ளிகளில் கிடைப்பதில்லை.

உதாரணமாக சொல்லவேண்டுமானால் அறிவியல் பாட புத்தகத்தில் “ மனித இனப்பெருக்கம்” என்ற பாடம் உண்டு. ஆண் பெண் இனப்பெருக்க முறை மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் பற்றி தெளிவாக எழுதப்பட்டிருக்கும் அந்த பாடத்தை 99.99% ஆசிரியர்கள் நடத்துவதே இல்லை. நடத்தாமல் விட்டு விட எதற்காக அந்த பாடம்? மாணவர்களே படித்து தெரிந்து கொள்ளவா?

பெற்றோர்களின் பங்கும் இவ்விஷயங்களில் குறைவு என்பதும் நாம் அறிந்ததே. குழந்தைகளின் பாலியல் குறித்த அடிப்படை சந்தேகங்களை கூட ஏதோ பெரிய குற்றம் போல பாவிக்கும் பெற்றோர்களின் மனநிலையும் மாற வேண்டும். பாலியல் கல்வி, உடல் உறுப்புகள் பற்றிய அறிவு ஆகியவை தவறாமல் இந்த வயதில் அவர்களுக்கு சொல்லப்படவேண்டும்.

தங்களுக்கான சந்தேகங்களை தெளிந்து கொள்ள பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் பாதைகள் தவறாக இருக்கும் பட்சத்தில், அங்கே குற்றவாளிகள் செதுக்கப்படுகின்றனர். தவறான நபர்களின் வழிகாட்டுதலினால் வாழ்க்கையே சீரழியும் அபாயம் உண்டு. ஆகவே பாலியல் குறித்த சரியான வழிகாட்டுதல்களை பள்ளியிலேயே கொண்டு வந்து அவை மாணவப் பருவம் முதலே விதைக்கப்படும்போது அது நல்லதொரு பயனை விளைவிக்கும் என்பதே பொதுவான கருத்து.

கவனத்தில் கொள்ளுமா நம் அரசாங்கம்?

- மஹபூப்ஜான் ஹுசைன் (காரிமங்கலம்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!