“சுசீலா அம்மா நல்லா இருக்காங்க... வதந்திகளை நம்பாதீங்க!” பி.சுசீலா தோழி கமலா

பி.சுசீலா

சைத்துறையில் மூத்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர், பி.சுசீலா. சென்னை, ஆழ்வார்பேட்டையில் வசித்துவரும் இவரின் உடல்நிலை குறித்து ஒரு வாட்ஸ்அப் செய்தி இன்று காலை முதல் வேகமாகப் பரவிவருகிறது. அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது என்கிறார் பி.சுசீலாவின் தோழியான கமலா நாராயணன்.

தோழி கமலாவுடன்

“சமீபத்தில், கனடாவில் அம்மாவுக்கு (பி.சுசீலா) விருது மற்றும் பாராட்டு விழா நடந்துச்சு. அதுக்காக ஒரு மாசத்துக்கு முன்னாடியே இந்தியாவிலிருந்து கிளம்பினாங்க. அந்த ஃபங்ஷன் சிறப்பா முடிஞ்சது. அங்கிருந்து அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் போனாங்க. இப்போ, அமெரிக்காவிலிருக்கும் அவங்க உறவினர் வீட்டுலதான் தங்கியிருக்காங்க. கனடா மற்றும் அமெரிக்கப் பயணத்தைப் பற்றி நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை என்கிட்ட ஷேர் பண்ணினாங்க. அடிக்கடி அவங்களோடு பேசிட்டிருக்கேன்.

சுசீலா

இந்நிலையில், அவங்க உடல்நிலை பற்றி இன்னிக்கு ஒரு வதந்தி பரவ ஆரம்பிச்சிருக்கு. அதிலும், கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் சுசீலா அம்மா இறந்துட்டதா ஒரு செய்தியைக் கிளம்பிவிட்டிருக்காங்க. மத்தவங்களும் அது உண்மையானு கன்ஃபார்ம் பண்ணிக்காமலே அடுத்தவங்களுக்கு ஷேர் பண்ணிட்டிருக்காங்க. அதைப் பார்த்து உறவினர்கள், நண்பர்கள் பலரும் சுசீலா அம்மாவுக்குத் தொடர்ந்து போன் பண்ணிட்டிருக்காங்க. ஹைதராபாத் போயிருக்கும் சுசீலா அம்மாவின் பையனுக்கும் தொடர்ந்து போன் வந்துட்டிருக்காம். 

 Susheela

நானும் இந்த வாட்ஸ்அப் வதந்தியைப் பார்த்து ரொம்ப அதிர்ச்சியாகிட்டேன். உடனே சுசீலா அம்மாகிட்ட பேசினேன். 'உங்க உடல்நிலை பற்றி ஒரு வதந்தி பரவிகிட்டிருக்கு'னு சொன்னதும், கொஞ்ச நேரத்துக்கு எதுவும் பேசலை. அப்புறம், 'ஏன் இப்படியெல்லாம் பண்றாங்க. நான் ஊரிலேயே இல்லை. உண்மை என்னன்னு தெரியாமல் இப்படி வதந்தியைப் பரப்புறது சரியா? அடிக்கடி இந்த மாதிரி யாரோ ஒருத்தரின் உடல்நிலை பற்றி வதந்தியைப் பரப்பிவிடறாங்களே, இதனால் இவங்களுக்கு என்ன லாபம்?'னு ஆதங்கத்தோடு பேசினாங்க. 'திட்டமிட்டபடி இன்னிக்கு நைட்டு அமெரிக்காவிலிருந்து கிளம்பி, நாளைக்குச் சென்னைக்கு வந்துடுவேன். வந்ததும் இது பற்றி பேசறேன். அதுவரை என் ரசிகர்களைப் பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க'னு சொன்னார். கொஞ்ச நேரத்துக்கு முன்பாக, 'நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்'னு சுசிலா அம்மாவே பேசி ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்காங்க. 

சினிமா பிரபலங்கள் உடல்நிலை பற்றி அடிக்கடி வதந்திகள் வருவது வழக்கமாகிடுச்சு. அம்மா பற்றி இதுமாதிரி செய்தி வர்றது இதுதான் முதல்முறை என்பதால், பெரிய அளவில் அவங்களைப் பாதிச்சிருக்கு. இதுமாதிரி செய்தியைப் பரப்புறவங்க, சம்பந்தப்பட்ட பிரபலங்கள் மனசும் அவங்க உறவினர்கள், நண்பர்கள் மனசும் எந்த அளவுக்குப் பாதிக்கும், எவ்வளவு துடிச்சுப்போவாங்கன்னு கொஞ்சமாவது நினைச்சுப் பார்க்கணும். இப்போ, நானும் அந்த நிலையில்தான் துடிச்சுப்போயிருக்கேன். மறுபடியும் உறுதியா சொல்றேன், சுசீலா அம்மா பற்றி வந்திருக்கிறது முழுக்க முழுக்க பொய்யான செய்தி. ரசிகர்கள் யாரும் நம்பாதீங்க. அவங்க இன்னும் பல வருஷங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பாங்க'' என்கிறார் கமலா நாராயணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!