புலி வேட்டையில் சிக்கியதா தமிழ்ராக்கர்ஸ்.காம்? மறுக்கும் அட்மின்கள்! | Admins deny the arrest of Tamil Video piracy giant TamilRockers

வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (08/12/2016)

கடைசி தொடர்பு:18:36 (08/12/2016)

புலி வேட்டையில் சிக்கியதா தமிழ்ராக்கர்ஸ்.காம்? மறுக்கும் அட்மின்கள்!

தமிழ் இணைய மக்களிடையே அறிமுகமான பெயர் 'தமிழ்ராக்கர்ஸ்' என்கிற இணையதளம்.தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் மிகமிக அலர்ஜியான பெயரும் அதுதான். எந்தத் தமிழ்ப்படம் வெளியானாலும் அடுத்தச் சிலமணிநேரங்களில் அது அந்தத் தளத்தில் வெளியாகும். வெளிநாட்டில் இருந்து இயங்கும் குரூப் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருந்த 'தமிழ்ராக்கர்ஸ்' குரூப்பை கோவையில் கைது செய்துள்ளனர் கேரள சைபர் க்ரைம் போலிஸார்.

தமிழ்ராக்கர்ஸ்

திருட்டு சிடி என்பது தனித்தனியாகப் பிரின்ட் செய்து விற்கப்படுவது. அதைத் தடுப்பதும், அதை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் காவல்துறைக்கு எளிதாக இருந்தது. ஆனால் இந்த இணையத்தளத்தை மட்டும் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அதை ஒவ்வொரு முறை முடக்கும் போதும் அதே பெயரில் வெவ்வேறு நாட்டில் இருந்து இயங்கத் தொடங்கினார்கள். டோரண்ட் முறையில் இதைத் தரவிறக்க முடியும் என்பதால் இதை எங்காவது மறைவிடத்தில் சென்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய தொழில்நுட்பத்தில் மொபைல் போனிலேயே தரவிறக்கி எந்தத் தனிநபரும் படங்களைப் பார்க்க முடியும். இதனால் இதை வீடியோ பைரசியினர்  முடக்கியே ஆகவேண்டும் என்கிற முயற்சிகளில் இருந்தனர். மற்றொரு பக்கம் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தினர் தங்கள் ட்விட்டர் கணக்கில் புதுப்படங்களை வெளியிடப்போகும் தேதிகளை முன்கூட்டியே அறிவிக்கும் அளவிற்குச் சென்றனர். திரைப்பட ரசிகர்கள் தங்கள் நாயகர்களின் படத்தைப் போடக்கூடாது என்று தமிழ்ராக்கர்ஸ்களிடம் கோரிக்கைகளை வைக்கத் தொடங்கினர். 

தமிழ்ராக்கர்ஸ்

கடந்த அக்டோபர் 21-ம் தேதி மோகன்லால் நடித்த 'புலிமுருகன்' திரைப்படம் வெளியானது. திரையரங்குளில் நல்ல வசூல் அள்ளிக்கொண்டிருந்த நேரத்தில் புலிமுருகன் தமிழ்ராக்கர்ஸில் வெளியானது. இது குறித்து அதன் தயாரிப்பாளர் தோமிச்சான் கேரள டிஜிபியிடம் புகாரை அளித்தார். உடனே இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கேரள பைரசி தடுப்பு பிரிவுக்கு அவர் உத்தரவு இட்டார். 

கேரள மாநில பைரசி தடுப்புப் பிரிவு தலைவர் இக்பால் கடந்த 50 நாட்களாகத் தமிழ்ராக்கர்ஸ் தளத்தை முடக்கப் பல்வேறு முயற்சி எடுத்தும் முடியவில்லை. இந்நிலையில் அந்தத் தளத்தில் புதிய படங்களைக் கோவையிலிருந்து அப்லோட் செய்யப்பட்டதைக் கண்டுபிடித்த கேரள பைரசி தடுப்பு தலைவர் அந்த வீட்டைச் சுற்றி வளைத்தார். 

இந்த வேட்டையில் ஈடுபட்ட  காவல் அதிகாரி இக்பால் இது குறித்துக் கூறும் போது " புலிமுருகன் தயாரிப்பாளர் தோம்சனின் புகாரின் அடிப்படையில் இந்தக் குழுவினரைத் தேடி வந்த போது இந்தத் தளத்தின் முகவரி சதிஷ், புவனேஷ் மற்றும் ஶ்ரீனி ஆகிய பெயர்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளோம். குற்றவாளிகள் இவர்கள் மட்டுமல்ல இவர்கள் பெரிய கும்பல். தமிழ்நாட்டில் இன்னும் சிலரை கைது செய்ய வேண்டியுள்ளது" என்றார். 

இவர்களின் தமிழ்ராக்கர்ஸ் தளம் இன்னும் செயல்படுகிறதே என்று கேட்ட போது " இவர்களின் தலைமை இலங்கை மற்றும் கனடாவில் இருக்கிறது. விரைவில் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்." என்று இக்பால் நம்மிடம் சொன்னார். 

திரு.இக்பால் இப்படித் தெரிவித்த சில நிமிடங்களிலேயே தமிழ்ராக்கர்ஸின் சார்பில் ஒரு ட்விட் வெளியிடப்பட்டது. அதில் "எங்கள் நிர்வாகிகள் யாரும் கைது செய்யப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்ராக்கர்ஸ்

நிலைமையை பார்க்கும் போது இப்போதைக்கு தமிழ்ராக்கர்ஸுக்கு மூடுவிழா இல்லை என்றே தெரிகிறது. 

-வரவனை செந்தில் 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்