கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும் பன்றிக்காய்ச்சல்! - தடுக்கும் வழிமுறையைக் கூறும் மருத்துவர் | dengue, swine flu precaution for pregnant ladies

வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (23/11/2018)

கடைசி தொடர்பு:17:18 (23/11/2018)

கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும் பன்றிக்காய்ச்சல்! - தடுக்கும் வழிமுறையைக் கூறும் மருத்துவர்

டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பாதிப்பு ஏற்படுவதற்கான 'ஹை ரிஸ்க்' பட்டியலில் கர்ப்பிணிகளும் உள்ளனர்.

டெங்கு பன்றிக்காய்ச்சல்

கர்ப்பகாலத்தில் இதுபோன்ற நோய்கள் தாக்காமல் இருக்கவும், வந்தால் என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பது குறித்தும் விளக்குகிறார் மகளிர் நல மருத்துவர் சசித்ரா தாமோதரன்.

``டெங்கு, பன்றிக்காய்ச்சல் இரண்டு நோய்களுமே கர்ப்பிணிகளிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நூறு பேரில் 98 பேருக்கு டெங்கு காய்ச்சல் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால், இரண்டு பேருக்கு பாதிப்பு அதிகரித்து தீவிர டெங்கு காய்ச்சலாக மாறும். கர்ப்பக் காலங்களில் முதல் மூன்று மாதங்களில் தீவிர டெங்கு பாதித்தால் கருச்சிதைவு ஏற்படலாம். 6 - 8 மாதங்களில் தாக்குதல் ஏற்பட்டால் கருவிலேயே குழந்தை இறப்பு, குறைப்பிரசவம், குழந்தைப் பிறக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படலாம். தாயிடமிருந்து குழந்தைக்கும் பரவ வாய்ப்பு அதிகம். டெங்கு காய்ச்சலுக்கென்று தடுப்பு மருந்துகள் இல்லாததால் வராமல் தடுப்பதுதான் சிறந்தது" என்கிறார் டாக்டர் சசித்ரா.

பன்றிக்காய்ச்சல் குறித்து கூறுகையில், ``டெங்குவைக் காட்டிலும் பன்றிக்காய்ச்சல் கர்ப்பகாலத்தில் அதிக பாதிப்புகளைக் ஏற்படுத்தும். கருச்சிதைவு, வயிற்றிலேயே குழந்தை இறப்பது, குறைப் பிரசவம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். கர்ப்பக் காலத்தில் வயிறு பெரிதாக இருப்பதால் மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கும். இந்தச் சமயத்தில் பன்றிக்காய்ச்சல் கிருமிகள் நுரையீரலைத் தாக்கும்போது மூச்சுத்திணறல் அதிகமாகி, பிற உறுப்புகளையும் பாதித்து உயிரிழப்பு ஏற்படும். ஒரு வீட்டில் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அந்த வீட்டில் உள்ள கர்ப்பிணிகள் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்களில் இந்த நோய் வேகமாகப் பரவும் என்பதால், திரையரங்கம், ஷாப்பிங் மால், ரயில்நிலையம் போன்ற கூட்டநெரிசல் மிக்க இடங்களுக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நோய் பரவுவதை 80 சதவிகிதம் தடுக்க முடியும். ஆரம்ப அறிகுறிகள் தாமதப்படுத்தாமல் சிகிச்சை அளித்தால் எளிதாகக் குணப்படுத்த முடியும். ஆனால் வருமுன் காப்பதே சிறந்தது" என்கிறார்.

கர்ப்பிணிகளுக்கான முழு ஆலோசனைகள் அடங்கிய டாக்டர் சசித்ரா தாமோதரனின் வீடியோ!