அழகு வரும் முன்னே, ஆபத்து வரும் பின்னே!

ந்தியாவில் ஆண்டுக்கு 220 கோடிகள் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்கள் ஆண்டுக்கு 15% விற்பனை வளர்ச்சி பெற்று, பெண்களை 'நடமாடும் அழகு சாதனப் பெட்டகமாக' மாற்றி வருகின்றன.

இயற்கையாகவே அழகு கொண்ட நம் இந்தியப்பெண்கள், அழகாக இருக்க வேண்டும் என அழகு நிலையத்திற்கும், அழகு சாதனப் பொருளுக்கும்  செலவு செய்யும் தொகை அதிகமாகவும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்து உடல் பயிற்சிக் கூடத்திற்கும், நடை பயிற்சிக்கும் வருபவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதும் பெண்கள் செயற்கையான அழகை விரும்புகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

தினமும் 20 நிமிடங்கள் திறந்த வெளியில் நடப்பதும், யோகா செய்வதன் மூலமே அழகு நிரந்தரமாகும் என்பதை மறந்து செயற்கை ரசாயன பூச்சுகளை பூசுவது உடலுக்கும், மனதிற்கும் பல்வேறு தொந்தரவுகளை விலை கொடுத்து வாங்குவதற்குச் சமம்.

மாதம் தோறும் வாங்கும் பலசரக்கு சாமான்களோடு பல வண்ணச் சாயங்களும், செயற்கை நிறமூட்டிகளும், செயற்கை வாசனைத்  திரவியங்களும், கொசு ஒழிப்பு திரவமும் சேர்ந்து விட்டது. சீனியும், உப்பும்  வாங்க மறந்தாலும் சிவப்பு நிற தோல் தரும் (?) கிரீமும்,  உதட்டுச் சாயமும் மறக்காமல் வாங்கும் அளவிற்கு  சிவப்பு நிறம் நம்மை ஆட்டுவிக்கிறது.

இயற்கையான நிறத்துடன் புன்சிரிப்புடன் இருக்கும் அழகை கூட்ட செயற்கை நிறமூட்டிகள் மூலம் பல்லுக்கு வெள்ளை அடித்து, உதட்டிற்கு சிவப்பு நிறமடித்து, இமைக்கு கறுப்பு நிறமடித்து வீட்டிற்கு வர்ணம் பூசுவது போல ஒவ்வொரு பாகத்திற்கும் வர்ணம்  அடிக்கும் பெண்கள் சராசரியாக 515 இரசாயன நச்சுக்களை உடலில் ஏற்றிக்கொள்கின்றனர் என்ற ஆய்வுத் தகவல் 'ஆயுளை முடிக்கும்' தகவலாகவே பயமுறுத்துகிறது. 

நமது முன்னோர்கள் இயற்கையான அழகு சாதனப் பொருட்களை உபயோகித்து, அழகாகத்தானே இருந்தார்கள். அப்போதெல்லாம் மார்பக புற்று நோய் என்பதே அறியாத உலகம். நவீன கலாசார மாற்றத்திற்கு ஏற்ப உண்ணும் பரோட்டா, கேக், பர்கர், துரித உணவுகள், அழகு சாதனப் பொருட்கள் எல்லாம் நம் பெண்களை புற்று நோய்க்கு பலியாக்கி வருகின்றன என்றால் மிகையாகாது. மார்பக புற்று நோய், மலட்டுத் தன்மை, சிறுநீரக பாதிப்பு, பெண் சுரப்பிகள் செயலிழப்பு என அழகு சாதனப் பொருட்கள் பெண்களின் அழகான வாழ்வைக் கொல்லும் பொருட்களாக மக்களிடையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பாரம்பரியமான இயற்கை விவசாயப் பொருள்களை இழந்து, ரசாயன பூச்சிக்கொல்லி கலந்த உணவுகளை உண்டு வரும் நிலையில், நமது வெளிப்புறத் தோலுக்கும்  ரசாயனத்தை உணவாக கொடுத்து வருகிறோம்.

கண் புருவ மை, தலைக்குப்போடும் ஷாம்பூ , முகப்பூச்சு, நகப்பூச்சு, வியர்வை தடுப்பான்கள், முகத்தில் போடும் நிறமேற்றிகள் எல்லாமே அலுமினியம், பாதரசம், காரீயம், ப்ளுரிட் , சிலிகான், எதில் அல்கஹால், பாரபின், ப்ரோபிளின் கிளைக்கால் போன்ற நச்சுக்கிருமிகளின் கலவைகளால்தான் தயாரிக்கப்படுகின்றன.

இந்த நச்சுக்களால் இதய நோய், சிறு நீராக பாதிப்பு, சர்க்கரை நோய், மார்பக புற்று நோய், மலட்டுத் தன்மை, ஆஸ்த்மா, தோல் வியாதிகள் ஏற்படுவதாக ஆய்வக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அழகு சாதனப் பொருள்களால் அழகு நம்ம கையில் இருக்குமோ இல்லையோ கட்டாயம் நோய்கள் நம் கையில் இருக்கும்.

