வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (18/04/2015)

கடைசி தொடர்பு:15:33 (18/04/2015)

ஏமாற்றும் ஆன்லைன் வர்த்தகம்: தப்பிப்பது எப்படி?

ன்னிடம் ஒரு பைக் இல்லை என்றால், அதை நான் தருவேன்  100 ரூபாய்க்கு '(இருந்தால் தானே)' என்பது போல் ஒரு ஆன்லைன்  நிறுவனம் சில மாதங்களுக்கு முன் பிக் பில்லியன் டே ஆஃபர் போட்டு சர்ச்சைக்குள்ளானது. இன்னும் சில ஆன்லைன்  நிறுவனங்கள், உதாரணமாக 5 பொருட்கள் ரூ.65 என தரமற்ற 4 கத்திகள், ஒரு கத்திரிகோலை விற்பனை செய்கின்றன. அதேபோல், மற்ற பொருள்களையும் விற்று கொண்டுதான் வருகின்றன.

இந்த ஏமாற்று நிறுவனங்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

பொது வழக்கில் நுகர்வோர் என்பவர், பொருட்களையும், சேவைகளையும் விலை கொடுத்துப் பெற்றுக் கொள்பவர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

பொருட்களையும், சேவைகளையும் விலைகொடுத்து வாங்கும் நாம் அவை தரம் வாய்ந்தவையாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும், தமது தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் குறைபாடின்றி இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பதில் எவ்வித தவறும் இல்லை.

போட்டி ரீதியான வியாபாரச் சந்தையில் குறைபாடுடைய பொருட்கள், சேவைகள் நியாயமற்ற வியாபார நடைமுறைகள், கறுப்பச் சந்தை என்பன தோன்றியுள்ள வேளையில் நுகர்வோர் தம்முடைய கடப்பாடுகளையும், உரிமைகளையும் பற்றித் தெரிந்திருப்பது அவசியமாகும்.

ஆகக்கூடிய (MRP) விலையைவிட அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் போனால் போகட்டும் என்று அசட்டையாக நாம் இருக்கக் கூடாது.

கடை உரிமையாளர் அல்லது விற்பனை முகவரிடம் அவ்விலையைப் பற்றி விசாரிக்க வேண்டும். இது நுகர்வோர் ஒவ்வொருவருடைய பிரதான கடமையாகும். சில வேளைகளில் வேலை பளு காரணமாக அவசரமாக பொருட்களை வாங்கச் செல்லும்போது, கால நேரத்தை வீணடிப்பது அவசியமற்றது எனக் கருதி நம்மில் சிலர், எவ்வளவு விலையானாலும் கொடுத்துவிட்டு வருவது வழக்கமாகும்.

'வாங்க, வாங்க என்கிட்டே வாங்க' என வாங்கும் வரை வாய் நிறைய வரவேற்று கூப்பிடும் நிறுவனங்கள், வாங்கிய பின் post சர்வீஸ் பற்றி அக்கறை கொள்வதில்லை; அலட்சியம்  காட்டுகின்றன. பொருட்களை வாங்கும் போது உற்பத்தி செய்யப்பட்ட தேதியையும், காலாவதியாகும் தேதியையும் கவனிப்பது அவசியமாகும். பொருட்களை வாங்குமிடத்திலேயே அதனைக் கவனித்து அதன் விளைவாக ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

தொலைக்காட்சி, ஃபிரிட்ஜ், ஏசி, ஏர் கூலர், வாசிங்மெஷின் போன்ற சாதனங்களை வாங்கும்போது குறிப்பிட்ட காலத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படும். அதனை உரிய முறையில் பார்த்து வாங்குவது நுகர்வோரின் கடமையாகும்

ஒவ்வொரு வியாபார நிலையமும், தமது வியாபார நிலையத்தில் பொருட்களின் விலைப்பட்டியலைக் காட்சிக்கு வைக்க வேண்டும். நுகர்வோரையும், நுகர்வோர் உரிமையையும் பாதுகாக்கும் பொருட்டு 1986ல் பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்தப்பட்டது. பாதிக்கப்படும் நுகர்வோர் இச்சட்டத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம். இதற்காக நுகர்வோர் நீதிமன்றம் மூன்றடுக்குகளாக செயல்படுகின்றன. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் ஆணையம் என செயல்படுகின்றன. நாட்டில் 621 மாவட்ட, 35 மாநில நுகர்வோர் ஆணையம் மற்றும் டெல்லியில் தேசிய நுகர்வோர் ஆணையம் உள்ளன. மாவட்ட நீதிமன்றங்களில் ரூ.20 லட்சம் வரை இழப்பீடு கோரியும்; மாநில ஆணையத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரையும்; அதற்கு மேல் தேசிய ஆணையத்திடமும் கோரலாம்.

யார் மீதும் வழக்கு தொடரலாம். பாதிக்கப்பட்ட நாளில் இருந்து இரு ஆண்டுகளுக்குள் வழக்கு தொடர வேண்டும். போலியான, கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறக்கூடாது. எந்தவொரு நிறுவனத்தில் இருந்தும் வாங்கும் பொருட்கள் தரமானதாக இல்லை என்றால், நுகர்வோர் தானாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமல் வாதாடி அதற்கான நிவாரணத்தை பெற முடியும்.

மேலே குறிப்பட்ட சட்டங்கள் எல்லாம் ஆன்லைன்  வர்த்தகத்துக்கும் பொருந்தும் என்றாலும், பெரும்பாலானவை ஆன்லைன் வர்த்தகத்தின் மோசடிகளுக்கு நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பலகீனமாகவே உள்ளன.  மாறிவரும் நுகர்வோர் கலாச்சாரத்துக்கு ஏற்றபடி 1986 நுகர்வோர் சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டு வந்தால்தான், ஆன்லைன் மோசடிகளை தடுக்க முடியும்.

-ஷான் (மயிலாடுதுறை)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்