கட்டுரைகள்
Published:Updated:

``எங்கள் கிராமத்துக்குள் நாங்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை..!’’ - வெள்ள மனசு வெள்ளகவி மக்கள்

வெள்ளகவி மக்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளகவி மக்கள்

பயணம்

அதுவரை வந்த பாதையில் காட்டு மரங்களையும் பாறைகளையும் பார்த்த நாங்கள், இந்தப் பாதையில் ஏலக்காய்த் தோட்டங்களும் வாழைத் தோட்டங்களும் காபித் தோட்டங்களும் என வேறு உலகத்துக்குள் பயணிக்க ஆரம்பித்தோம்.

மழை பெய்ததால் ஏற்பட்டிருந்த ஈரப்பதத்துடன், மலைப்பாதையில் நடக்கும் அந்த நேரம், ‘பேசாம இந்த ஊருக்கே குடி வந்துடலாமா’ என்றெல்லாம் யோசிக்க வைத்தது. அதாவது, இயற்கையின் அழகு அந்த அளவு என்னைப் படுத்தி எடுத்தது.

பொறுமையாக நடந்து, வட்டக்கனலில் இருந்து 8 கிலோமீட்டர் கீழே இறங்கி வெள்ளகவி கிராமத்தின் வாயிலில் வந்தடைந்தோம். அப்போதுதான் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அந்த ஊர்க்காரர்கள் யாருமே செருப்பு அணிந்திருக்கவில்லை.

``எங்கள் கிராமத்துக்குள் 
நாங்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை..!’’ - வெள்ள மனசு வெள்ளகவி மக்கள்

‘‘எங்கள் கிராமத்திற்குள் நாங்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை. இது எங்கள் ஊர் உருவானதாகக் கருதப்படும் 600 ஆண்டுகளாக நாங்கள் பின்பற்றும் வழக்கம்’’ என நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர். ஆனால், நம்மைக் கழற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை என்பது இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவர்களின் பாரம்பரிய வழக்கத்தைக் கெடுக்க யாருக்கும் மனசு வராது. எங்களுக்கும்தான்! வெறுங்காலில் ட்ரெக்கிங் போனதும் சுகமாகவே இருந்தது.

ஆனந்த விகடனில் ‘வேள்பாரி’ தொடர்கதையில் படித்ததாக ஞாபகம். பாதக்குறடு அணிந்து மலையேறும் கபிலரைப் பார்த்துப் பறம்புவாசி இளைஞன் ஒருவன் சொல்வான். ‘‘காலணி அணிவது சமதளத்துக்குத்தான் பயன்படும். ஆனால், மலையேற்றத்துக்குக் காலணிகள் உதவாது. இயற்கையின் அற்புதத்தை உணர முடியாது. கால்களால் மண்ணைக் கவ்வி நடந்தால், மலையன்னை நம்மைப் பிடித்து ஏற்றுவாள்!’’ என்பான்.

கபிலரே மூக்கின் மேல் விரல் வைத்த தருணம் அது. நமக்கெல்லாம் எம்மாத்திரம்! அட, அதன்பிறகுதான்மலையேற்றம் இன்னும் மனசுக்கு, உடம்புக்கு நெருக்கமாக இருந்தது.

``எங்கள் கிராமத்துக்குள் 
நாங்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை..!’’ - வெள்ள மனசு வெள்ளகவி மக்கள்

இவர்களின் அந்த ஆழமான நம்பிக்கைக்குப் பின் அவர்களின் முன்னோர்களும், அவர்களின் கிராமம் முழுவதும் இருக்கும் 24 தெய்வங்களும் இருக்கிறார்கள். ஆனால் இவற்றில் நான்கு தெய்வங்களை மட்டுமே பெண்கள் அருகில் சென்று தரிசிக்கலாமாம். மற்ற கோயில்களின் உள்ளே பெண்களை அனுமதிப்பதில்லை. மேலும், நாம் படித்தோ, படங்களிலோ கேள்விப்படும் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் வீட்டிலிருந்து கிராமத்திற்கு வெளியே தங்கும் அந்தப் பழக்கமும் இவர்களை விட்டு இன்னும் அகலவில்லை என்பதும் கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.

