குழந்தைகளின் முக்கியமான சொத்து!

மீபத்தில் குழந்தைகள் விரும்பிச் சாப்பாடும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத் தின் தயாரிப்பான நூடுல்ஸ் உணவில், உடல்நலத்தை பாதிக்கும் ரசாயனம் கலந்திருப்பதாக புகார் எழுந்து பெரிய சர்ச்சை ஆகியிருக்கிறது. சில மாநிலங்களில் இது சம்பந்தமான வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்த நிறுவனம் தயாரித்த நூடுல்ஸ் விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. சில மாநிலங்கள் இந்த குறிப்பிட்ட நிறுவன நூடுல்ஸ் உணவை தடை செய்துள்ளன.

உண்மையில் நம்மை சுற்றி, குறிப்பாக குழந்தைகளைச் சுற்றி ஒரு பெரிய வியாபார வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் இலக்கு குழந்தைகள்தான். குழந்தைகளை கவர்வதற்காக புதிது புதிதாக உணவுகளை தினம் தினம் உருவாக்கி அதை பலப்பல வியாபார தந்திரங்களுடன், குழந்தைகளைக் கவரும் விளம்பரங்களின் மூலம் பெற்றோரை வாங்கச் செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட உணவுகளை சில மருத்துவர்களும் பரிந்துரைப்பதாக கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் இவை அனைத்தும் ஆரோக்கியமானதா என்பது மில்லியன் டாலர் கேள்வி!

முன்பெல்லாம் பள்ளிக்கு வெளியே ஒரு சிறு கூடையில் பாட்டிகளும், தள்ளுவண்டிகளில் தாத்தாக்களும் விற்கும் மாம்பழம், நெல்லிக்காய், கொய்யாப்பழம், முந்திரிப்பழம், சீத்தாப்பழம், இலந்தை, தர்பூசணி, மாதுளை, பப்பாளி, நாவல், நுங்கு போன்ற ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்றவாறு உற்பத்தியாகும் இயற்கையான பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

இப்போது அது போல யாரும் விற்பதாக தெரியவில்லை. அப்படியே சில இடங்களில் விற்பனை செய்தாலும் அவற்றை குழந்தைகள் விரும்புவதே யில்லை. ஏனெனில் இயற்கையான பழங்களை சாப்பிடச் சொல்லி யாரும் டிவியில் வந்து விளம்பரப்படுத்துவது இல்லையே.

அதனால் இப்போது பல பள்ளிகளின் முன்பு ஐஸ்கிரீம் கடைகளும், சாக்லேட் கடைகளும் முளைத்திருக்கின்றன. எல்லாம் விளம்பரம்படுத்தும் பாடு.

பல நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், குழந்தைகளை இலக் காக்கி விதவிதமான விளபரங்களின் மூலம் ஆரோக்கியம் இல்லாத உணவு களை சந்தையில் அறிமுகப்படுத்துகிறார்கள். இவர்கள் குழந்தைகளைத் தூண்டிவிட்டு, தங்களின் பணப்பையை நிரப்புவதில்தான் கவனம் செலுத்து கிறார்கள். குழந்தைகளின் ஆரோக்கியம், எதிர்காலம் பற்றியெல்லாம் அவர் களுக்கு துளியும் அக்கறை இல்லை.

இப்படிப்பட்ட ஆரோக்கியமற்ற புதிய உணவுகளை விற்பவர்கள், தங்களின் உணவுகளை மக்கள் அதிகம் கூடும், குறிப்பாக குழந்தைகள் கூடும் இடங் களிலும் மற்றும் டிவி மூலமாகவும் விளம்பரப்படுத்துகிறார்கள்.

இது போன்ற புதிய உணவுப்பொருள்கள் சந்தையில் அறிமுகமாகும்போது, அதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து களைய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

பல பெற்றோர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இருப்பதில்லை. பெற்றோர் தங்களின் பிள்ளைகள் என்னென்ன உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்பதை கவனிப்பது அவசியம். குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்பதற்காக, உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் உணவுகளை குழந்தைகள் உண்ண ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இதில் காட்டும் அக்கறையின் மூலம் குழந்தைகளின் உடல்நலத்தை பாதுகாப்பதோடு, மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வதையும் தவிர்க்க முடியும்.

மேலும் பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே இயற்கையான, ஆரோக்கியமான உணவுகளையும் பழங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும். அவைகளை சாப்பிடுவன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை உணர்த்தி, அவர்களை சாப்பிட ஊக்கப்படுத்த வேண்டும். அவைகளை குழந்தைகள் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

இதை சாத்தியப்படுத்த பெற்றோர் முதலில் தங்களின்   பார்வையை, இயற்கையான உணவுகளின் பக்கம் திருப்ப வேண்டும். நம் முன்னோர் கண்டறிந்து சொன்ன ஆரோக்கியமான உணவுகளை தேடித் தேடி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் பிள்ளைகள் தங்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு தேவையான உணவுகளை கண்டறிவார்கள். அதை விட்டுவிட்டு பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு பழங்கள் என்றாலே அலர்ஜி என்று எல்லோரிடமும் சொல்லி பெருமைப்படுவது அறிவார்ந்த செயல் ஆகாது.

எனவே இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டியது பெற்றோர்தான். ஒரு புதிய உணவு சந்தைக்கு வந்ததும் அது ஆரோக்கியமானதா? குழந்தைகள் அவற்றை உட்கொண்டால் அது அவர்களுக்கு நன்மையா தீமையா? என்பதை பகுத்தறிந்து பார்த்து செயல்பட வேண்டியது அவசியம்.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய மிக முக்கியமான சொத்து, ஆரோக்கியம்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

- ருத்ரன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!