வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (02/11/2015)

கடைசி தொடர்பு:15:33 (02/11/2015)

அகத்தியர் தரித்த சிவபெருமானின் திருமணக்கோலம்!

சிவபெருமானின் திருமணம் கைலாயத்தில் நடந்தபோது அனைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்களும் அங்கு கூடியதால் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது.  இதனால் நிலைகுலைந்த தேவர்கள் உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினர். அவர் அகத்திய முனிவரை அழைத்து, "நீ தென்திசைக்கு சென்று உலகை சமநிலைப்படுத்து!" என்று கேட்டுக் கொண்டார்.

உடனே அகத்தியர் பணிந்து வணங்கி,  " ஈஸ்வரா, தங்கள் திருமணக் கோலத்தை தரிசிக்க இவ்விடம் முனிவர்களும் ரிஷிகளும் கூடி நிற்க, நான் என்ன பாவம் செய்தேன்... எனக்கு இந்த பாக்கியம் கிடையாதா?" என்று மன வேதனையுடன் கேட்டார். அதற்கு சிவபெருமான், "தென் திசையில் நீ எந்த இடத்தில் இருந்து உலகை சமநிலைப்படுத்துகிறாயோ அங்கு நான் உனக்கு திருமணக் கோலத்தில் காட்சி தருவேன்" என்று சொல்லி அனுப்பினார்.

இதனை ஏற்றுக் கொண்ட அகத்திய முனிவர், தென்திசை நோக்கி வந்தபோது வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில், வன்னிமரத்தடியில் தவம் மேற்கொண்டார். அப்போது உலகம் சமநிலை அடைந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அகத்தியர், இறைவனின் திருமண தரிசனம் கிடைத்திட இந்த ஊருக்கு அருகாமையில் உள்ள அகஸ்தியன் பள்ளியில் தங்கி, வேதாரண்யத்தில் இறைவன் தரிசனம் வேண்டி தியானித்து வணங்கி வந்தார்.

பக்தர்களின் மனக்குறையை, தாயினும் மேலாய் பரிந்து வந்து நிறைவேற்றும் தென்னாடுடைய சிவன், அகத்தியர் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு வேதாரண்யத்தில், பார்வதி தேவியுடன், திருமணக் கோலத்தில் காட்சி அளித்தார். பின்னர் அகத்தியருக்கு ஈஸ்வரன் பட்டம் கொடுத்து,  "இனி நீ அகத்தீஸ்வரன் என அழைக்கப்படுவாய்!" என அருள்புரிந்தார்.

இந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில், வேதாரண் யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சப்தமி திதியில் அகத்தியருக்கு சிவபெருமான் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இங்கு சிவ பெருமான், சிவலிங்கத்திற்கு பின்புறம் சிலையாக தம்பதியராய் அமர்ந்து காட்சி கொடுப்பது சிறப்புடையது. இங்கு சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஆண்டுக்கு ஒரு முறை அபிஷேகம் நடைபெறும். அப்போது கையால் அரைத்த சந்தனம் பூசப்படும்.

நவக்கிரகங்கள்

வேதாரண்யம் கோவிலில் இறைவனின் திருமணக் கோலத்தை தரிசிப்பதற்காக மற்ற கோவில்களில் உள்ளது போல் இல்லாமல், தங்கள் வக்ர அமைப்பை விட்டு, இங்கு அனைத்து கோள்களும், நேர் பக்க வரிசையில் இறைவனின் திருமணக்கோலத்தை தரிசிப்பது போல் காட்சி தரும் வகையில் அமைந்துள்ளன.

அதனால் இங்கு வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழ்கிறார்கள்

- அ.அப்பர்சுந்தரம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்