யுவராஜ் விவகாரம்: சிரிக்க வைத்த காமெடி காட்சிகள்! | Yuvraj surrender issue is a shame to Police department

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (14/10/2015)

கடைசி தொடர்பு:19:01 (14/10/2015)

யுவராஜ் விவகாரம்: சிரிக்க வைத்த காமெடி காட்சிகள்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவு வாழ்க்கை நடத்திய யுவராஜ், ஒரு வழியாக போலீசார் மீது இரக்கப்பட்டு போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு (?) விடுதலை அளித்து விட்டார்.

அரசாங்கம் சொகுசு வாகனத்தை வாங்கிக் கொடுத்ததால், இன்றைக்கு அனைத்து போலீசாரும் எந்தத் தெருவில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல், சொகுசாகவே வாகனத்தில் சுற்றி வருகிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், போலீஸ் வாகனத்தின் அருகிலேயே நின்று 'செல்பி போட்டோ' எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டாஸ்மாக் மதுவிற்கு எதிராகப் போராடியவர்கள் மீது தடியடி, குடிநீருக்காக போராடியவர்கள் மீது தடியடி, கண்பார்வை அற்றவர்களை சுடுகாட்டில் இறக்கி விட்டது போன்ற 'வீரச்' செயல்களால் போலீஸ் மீது மக்கள் நல்ல எண்ணம் கொள்ளவில்லை என்பதும், பொதுமக்களின் நண்பனாக இருக்க வேண்டிய போலீசை  பொதுமக்கள் வெறுப்பாக பார்க்க ஆரம்பித்துள்ளனர் என்பதும் கண்கூடு.

ஒரு வழக்கில் சரண்டர் ஆவேன் என நான்கு நாட்களுக்கு முன்னதாகவே போலீசுக்கு சவால் விட்ட ஒருவரை பிடிக்க, காரை விட்டு இறங்காத இன்ஸ்பெக்டராலும், இன்ஸ்பெக்டருக்கு காபி, டீ  வாங்க மட்டுமே பயன்படும் ஏட்டுவாலும், மத ரீதியில் கலவரம் ஏற்படுத்த, தீவிரவாத செயல்களை அரங்கேற்ற காத்திருக்கும் தீவிரவாதிகளை எப்படி நெருங்க முடியும்?

வடிவேலு ஒரு படத்தில்,  "நானும் ரௌடிதான்யா...!' என்று சொல்லுவது போல "நான்தான் யுவராஜ், என்னை பிடிக்க முடிந்தால் பிடியுங்கள்!" என சவால் விட்டு, தெருவில் சுதந்திரமாக வாக்கிங் போனவரைக்   கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாத போலீசாரால், வட மாநிலக் கொள்ளையர்களையும், தீவிரவாதிகளையும் எப்படி அடையாளம் காண முடியும்?

சுமார் ஆயிரம் போலீசார், இரவு பகலாக வாகனச் சோதனை என்ற பெயரில் பொதுமக்களை விசாரித்து வந்த நிலையில், சாதாரணமாக இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய யுவராஜ், போலீசின் கழுகுப் பார்வைக்கு தப்பியது போலீசாரின் தேடுதல் வேட்டையின் 'அக்கறையை',  மக்கள் விமர்சனம் செய்யும் நிலைக்கு தள்ளி விட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து, ஆயிரக்கணக்கான போலீசார் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தும் யுவராஜை நெருங்க முடியவில்லை என்றால், உளவுத்துறை போலீசின் செயல்பாடும், சட்டம் ஒழுங்கு போலீசின் செயல்பாடும் எந்த அளவிற்கு உள்ளது என்பதே கேள்விக்குரியதாக உள்ளது. உள்ளூரில், தொலைக்காட்சிக்கு நேரடி பேட்டி கொடுப்பவரையே கண்டுபிடிக்க முடியாத போலீசாரால், அதிநவீன தொலைதொடர்பு சாதனம், ஆயுதம் கொண்ட பாகிஸ்தான் தீவிரவாதி தமிழகத்தில் ஊடுருவி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பார்கள்?

காவல் துறைக்கு சவால் விடும் ராமஜெயம் கொலையாளிகள், வெளி மாநிலத்திற்கு தப்பிச்சென்று ஆண்டு கணக்கில் தலைமறைவாக இருந்த அட்டாக் பாண்டி,   போலீசார் மீது பரிதாபப்பட்டு தானாகவே வந்து சேர்ந்த  யுவராஜ் போன்றவர்கள், திறமை இருந்தும் செயல்படாமல் உள்ள போலீசின் செயல்பாட்டையும், உயர் அதிகாரிகளின் உத்தரவு ஒன்றையே போலீசார் வேதவாக்காகக் கொண்டு செயல்படுவதையும் நிரூபித்து விட்டார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது.

விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை வாயில் துப்பாக்கியை வைத்து சுடுவது, போலீசாரை அவதூறாகப் பேசினாலே கைது செய்  என்று மிரட்டும் தொனியில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக  சொல்லும் தமிழக போலீஸ் அதிகாரிகளால், தினமும் ஊடகத்தில் பேட்டி கொடுத்தும், அறிக்கையாக பத்திரிகைகளில் செய்தி  கொடுத்து வந்தவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது  நம்பமுடியாத உண்மையாக உள்ளது.

போலீசிடம் அப்பாவிகள் சிக்கினால் பொய் வழக்கு, லாக் அப் மரணம், ஏழைகள் சிக்கினால் என் கவுன்ட்டர் என பீதியை போலீசார் கொடுப்பதும், குற்றமே செய்திருந்தாலும் நீதிமன்றம் வசம் ஒப்படைக்காமல் அடித்துக் கொல்வதும், போலீசாரின் தவறான அணுகுமுறையை எடுத்துக் காட்டி வருகிறது. மேலும் ஜாதி, அரசியல் பலமுள்ளவர்கள் போலீஸ் வசம் சிக்காமல் தொலைக்காட்சியில் தோன்றலாம், வாட்ஸ் அப் மூலம் பேட்டி கொடுக்கலாம் என்பதும் போலீசாரின் திறமைக்கு விடப்படும் சவாலாகவே கருதவும் வேண்டும்.

சோதனைச் சாவடிகளின் பயன் என்ன? சோதனைச் சாவடியில் போலீசார் பணியில் இல்லையா? போலீசாரால் அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி யுவராஜ் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதேன்? உளவுத் துறை போலீசார், நாமக்கல் மாவட்டத்தில் செயல் இழந்து போனதன் பின்னணி என்ன? ஒரு கொலை வழக்கை கண்டுபிடிக்க இவ்வளவு காலம் வீண் என்றால், போலீசின் செயல்பாட்டில் என்ன குறைபாடு, பிரச்னை உள்ளது? போலீசாரின் செயல் திறன், அக்கறை இன்மை, கவனச் சிதறலுக்கு என்ன காரணம்?

சொகுசு ரோந்து வாகனத்தில் செல்வதை விட, இரு சக்கர வாகனத்தில் தெருத் தெருவாக மக்களுடன் போலீசார் இயல்பாக பழகினால் மட்டுமே சட்டம் ஒழுங்கு மேம்படும். போலீசார் எண்ணிக்கையில் மாற்றம் வர வேண்டும் என்பதை விட, போலீசாரின்  திறமையில் மாற்றம் வேண்டும், அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்பதே உண்மை.

- எஸ்.அசோக்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்