வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (13/11/2015)

கடைசி தொடர்பு:11:54 (13/11/2015)

செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் சென்னை விமான நிலையமும்; வேதனை...வேதனை!

நாகப்பட்டிணம் நகரின் மையத்தில் உள்ள தாமரைக்குளம் பல வருடங்களாகவே  பாழ்பட்டு கிடந்தது. குப்பை, புதர்கள், பன்றிகள் உள்ளிட்டவைகள்   குடிகொண்டிருந்ததையே காண முடிந்தது.

காரைக்காலில் உள்ள அம்மையார் குளம் புனரமைக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கனோர் நடைபயிற்சியும் மாலை வேளையில் குழந்தை கள், மற்றும் குடும்பத்தினருடன்  மனமகிழ்வுடன் அளவளாவ வாய்ப்பு கள் இருப்பது போன்று சுகாதார சீர்கேட்டின் அடையாளமாக திகழ்ந்த நாகப்பட்டிணம் தாமரைக் குளத்தையும், மாற்ற மாட்டார்களா என ஏங்கினர் மக்கள்.

நாகை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக தமிழக அரசும், ஓ.என்.ஜி.சி. நிறுவனமும் இணைந்து சுமார் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அழகுப்படுத்தும் பணியை துவக்கியது.

தாமரை குளத்தை தூர்வாரி, நான்கு புறங்களிலும் சுற்றுச்சுவர் எழுப்பி, நடைபாதை, பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, மின்னொளி அலங்காரம், குளத்தின் நடுவே மண்டபம் அமைத்து பகலிலும் இரவிலும் ஒளிரும் வகையில் வண்ணமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுற்றது.

இதனால் நாகை நகரத்திற்கு மட்டுமல்லாமல் அதனை சுற்றி உள்ள நாகூர் தர்கா, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், சிக்கல் முருகன் கோவில் உள்ளிட்ட  புனித தலங்களுக்கு தினந்தோறும் வரும் பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் பயன்படுத்துவார்கள்  என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் திறப்பு விழாவிற்கு முன்பே கரைகள் சரிந்து, நாகை மக்களின் கனவையும் தகர்த்தது.

தங்கள் அஜாக்கிரதையாலும் இன்னபிற காரணங்களாலும் பொதுமக்களின் நீண்ட நாள் கனவை தவிடுபொடியாக்கிய  ஒப்பந்தகாரர்களையும் அவர்களுக்கு துணைபோன அதிகாரிகளையும் சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்வதோடு அவர்களிடமிருந்தே நிதியை மீட்டு, மீண்டும் குளத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என நாகை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய பாலங்கள், பூங்காக்கள், கலங்கரை விளக்கங்கள், நீதிமன்ற அலுவலகங் கள், சென்னை ரிப்பன் மாளிகை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையும், அதற்கு முன்பு நமது சேர, சோழ,பாண்டிய மன்னர்கள் காலத்து கோவில்கள், மிக உயரமான கோபுரங்கள் இறுமாப்போடு தலை நிமிர்ந்து  நிற்கும்போது பொறியியலில் அதிக படிப்பு படித்தவர்கள் கட்டும் தாமரைகுளமும் சென்னை விமான நிலையமும் அடிக்கடி பல் இளிக்க என்ன காரணம்??!

ஒன்றும் சொல்வதற்கில்லை...வேதனை...வேதனை!

- அ.அப்பர்சுந்தரம் (மயிலாடுதுறை)
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்