(திருட)வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்! | tamilnadu welcomes theives from north indians

வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (23/04/2015)

கடைசி தொடர்பு:18:36 (23/04/2015)

(திருட)வந்தோரை வாழ வைக்கும் தமிழகம்!

கை மீது நமக்கிருக்கும் ஆசையை விட பல மடங்கு ஆசை திருடர்களுக்கு உள்ளது. அதனால்தான் அன்றாடம் ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறிப்பு செய்திகள் வலம் வருகின்றன.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பெண்களை குறி வைக்கும் திருட்டு கும்பல் தமிழகத்தில் அதிகமாகி விட்டதாகத் தெரிகிறது. கஷ்டப்பட்டு பொருள் சேர்த்து, கடைகாரருடன் சண்டை போட்டு கூலி, சேதாரம் குறைத்து வாங்கிய நகையை சத்தமில்லாமல் கொள்ளை அடித்துச் சென்று விடுகின்றனர் திருடர்கள்.

ரயில் புறப்படும் /சேரும்  நேரத்தை பார்ப்பதை விட நமக்கு நல்ல நேரம் இருக்கா? என தினசரி ஜோதிடம் பார்த்து, பயப்படும் அளவிற்கு வட மாநில கொள்ளையர் அட்டகாசம் வேறு அதிகரித்து வருகிறது. நகைக்கடை விளம்பரம் போல நமது பெண்கள் அணியும் நகைகள் " 'வாங்கோன்னா, அட வாங்கோன்னா..!' என  கொள்ளையர்களை வரவேற்கிறது. 

நமது பொருளாதார வசதியை காண்பிக்க, இல்ல விழாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது இடங் களில் நமது நகை பலத்தை  காண்பித்தால் திருடர்கள் பலம்  அதை விட பெரியது என்பதை புரிய வைப்பார் கள். நகை மனதிற்கு இனிமையானதுதான்  ஆனால் உயிருக்கு  உலை வைத்து விடும். நெருங்கிய உறவினர்களே நகைக்காக கொலை செய்யத் துணியும் போது திருடனிடம் மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா??

தற்போதெல்லாம் ரயில்  பயணம் சுகமான அனுபவம் என்று நினைப்பதை விட திருட்டு பயத்தில் தூங்க முடியாமலும், எப்போது ரயிலை  விட்டு இறங்கி வீட்டிற்கு செல்வோம் என்ற திக் திக் நிமிடங்களாக கழி கிறது. மயக்க பிஸ்கட் கொடுத்த காலம் போய் இப்போது நேரடித் தாக்குதலில் கொள்ளையர்கள் இறங்கி விட்டனர். ஒவ்வொரு முறையும் நூதன முறையில் திருடுவதால் போலீசாரால் அடையாளம் காண முடிவதில்லை.

ஏ டி எம் கொள்ளை,   வங்கியில் கொள்ளை, திருடிய நகைகளுடன் வங்க தேசம் சென்றார்களா? என செய்தி கள் வரும்போதெல்லாம் திருடர்களின் அறிவுத்திறன்,தொழில் நுட்பமும், தகவல் தொடர்பும் போலீசை விட பல மடங்கு பலமாக  தெரிகிறது. திருட வந்தால், குறைந்த பட்சம் ஐந்து லட்சத்துடன்தான் அவர்களது சொந்த ஊருக்கு போவதாகத் தெரிகிறது. (ஏதும் சாமி வேண்டுதல் போல??) . பொதுவாகவே திருடர்கள் பொருளின் மீது மட்டும் குறி வைப்பார்கள்.

ஆனால்  கொள்ளையர்கள் பொருளுக்காக உயிரையும் எடுத்து விடும் கொடூர மனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அசம்பாவிதம் நிகழ்ந்து ரயில்வே நிர்வாகம் பண இழப்பீடு கொடுப்பதை விட,  உயிர் காக்கும் பாதுகாப்பு  செயல்களை துரிதப்படுத்துவதேமேல். முன்பு இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் வந்த திருடர்கள் எல்லாம், இப்போது ரயில்,விமானத்தில் வந்து  இறங்கி, தங்கி, பின் ரயிலில், வங்கியில்,பூட்டிய வீட்டில் திருடி விட்டு விமானத்தில் பறந்து போகும் அளவிற்கு வசதியுடன் வலம் வருகின்றனர் என்றுதான் சொல்லத் தோணுகிறது.

பெரும்பாலான வங்கிக் கொள்ளைகள் குறிப்பிட்ட மாநிலத்தவர் கைவரிசைதான் எனச் சொல்லும் நிலையில் உள்ளது.  கதவு இல்லாத,  பாதுகாப்பு வசதி இல்லாத வங்கியை தேர்வு செய்து எளிதாக கொள்ளை அடித்து தப்பிச் சென்று விடுகின்றனர்.  இது போன்ற திருட்டு,கொள்ளைக்கு என்ன தீர்வு.....?

1.ரயில் முன் பதிவு மட்டுமன்றி சாதாரண பயண சீட்டு பதிவிற்கும் அடையாள அட்டை காண்பிக்கச் சொல்ல வேண்டும். அந்த அடையாள அட்டையை  அட்டையில் உள்ள நபர் தரும் சான்று சரிதானா எனச் சோதிக்க இணையம் (தேர்தல் ஆணையம், ஆதார் பிரிவு) மூலம் சரிபார்க்கும் வசதி வேண்டும். இதன் மூலம் தவறான நபர் ரயிலில் ஏற வாய்ப்பிருக்காது.

ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண்களை  பயணச் சீட்டில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் யார் எங்கிருந்து எங்கு செல்கிறார் என்பதை எளிதாக அடையாள கண்டுபிடிக்க முடியும். இதே போன்ற முன் பதிவை வெளி மாநிலம் செல்லும் பேருந்துகளும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

2.  ரயில்   பயணத்தின்போது  மல்லிகை பூ, நகை  பெண்கள்  நகை அணிவது தவிர்க்கப்பட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்களிடம் தண்ணீர், உணவு வாங்க கூடாது.

3.  ரயிலில் அனைத்து  பெட்டிகளின் படியின்  முன்பும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். ரயிலுக்குள்ளும் கண்காணிப்பு காமிரா அவசியம். இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படும். ரயில் பெட்டியில் ஏறுமிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா முன் பயணிகளை  ரயிலில் ஏற்றும்போதே  சரியான அடையாள  அட்டை உடன்  பயணச் சீட்டு சரி பார்ப்பதன் மூலம் திருடர்கள்  வண்டியில் ஏறும் வாய்ப்பு குறையும்.

பயணிகளை வண்டியில் ஏற்றுவதற்கு முன், பயணச் சீட்டு சரி பார்ப்பதன் மூலம் திருடர்கள் ஒளிந்து கொள்ளவும் முடியாது. விமான நிலையம் செல்லும் பொது ஒரு மணி நேரம் முன்னதாக செல்லும் நாம், ரயிலுக்கு இதே போல நடைமுறை கொண்டு வந்தால் நல்லது.

4. ரயிலுக்குள் இன்டர்காம் வசதி செய்யப்பட வேண்டும். எங்கோ இருக்கும் ரயில்வே போலீசாரை அழைப்பதற்கு பதில் உள்ளுக்குள் பாதுகாப்பில் உள்ள போலீசாரை அழைக்க இன்டர்காம் வசதி வேண்டும்.

5. நமது மாநில எல்லையில் இருந்து உள்ளே வரும்,வெளியே செல்லும் வாகனத்தை அதி நவீன ஸ்கேன் கருவி மூலம் சோதிக்க வசதி வேண்டும். தேர்தலின் பொது மட்டுமே கெடுபிடியாக வாகனச் சோதனை செய்யும் நம் அரசு, மற்ற நேரங்களில் கோட்டை விடுவதால் பண வேட்டையை  வட மாநிலத்தவர் எளிதில் நடத்துகின்றனர். எல்லையை விட்டு வெளியே செல்லும் /உள்ளே வரும்  அனைவரது  படமும், வாகனத்தின் படமும் பதிவு செய்யப்பட வேண்டும்.

6. எந்த ஒரு வெளி மாநிலத்தவரும் சுற்றுலா பயணியாக இருந்தாலும் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் வேண்டும். வட மாநிலங்களுக்கு .பணப்பரிமாற்றம் செய்யும் நபர்களின் விபரங்களை வங்கிகள் போலீசுக்கு சொல்ல வேண்டும். 

7. இன்டர்போல், சிபிஐ அமைப்பு போல இந்தியா முழுவதும் உள்ள  பல மொழிகள் பேசத் தெரிந்த  போலீசாரை கொண்ட குழு உருவாக்கி கொள்ளையர்களின் நடமாட்டத்தை ஒடுக்கலாம். பெரிய கொள்ளை நடந்தால் மட்டுமே அண்டை மாநிலம் சென்று விசாரிக்கும் அளவிற்கு  நிலைமை மோசமாக உள்ளதை தடுக்கலாம்.

பல ஆயிரம் கோடிகள் புரளும் ரயில்வே நிர்வாகம் பல லட்சம் பேர் பயணிக்கும் மக்களுக்கு  ரயிலில்  பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். ரயில் சங்கு ஊதுவதை நிறுத்தி விட்டது. ஆனால் மக்கள் ரயிலுக்கு சங்கு ஊதாமல் பார்த்துக்கொள்வது நல்லது. சினிமாவில் வரும் போலீஸ் போல விரட்டி பிடித்து ,சண்டை போடும் போலீஸ் அல்ல 'ரியல்'  ரயில்வே போலீஸ் என்பதை பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊழியர்களின், அதிகாரிகளின் வசதியை மட்டும் அரசு நினைக்காமல் பொது மக்களையும்,பாதுகாப்பு குறைபாடுகளையும் நினைக்க வேண்டும். ரயில்வே ஊழியர்கள் திரும்பிய இடமெல்லாம் சங்கத் தலைவரை பாராட்டியும், போராட்ட அறிவிப்பு என சுவர் விளம்பரம் செய்வதில் காட்டும் அக்கறையையும் கொஞ்சம் மக்கள் நலனுக்கான திட்டத்தை அரசுக்கு எடுத்துச் சொல்வதிலும் காண்பித்தால் நல்லது.  .

தமிழகம் வந்தால் பிழைக்கலாம் என்ற எண்ணம் மாறி  திருடலாம், கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணத்தை போலீசார் ஆரம்ப நிலையிலேயே அழிக்க வேண்டும். கொலை,கொள்ளை நடந்த பிறகு குற்றவாளியை பிடிப்பதை விட குற்றச் செயல் நேராமல் குற்றத் தடுப்பு காவல் செய்வதே மக்களுக்கு நிரந்தர நிம்மதி கிடைக்க வழி.

- எஸ். அசோக்

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்