மாரியம்மனுக்கும் 'டங்கா மாரியா'? | To Mariamman 'Tanka Maria?

வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (06/04/2015)

கடைசி தொடர்பு:16:00 (06/04/2015)

மாரியம்மனுக்கும் 'டங்கா மாரியா'?

கோவில் திருவிழா என்றாலே ஆபாசப் பாடலும், அடிதடி பிரச்னையும், போலீஸ் தடியடியும் நவீன திருவிழாக்களின் அடையாளமாக மாறி வருகிறது.

போலிச் சாமியார், காமச் சாமியார், ஆபாச அர்ச்சகர், ஊழல் கோவில் நிர்வாகம், கோவில் வருமானத்தை மட்டுமே பார்க்கும் அரசாங்கம் என்பதையெல்லாம் தாண்டி கடவுள் அருள் நமக்கு கிடைக்க கோவிலுக்கு சென்றால் அங்கே 'டங்கா மாரி' பாடலுக்கும் சாமி வந்து ஆடும் அளவிற்கு பாடல் ஒலிபரப்பபடுகிறது.

கோவில் திருவிழாவா? இல்லை, குடிகாரர்களின் போதைவிழாவா எனச் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு நிலைமை உள்ளது. இன்றைக்குள்ள சூழலில் நாகரீகமான குடும்பத்தினர் கோவில் திருவிழா, முக்கியமான கோவில் நிகழ்ச்சி என்றாலே பயந்து வீட்டில் முடங்கும் நிலை உள்ளது.

ஆதி சங்கரர், ஜீயர், மோட்சம் அடைந்த காஞ்சி பெரியவர் போன்றோரால் வளர்க்கப்பட்ட புனிதமான கோவில் சடங்குகள் இன்று சங்கடங்களாக மாறி விட்டது. அன்னியப்படை எடுப்பின் போது கோவிலுக்காக மாண்ட மனிதர்கள் பிறந்த பூமி இது. சரண் அடைந்து தூக்கு கயிறை ஏற்க வேண்டும் என்று சொன்ன ஆங்கிலேயருக்கு சவலாக விளங்கிய மருது சகோதரர்கள், காளையர் கோவில் சொர்ண காளீஸ்வரர் கோவிலை பீரங்கி வைத்து தகர்ப்போம் என்று ஆங்கிலேயர் மிரட்டியவுடன் உயிரைக்கொடுத்தாவது கோவிலை காக்க வேண்டும் என்று உயிர் துறந்து கோவிலை மீட்ட மருது சகோதரர்கள் வாழ்ந்த மண்ணா இது என சந்தேகம் கொள்ள வைக்கிறது.

இங்கிருந்து பல ஆயிரம் செலவழித்து கேரளாவில் உள்ள குருவாயூரப்பனை சட்டை இல்லாமல் பக்தியுடன் வணங்கும் தமிழன், திருப்பதியில் விரதமிருந்து பெருமாளை சேவிக்கும் நம்மவர்கள் இங்கு மட்டும் ஆட்டம் போடுவது ஏன்? முன்பெல்லாம் கோவில் விழாக்களில் ராமாயண சொற்பொழிவு, வள்ளி திருமண நாடகம், பட்டிமன்றம் என ஆன்மிகத்தோடு இணைந்த நிகழ்ச்சிகள் நடக்கும். தற்போது ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக சினிமாவை ஒட்டிய கலை நிகழ்சிகள் நடத்துகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் குத்துப்பாட்டை பார்த்தால் நம் தெய்வ வழிபாட்டின் புனிதத்தை எப்படி புரிந்துகொள்வார்கள்?

திரைப்படங்கள் ஏற்கனவே நமது கோவிலை நல்ல விதமாக காண்பிக்கத் தவறி விட்டன.  இனி திரைப்படங்களில் கோவில்களில் காதல் பாடல்கள், நடனங்கள் இடம்பெறுவது போன்ற காட்சிகளை சென்சார் தடை செய்ய வேண்டும். ஒரு மதத்தை, ஜாதியை இழிவாக பேசுவதை ஏற்காத சென்சார் போர்டு, அந்த மதத்தின் புனிதமான கோவிலை மட்டும் காதலர்கள் மோசமான உடையில் ஆபாச நடனம் ஆடும் இடமாகவும், குத்துப்பாட்டு ஆடும் இடமாகவும் மக்களிடம் காண்பிக்க எப்படி அனுமதிக்கிறது?