காரியம் என்ற நச்சை உதட்டுச் சாயமாக பயன்படுத்துவோர் நாளமில்லா  சுரப்பிகள் செயல்பாட்டு குறைவையும், வியர்வை தடுக்கும் நறுமண பொருள்களில் உள்ள அலுமினியம் என்ற நச்சு பெண்களுக்கு மார்பக புற்று நோயைத் தருவதாகவும், வெயிலில் முகம் கருப்பாக மாறாமல் இருக்க பயன்படுத்தும் அழகு சாதனப்பொருளில் உள்ள ஆக்சி பென்சொன், பெண்களின் சுரப்பிகள் செயல்பாட்டை தடுப்பதாகவும் அறிவியல் ஆய்வேடுகள் தெரிவிக்கின்றன. சோடியம் லாரெட் மன அழுத்த  நோயும், ப்யுடைல் க்ளிக்கோல் கல்லீரல் பாதிப்பையும், ட்ரை கிளோசன் குழந்தை பிறப்பை தடுக்கும் காரணியாகவும் செயல்பட்டு, மக்களை அழகாக மாற்றுகிறோம் என்ற பெயரில்  'அழ வைக்கும்' பொருள்களாக  நம் வீட்டில் குடியேறுகின்றன.

வைட்டமின் -D  சூரிய ஒளி மூலம் அதிகமாக நம் தோலுக்கு, எலும்பிற்கு  வலு சேர்க்கும் நிலையில் சன் ஸ்க்ரீன் கிரீம் என்ற பெயரில் விற்கும் கிரீம்களை பூசுவதால், வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படுவதோடு, தோலின் நிறமும், எலும்பின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

நம் உணவின் மூலமே அழகு தீர்மானிக்கப்படும் பொது புறச் சாயங்களால் அழகு எப்படி நிலை நிறுத்தப்படும்?

உதாரணமாக மஞ்சள் பூசும் பெண்களுக்கு தோலின் நிறம் மேம்படுவதோடு நோய் கிருமிகள் தாக்குதல் தவிர்க்கப்படும். நம்மூரில் கிடைக்கும் வெள்ளரி, தேங்காய்,எலுமிச்சை, நெல்லி , நாவல், கீரைகள், வெந்தயம் போன்றவற்றால் கிடைக்காத அழகா ரசாயனத்தால் சாதிக்க முடியும்? ஏற்கனவே நம் மண்ணை மலடாக்கிய அந்நிய செயற்கை உரங்களும், பூச்சிக் கொல்லிகளும் நம் உடலை  இயற்கையான பலமில்லாமல் செய்து விட்ட நிலையில்  அழகு சாதனப் பொருள்  என்ற பெயரில் வரும் நச்சுக்கள் நம் பாரம்பரிய அழகை அழிக்க ஆயுதமில்லாமல் ஊடுருவி வருகின்றன.

நாம் உண்ணும் உணவே நம்  அழகைத் தீர்மானிக்கும். சைவ உணவு உண்பவர்கள் இயற்கையாகவே அழகான தோற்றத்துடனும், உடல் எடை கூடாமலும் இருப்பார்கள்.  தோல் நிறம் மேம்பட தினமும் 3 லிட்டர் தண்ணீர், பால்,நெய், தயிர், மோர், எலுமிச்சை, மஞ்சள், தேன் , தேங்காய், கீரைகள், பழங்கள், காய்கறிகள், பாசிப்பயறு, பாதாம், வால்நட், கிரீன் டீ உண்டு வந்தாலே தோல் நிறம் மேம்படும். நம்மூர்  வேம்பு, துளசி, வில்வம், மஞ்சள், சோற்றுக்கற்றாழை ,மாவிலை,மருதாணி, செம்பருத்தி போன்றனவற்றில் கிடைக்காத அழகா செயற்கை அழகு சாதனத்தில் இருக்கிறது.

பாரம்பரியமான உணவை மறந்து துரித உணவுகளால் ஏற்பட்ட சோகம் குறையாத நிலையில் அழகு சாதனப்பொருள்கள்  வடிவில் நோய் பரப்பும் வேதிப்பொருள்களை மறக்க வேண்டியது மக்கள் கடமை. அழகு சாதனப் பொருள்களை உபயோகப்படுத்துவதில் பள்ளிக் குழந்தைகளும் தப்பவில்லை. அறுபது வயது ஆண்  கூட தலை முடி கருமையாக்க பயன்படுத்தும் ஹேர் டை புற்று நோய்   தாக்குதலுக்கு உடலை தயார்படுத்தும் நிலை உள்ளது.

இயற்கையான கறிவேப்பிலை, கரிசாலங்கண்ணி, மருதாணி, பீட்ரூட் சாறு, காப்பிச் சாறு, செம்பருத்தி மூலமாக முடியை கருமையாக்க முடியும். அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக  தீராத சோகமான மார்பக புற்று நோய், சர்க்கரை நோய்க்கு நம்மை நாமே தயார் படுத்துவது ஏனோ?

நம் அழகை விட அவசியமானது உடல் ஆரோக்கியமும், நிம்மதியும்தான் என்பதை எப்போதுதான் பெண்கள் புரிந்துகொள்வார்களோ?? . அழகை வாங்க ஆபத்தையும் சேர்த்து வாங்க வேண்டுமா என்பதை பெற்றோர்கள் முன் மாதிரியாக திகழ்ந்து குழந்தைகளுக்கு செயற்கை அழகு சாதன பொருள்களின்  அபாயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். நயன்தாராவும், திரிஷாவும் அழக்காக இருக்கட்டும். அவர்களோடு நம் பெண்கள் போட்டி போட வேண்டுமா? அழகாக இருப்பதை விட அன்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது தான் குடும்ப வாழ்விற்கு முக்கியம்.

நம் பெண்கள் இயற்கையாகவே அன்பும், அழகும் மிகுந்தவர்கள். அன்போடு இருக்கும் பெண் காலம் கடந்தாலும் அழகு தான் என்பது நம் கண்ணெதிரே நிற்கும் நம் தாய் சொல்லும் உண்மை

- எஸ். அசோக்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!