வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (23/10/2015)

கடைசி தொடர்பு:15:35 (23/10/2015)

தங்கத்தை சம்பாதிக்கலாம்...உயிரை?

னித வாழ்வில் பேராசையே பெரும் விபத்துக்களுக்கு காரணமாகிவிடுகிறது. உண்ணும் உணவைத் தவிர, வேறு எந்த பொருட்களிலும் நாம் போதும் என்ற அளவுகோலை வைத்துக்கொள்வதில்லை. மாறாக இன்னும் வேண்டுமென்ற ஆவல் வளர்ந்து கொண்டே போகிறது. விளைவு? பேராசை பெரும் நஷ்டத்திற்குள்ளாக்கிறது நம்மை!

''அளவிற்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு" என்ற முதுமொழி உணவுக்கு மட்டுமல்ல, மற்ற எந்த பொருளுக்கும் பொருந்தும். இன்றைய கால கட்டத்தில், புத்திமதிகள் யாராலும் மதிக்கப்படுவதில்லை. சொன்னாலும் ஒரு காதில் வாங்கி, மற்றொரு காதின் வழியாக வெளியேறி விடும்.

இன்று தங்கம் என்பது அணிகலன் என்பதை தாண்டி சேமிப்பாகவும் வளர்ந்து விட்டதால், அதன் மீதுள்ள மோகம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு மிகமிக முக்கிய காரணம் மத்திய அரசு. ஆன்லைன் வர்த்தகம் என்ற வலையில், தங்கத்தை சிக்க வைத்து, தினசரி விலை பேசும் வர்த்தக பொருளாக மாற்றி விட்டதால் ஒரு புறம் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டேயிருக்க, தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிய வண்ணம் உள்ளது. மாற்று வழி தெரியாமல் சாமான்ய மக்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இந்த பணக்கார விளையாட்டை அவர்களால் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக் கொண்டு இருக்க முடியும். பணக்காரர்களும், வியாபாரிகளும் தங்கத்தை சேமிப்பாக இருப்பு வைத்துக் கொண்டு, சாமான்ய மக்களுக்கு பூச்சாண்டி வித்தை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு தீர்வு உண்டா என்றால், உண்டு எனலாம். ஆனால் "ஆசை துறந்தால் அகிலம் உனக்கு...!' என்ற புத்தரின் ஞான வாக்கை பின்பற்றினால் மட்டுமே.

சில வருடங்களுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப படிப்பில் அசுர மாற்றம் ஏற்பட்டு, கிராமத்திலிருந்து வந்து படித்த பாமரன் கூட இன்ஜினியர்களாகி, கை நிறைய சம்பளம் பெற்ற சூழ்நிலை உண்டானது. அதன் விளைவு திருமணங்களில் வரதட்சணை கொடிகட்டிப் பறந்தது. இத்தனை பவுன் நகை வேண்டும், பணம் வேண்டுமென்று கெடுபிடிகள், தங்கத்தின் விலையேற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம்.

அதை விட பெரிய காரணம், லஞ்சம் வாங்கும் ராஜாக்கள் முதல்,  கொள்கை இல்லாத அரசியல்வாதிகள் என அனைவரும், வீட்டிலும் சேப்டி லாக்கரிகளும் தங்கத்தை கிலோ கணக்கில் பதுக்க ஆரம்பித்தனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து நாம் தங்கத்தை டன் கணக்கில் இறக்குமதி செய்து கொண்டேயிருக்கிறோம். ஆனால் ஆசை மட்டும் ஏறிக் கொண்டேயிருக்கிறது.

முன்பு நேரத்தை தங்கத்திற்கு ஒப்பிட்டு, பொன்னான நேரம் என்று கூறினார்கள். இப்போது நேரத்தை விலை மதிப்பில்லாதது என மாற்றி விட்டார்கள். காரணம் தங்கத்தின் நிலையில்லா கொள்கையும் மதிப்பீடும் மாறிக் கொண்டே வருவதுதான். ஒருவரைப் பற்றி குறிப்பிடும் போது இவர் தங்கமானவர் என்று அவரின் குணத்தை பற்றி கூறுவார்கள். நிறத்தை பற்றி கூறும் போதும், தங்கம் போல ஜொலிக்கிறாள் என்று கூறுவதுண்டு. விளையாட்டுத் துறைகளில் பெறும் பதக்கங்களில், தங்கப் பதக்கம் முதன்மையானது. தங்க மங்கை என பாராட்டுவார்கள். அரிதான பல நல்ல விஷயங்களை தங்கம் பெற்றிருந்தாலும், இன்று பல தீய விஷயங்களிலும் தங்கம் பேசப்படுகிறது. அதென்ன?

ஆமாம் தங்கத்திற்காக, கொலை, கொள்ளைகள் மிக, மிக அதிகரித்துக் கொண்டே போகிறது. பாங்கை உடைத்துக் கொள்ளை, நகைக் கடைகளில் கொள்ளை வெளிநாடு களில் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கடத்தல் என பல வழிகளில் தவறுகள் நடப்பதற்கும் தங்கமே காரணம்.

தரத்திற்காக தங்கத்தை உரசிப் பார்த்த காலம் போய், பணத்திற்காக தங்கத்தை கொள்ளையடிக்கும் காலம் வந்து விட்டது. சில நேரங்கள் தங்க கொள்ளைக்காக, கொலைகளும் செய்யப்படுவது மிகவும் வேதனையான விஷயங்களே.

இரவில் மட்டுமல்லாது பட்டப்பகலில் கூட ரோட்டில் தங்க நகைகளை அணிந்து கொண்டு வெளியே தனியாக செல்ல முடியாத சூழ்நிலை வந்து விட்டது. இது எந்த நேரத்திலும் நடப்பதால், அரசால், போலீசால் நமக்கு சரியான பாதுகாப்பு வழங்க இயலாது. அவ்வாறெனில் நமக்கு நாமேதான் பாதுகாப்பு.

தேவைக்கு மட்டும், தேவையான காலங்களில் மட்டும் தேவையான அளவு நகைகளை உபயோகப்படுத்துவதும்,  வீட்டில் வைக்காமல் சேப்டி லாக்கரில் வைப்பதும், அன்றாட தேவைகளுக்கு, திருடர்களை ஏமாற்ற தங்க மாதிரிகளை அதாவது கவரிங் பொருட்களை உபயோகப்படுத்துவதும் பாதுகாப்புதான். முடிந்த வரை தனியாகச் செல்வதை தவிர்ப்பதும், பிறர் பார்வை நம்மீது படும்படியாக நகைகள் அணிவதை குறைப்பதும் பாதுகாப்புதான்.

இது தங்கத்துக்கு மட்டுமல்ல, தங்கம் அணிபவரையும் சேர்த்து பாதுகாப்பு வழிமுறைகள். இவைகளை பின் பற்றினால் கூடுமானவரை ஆபத்துகளில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்.

- வி.வெங்கட்ராமன், ( சென்னை)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்