10 டயர் லாரி ஓட்டும் பெண் செல்வமணியின் ஒரு நாள் எப்படி இருக்கும் தெரியுமா?! #Video

செல்வமணிக்கு சொந்த ஊர் சங்ககிரி. தொழில், 10 டயர் கொண்ட டாரஸ் லாரியின் டிரைவர். 14 வருடங்களாக குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா என நெடும் பயணங்களில் கழிகிறது வாழ்க்கை.  குடும்பத்தின் சிரமத்தைப் போக்க, கணவருக்கு உதவியாக கிளீனராக லாரி ஏறியவர், இப்போது முழுநேர டிரைவர். அதுவும், மாநிலம் விட்டு மாநிலம் போய் சரக்கு ஏற்றி இறக்கும் டிரைவர். 

 

செல்வமணி

 

சங்ககிரியில் பெரும்பாலானோருக்குத் தொழில் லாரி ஓட்டுவது தான். கோவை, திருப்பூர் என தொழில் நகரங்கள் சூழ்ந்திருப்பதால் சரக்கு ஏற்றி இறக்க லாரிகளுக்கு தேவை அதிகம். செல்வமணியின் பிறந்தகமும் புகுந்தகமும் டிரைவர் குடும்பம் தான். 

கடன் தொல்லை ஒரு பக்கம்... கணவர் படும் சிரமத்தைக் குறைக்க வேண்டும் என்ற தீவிரம் இன்னொரு பக்கம்... திருமணத்துக்கு முன் சைக்கிள் கூட ஓட்டப்பழகாத செல்வமணி, திருமணத்துக்குப் பிறகு குடும்பச்சூழல் காரணமாக லாரி ஓட்டக் கற்றுக் கொண்டார். வீடியோவின் 44-வது நொடியில் தன் குடும்பச் சூழலையும், தான் பட்ட சிரமங்களையும் பற்றிச் செல்வமணி சொல்லும்போது அத்துயரம் நம்மையும் சூழ்கிறது. 

முதன்முதலில் லாரிக்குக் கிளீனராக., கும்பகோணத்தில் இருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு குஜராத் மாநிலம் போர்பந்தருக்கு பயணித்த அனுபவத்தை மிகவும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொள்கிறார் செல்வமணி. வீடியோவின் 1.47-வது நிமிடத்தில் தன் மனைவியின் திறமையைப் பற்றி செல்வமணியின் கணவர் கோபால் பெருமிதமாக பேசுவது அத்தனை அழகு!  வண்டியில் ஏற்றப்படும் சரக்கை சிறிதும் சேதாரம் இல்லாமல் உரிய  இடத்தில் இறக்க வேண்டும். எந்த சேதாரம் நேர்ந்தாலும் டிரைவர் தான் பொறுப்பு. இழப்பை வாடகையில் குறைத்து விடுவார்கள். தேசிய நெடுஞ்சாலைகளில் அடர் வனப்பகுதிகளில் இதுபோன்ற சரக்கு லாரிகளை எதிர்பார்த்து கொள்ளைக்கூட்டங்கள் இருப்பதுண்டு. எதற்கும் அஞ்சாத அந்தக் கும்பல் சரக்கு பெரிதாக இருக்கும்பட்சத்தில் ஆளையே காலி செய்து லாரியை அபேஸ் செய்து விடுவதும் உண்டு. அப்படியான கொள்ளைக்கூட்டத்தை எதிர்கொண்ட அனுபவமும் செல்வமணி தம்பதிக்கு உண்டு. 

"எனக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேரையும் நல்லாப் படிக்க வச்சுட்டேன். மூத்தவன் எம்பிஏ முடிச்சுட்டு பெங்களூர்ல வேலைக்கு சேந்திருக்கான். சின்னவனும் ஐ.டி ஐ முடிச்சுட்டு வேலை பாக்குறான்.  8 லட்சத்துல ஒரு வீடு கட்டிட்டோம். இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. ரெண்டு வருஷத்துல அதையும் அடைச்சுட்டு நிம்மதியா வீட்டுல உக்காரலாம்ன்னு நினைக்கிறேன்..." என்று செல்வமணி  சொல்லும்போது நமக்குள்ளும் உற்சாகம் துளிர்க்கிறது.  

 

-வெ.நீலகண்டன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!