சண்முகம் என்பவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘‘தெய்வங்களின் மீது எங்களுக்குப் பக்தி அதிகம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு சிறிய தவற்றுக்கும் அந்த தெய்வங்களின் தண்டனை கிடைக்கிறது என்பதை நாங்கள் நம்புகிறோம். அதனா

லேயே நாங்கள் கெட்ட வார்த்தை பேசுவது, குடிப்பது என்று தீய பழக்கங்கள் அத்தனையையும் இந்த ஊருக்குள் முற்றிலும் தவிர்க்கிறோம். அதுபோலவேதான் பெண்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்ற கட்டுப்பாடும். இதற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் எங்கள் முன்னோர்கள் நம்பிக்கையை மீறக்கூடாது அல்லவா!’’ என்றார்.

கிராமத்தின் முடிவில் நமக்கெனத் தயார் நிலையில் இருந்த டென்ட்டுக்குள் அடைந்தோம். சுடுசோற்றில் சூடான சிக்கன் குழம்பைப் பிசைந்து அடித்தோம். மத்தியானச் சாப்பாடு; செமத்தியான சாப்பாடு! சாயங்காலம் கடுங்காபிக் கோப்பையைக் கையிலே ஏந்திவிட்டு ஏதோ ஓர் இடத்தில் அமர்ந்தாலும் – காலின் கீழேயும், தலையின் மேலேயும் மலையும், மலை சார்ந்த பகுதியும் மட்டும்தான். ரசிக்க இரண்டு கண்கள் போதவில்லை. மலைகளின் இளவரசியான கொடைக்கானலின் இதயம் என்றால் சும்மாவா!

``எங்கள் கிராமத்துக்குள் 
நாங்கள் செருப்பு அணிந்து செல்வதில்லை..!’’ - வெள்ள மனசு வெள்ளகவி மக்கள்

வெள்ளகவியில் 100 குடும்பங்களுக்கு மேல், 450 மக்கள் வரை வாழ்கின்றனர். இங்கிருக்கும் பலருக்கும் விவசாயம் மட்டுமே பிரதான தொழில். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறிதளவு ஏலக்காய்த் தோட்டமாவது உள்ளது. காபிக் கொட்டைகளும், வாழைத் தோட்டங்களும் என விவசாயம் சார்ந்த வேலைகள்தான் இவர்களின் வாழ்வாதாரம். விளைவிக்கும் பொருள்களைத் தலையில் சுமந்தோ, குதிரையில் வைத்தோ மேலே கொடைக்கானலுக்கு அல்லது கீழே பெரியகுளத்திற்குக் கொண்டு சென்று விற்கின்றனர்.

பொருள்களை விற்பது மட்டும் சிரமம் இல்லை. இந்த கிராமத்தில் அவசர நிலைக்கு என மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததும், தாங்கள் வெளியுலகைத் தொடர்பு கொள்ள சரியான சாலை வசதி இல்லாததும் தங்களுடைய பெரும் சிரமமாகக் கருதுகின்றனர். ஆனால் இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக் கல்வியாவது முடிக்க வைத்துவிடுகின்றனர்.

இருட்டியதும், கேம்ப் ஃபயர். இருளைக் கிழித்துக்கொண்டு மஞ்சள் நிறத்தில் மலையே மின்னியது. டின்னர் டைம் வந்தது. கேம்ப் ஃபயரில் ஆடல் பாடல் நிகழ்த்திவிட்டு டென்ட்டுக்குள் என்டர் ஆனோம். ‘திரும்ப 8 கி.மீ நடக்கணுமே’ எனும்போது அயர்ச்சி தெரியவில்லை; உற்சாகமே எழும்பியது.