`தமிழன்னா தில்லு; காவிரிக்கு ஒண்ணா நில்லு' அரசுப் பள்ளி மாணவி அசத்தல் பேச்சு வீடியோ! #WeWantCMB

`தமிழன்னா தில்லு; காவிரிக்கு ஒண்ணா நில்லு' அரசுப் பள்ளி மாணவி அசத்தல் பேச்சு வீடியோ! #WeWantCMB

காவிரி

காவிரி நதி நீர் பங்கீட்டில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு காட்டும் மெத்தனம் தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட ஓரிரு கட்சிகளைத் தவிர தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் தங்களின் எதிர்ப்பினை வலுவாகப் பதிவு செய்துவருகின்றனர். முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 3-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். நேற்று (ஏப்ரல் 5) திமுக தலைமையில் அனைத்துக்கட்சிகள் விடுத்த, தமிழகம் தழுவிய முழு அடைப்புக்குப் பொதுமக்கள் பெரும் ஆதரவைத் தந்துள்ளனர். வணிகர்கள் மட்டுமல்லாமல், போக்குவரத்து தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவளித்தன. பொதுமக்களும் தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபடுவதையும் பார்க்க முடிகிறது. காவிரி நீதிக்கான போராட்டங்களில் கல்லூரி மாணவர்களும் முனைப்போடும் பங்கேற்றுவருகின்றனர். தமிழகத்தின் உரிமையை விட்டுத்தரக் கூடாது எனத் தீவிரத்துடன் களத்தில் குரல் எழுப்பி வருகின்றனர்.   

தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களின் ஒற்றைக் கோரிக்கை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான். அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் கடந்த பத்து நாள்களாக இதுவே பேசுபொருளாக உள்ளது. அதன் தாக்கம் பள்ளி மாணவர்கள் வரை சென்றடைந்துள்ளது. அவர்களும் காவிரி நதி குறித்த தகவல்களைச் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி வழியே தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் அரசுப் பள்ளி மாணவியான டி.சுபாஷினி. 

 

 

 

காஞ்சிபுரம் மாவட்டம், மாத்தூர் எனும் சிற்றூரில் உள்ள தி.சு.கி. அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிதான் டி.சுபாஷினி. அவர், தான் சேகரித்த செய்திகளைக்கொண்டும், தனது உணர்வுகளையும் செறிவாகப் பேசியிருக்கிறார். தமிழர்களின் ஒற்றுமையே அவர்களின் பெருமை என்பதைப் பாடலோடு தொடங்குகிறார். அதன் பின், காவிரி நதி குறித்து உணர்ச்சி பெருகப் பேசுகிறார். காவிரி நதி நீர் பிரச்னை தஞ்சை டெல்டா பகுதிக்கானது மட்டுமல்ல என்பதைச் சொல்வதோடு, தமிழகத்தின் சுமார் ஐந்து கோடி மக்களுக்குக் குடி நீர் ஆதாரமாக இருப்பதையும் நிலத்தடி நீர் குறைந்து வருவதற்கும் காவிரியில் நீர் வராததற்கும் இருக்கும் காரணத்தை அழகாக விவரிக்கிறார் டி.சுபாஷினி. 

இந்தப் பள்ளியின் ஆசிரியை யுவராணி, மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவுவதோடு, அதை வீடியோவாக்கி உலகை வலம் வரச் செய்யவும் முயற்சி எடுக்கிறார். ஏற்கெனவே, மாணவன் பாடிய கானா பாடலை இவர் வலையேற்றியது, 12 லட்சம் வியூஸைக் கடந்துவிட்டது. கோடைக்காலத்தில் மாணவர்களுக்குப் பயன்தரும் விதத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கவும் திட்டமிட்டு வருகிறார். தலைமை ஆசிரியர் உட்பட மற்ற ஆசிரியர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க, மாணவர்களின் திறமைகள் செழுமையாக்கப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. 

அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வியோடு, சமூக அக்கறை மிக்க சிந்தனைகளோடு வளரும்போது எதிர்காலத்தில் சிறந்த மனிதர்களாக விளங்குவர். அதற்கான அடித்தளத்தைச் செம்மையாக அமைத்துத்தரும் மாத்தூர் தி.சு.கி அரசு மேல்நிலைப் பள்ளி வாழ்த்தப்பட வேண்டியது அவசியம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரும் குரல்கள் இன்னும் இன்னும் அதிகமாகட்டும். காவிரி நதி நீரில் தமிழக உரிமைகள் கிடைப்பது இருக்கும் தடைகள் ஒவ்வொன்றாய் தகர்ந்து, காவிரி தமிழகத்தின் வெப்பத்தைத் தணிக்கட்டும்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!