காளிக்கு 'காதல் பாட்டு', முனியாண்டிக்கு 'முத்தப்பாட்டு', அழகருக்கு 'ஆபாசப் பாட்டு' என எங்கும் சினிமா பாட்டு தான். அதிலும் பள்ளி, கல்லூரி தேர்வுப்பருவத்தில் கோவில் திருவிழா என்ற பெயரில் காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை ஆடல் பாடல் குத்தாட்ட நிகழ்ச்சியை கோவில் நிர்வாகமே செய்து கொடுப்பது தெய்வத்தை நினைக்காமல் தெருக்கூத்தையே நினைக்க வைக்கும். முன்பெல்லாம் கோவில்களில் கட்டுப்பாடு இருந்தது. இன்று இருக்கும் இளைய தலைமுறை அஜித், விஜய், சூர்யா என பிரிவாக பிரிந்து தெருவுக்கு தெரு ஜாதி ரீதியில் நடிகர் பாடலும், ஜாதிப் பாடல்களும், ஜாதி தலைவருக்கு சுவரொட்டி ஓட்டுவதும், குடித்து விட்டு கோவில் திருவிழாவில் ஆடுவதை பெருமையாக நினைப்பதும் காளிக்கே பொறுக்குமா எனத் தெரியவில்லை. சிவராத்திரி அன்று கூட தெருவுக்குத் தெரு சினிமாப்பாடல்களை (பக்திப் பாடல்கள் அல்ல) ஒலிபரப்பி சிந்தனையில் சினிமாப் பாடல்கள் தான் நிற்கும் நிலை உள்ளது.

இதற்கும் மேலாக வாண வேடிக்கை என்று இதயம் பதற வைக்கும் வெடியுடன் திருவிழா நடத்துவார்கள். வெடி போட்டு விழா நடத்துகிறேன் என்று ஊரில் உள்ள வயதானவர்கள், பசு, நாய் விலங்கினங்கள் முடங்கும் அளவிற்கு வெடிச் சத்தமும், கண்ட கண்ட மேளமும் இசைப்பதை தடுக்க வேண்டும். நமது தமிழ் மண்ணுக்குரிய பாரம்பரிய இசை மட்டுமே உகந்தது. முன்பு வெடி போட்டு சாமி ஊர்வலமாக வருவதை சொன்னார்கள். இன்று சிங்கப்பூர் முருகனுக்கு விழா எடுப்பதை ஒரு நிமிட அலைபேசியில் தெரிவித்து விடுகின்றனர். பிறகு எதற்கு வீண் வெடிச்சத்தம், வெடிச் செலவு? அந்த வெடிச் செலவில் 10 மாணவர்களை படிக்க வைக்கலாமே அல்லது ஊருக்கு சுத்திகரிப்பு குடிநீர் சாதனம் அமைக்கலாமே?

இனி வரும் வெயில் காலத்தில் மக்களின் மன நிலையும் சூடாகவே இருக்கும். விவசாய வேலைகள் இல்லாததால் வீண் பிரச்னைகளும், மது போதைத் தகராறுகளும், சாதி ரீதியில் சண்டைகளும் அதிகமாக ஏற்படும். ஆகவே கோவில்கள் நமது ஒழுக்கத்தை மேம்படுத்தவே முன்னோர்கள் கோவிலை கொடுத்தார்கள் என்பதை மறந்து, கோவிலை பொழுது போக்கு இடமாக மாற்றியதை அரசும் வேடிக்கை பார்ப்பது கோவிலின் புனித தன்மையை அழிக்கிறது. பல ஆயிரம் வருடங்கள் புயல், மழை பார்த்த கோவில்கள், பல நூறு அந்நிய படை எடுப்பை மீறி வளர்ந்த கோவில்கள், குடி போதையால், சினிமாவால் வீழ்த்தப்படுகிறது.

ஒரு மதத்தை அழிக்க மத மாற்றமோ, மத ரீதியில் பின்னடைவு நிகழ்வுகளோ தேவை இல்லை. அந்த மதத்தில் உள்ள பாரம்பரியத்தை, கலாசாரத்தை, நம்பிக்கையை அழித்தாலே போதும். தற்போது அந்தக் காரியம் கோவில் திருழா என்ற பெயரில் அடாவடியாக மது போதைக் கும்பலால் நடக்கிறது என்றால் மிகையாகது.

திருவிழாவில் தெய்வ அனுக்கிரகம் கூட,

1. சிறிய கோவில், பெரிய கோவில் என்றாலும் கடவுள் ஒன்றே என நினைத்து சினிமா பாடல், ஜாதிப்பாடல், ஜாதி ரீதியான சுவரொட்டிகள் இல்லாத கோவில் திருவிழா வேண்டும். அசைவ உணவு இல்லாமல் இருக்க வேண்டும்.

2. பொது இடங்களில் புகை பிடிக்க, மது அருந்த தடை இருப்பது போல, பொதுக்காரியங்களில் மது குடித்து விட்டு வருவோருக்கு கோவில் திருவிழாவில் பங்கேற்க அனுமதியில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

3. திருவிழா நேரங்களில் உள்ளூர் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளித்து மக்களின் குடிபோதைக்கு விடுமுறை தர வேண்டும்.

4. வான வேடிக்கை, அதிக சத்தம் தரும் வெடிகள், காது கிழியும் கேரளா போன்ற மேளத்திற்கு தடை வேண்டும் .

'டங்கா மாரி' இனி அடங்கட்டும். ...மாரியம்மன் மனம் குளிரட்டும்..!

எஸ்.அசோக்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்