யாருக்கு என்னென்ன விருது? ஆனந்த விகடன் சினிமா விருதுகள் பாகம் 1 #VikatanAwards | Ananda Vikatan Awards 2016 - Ananda Vikatan Part 1

வெளியிடப்பட்ட நேரம்: 12:41 (27/01/2017)

கடைசி தொடர்பு:13:09 (27/01/2017)

யாருக்கு என்னென்ன விருது? ஆனந்த விகடன் சினிமா விருதுகள் பாகம் 1 #VikatanAwards

ஆனந்த விகடன் சினிமா விருதுகள்

திசைகள் எங்கும் நிறைந்திருக்கும் திறமைக்காரர்களைப் பாராட்டவும் பரவசப்படுத்தவும் விகடன் தவறியதில்லை. கடந்த ஒன்பது வருடங்களாக சினிமாவின் சாதனை நாயகர்களை விருதுகொடுத்து பெருமைப்படுத்திவருகிறது. இந்த வருடத்துக்கான  10-வது ‘ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ புத்தகத்தில் மட்டும் அறிவிக்காமல், பிரம்மாண்ட மேடைக்கு திறமையாளர்களை அழைத்து விருதும் கொடுத்து பெருமைப்படுத்தியிருக்கிறது. விரைவில் அந்நிகழ்ச்சி உங்கள் அபிமான சன் டிவியில் ஒளிபரப்பவும் தயாராகிவருகிறது. கடந்த 2016-ம் ஆண்டுக்கான  சினிமா விருதுகளின் பட்டியலின் முதல் பாகம் முன்னோட்டமாக உங்களுக்கு....! (இரண்டாம் பாகத்திற்கான லிங்க் கடைசியிலேயே இருக்கு பாஸ்)

சிறந்த இசையமைப்பாளர்

சந்தோஷ் நாராயணன் - இறுதிச்சுற்று, கபாலி

ண்டு முழுக்க எல்லா திசைகளிலும் சந்தோஷ் நாராயணின் சாம்ராஜ்யமே! ‘கபாலி’யும் ‘இறுதிச்சுற்று’ம் செம ஸ்பெஷல். தமிழ்நாட்டையே கிறுக்குப்பிடிக்க வைத்தது ‘நெருப்புடா...’ என்றால், ஒவ்வொருவர் மனதையும் மீட்டி உருகவிட்டது ‘மாயநதி...’.

‘இறுதிச்சுற்று’ படத்தில் தனித்துவமாக ஒலித்தது சந்தோஷின் இனிய இசை. ‘ஏ சண்டக்காரா…’ ‘உசுரு நரம்புல…’ பாடல்கள் அதிகாலையின் புதிய காற்றாக வீச, ‘வா மச்சானே…’ எகிறிக் குத்தவைத்தது. படம் முழுக்க பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தினார். இசைஞனின் கைகளுக்கு, இனிய முத்தங்கள். 


சிறந்த ஒளிப்பதிவு

எஸ்.ஆர்.கதிர் - கிடாரி

ரு தெருதான் கதைக்களம். அங்கு இருக்கும் வீடுகளையும் சுவர்களையுமே மனதில் பிரமாண்டமாக்கியது கதிரின் கேமரா. வானம் பார்த்த பூமியில், புழுதி தரித்த கிராமத்தை அதன் இயல்பான நிறத்தோடும் மிரட்சியான குணத்தோடும் திரைப்படுத்தியிருந்தார். கிராமத்து மண்ணில், ஒரு கேங்ஸ்டர் படத்துக்கான கலர் சேர்த்ததில் மிளிர்ந்தது இவரது மேஜிக். காருக்குள் நடக்கும் உரையாடல்களில் இருந்து அரை இருட்டின் பேரங்களையும் கொலைகளையும் இன்னும் கூர்மையாக நமக்குள் கடத்தியது இவரது ஒளியின் மொழி. கையில் வேல்கம்போடு உடல் முழுவதும் எண்ணெய் பூசிக்கொண்டு, சுண்ணாம்புச் சுவர்களுக்கு மத்தியில் வில்லன் கதாபாத்திரம் நடந்து வரும் காட்சி ஏற்படுத்தும் அதிர்வே கதிரின் திறமைக்கு சாட்சி.


சிறந்த படத்தொகுப்பு

கிஷோர், ஜி.பி.வெங்கடேஷ் - விசாரணை

‘விசாரணை’யின் கதையோட்டம் இவ்வளவு ஜீவனோடு இருந்ததற்கு முக்கியமான பங்கு படத்தொகுப்புக்கு இருக்கிறது. முன்னும் பின்னும் இல்லாமல் மத்தியில் தொடங்கிப் பயணிக்கும் கதையை, அவ்வளவு லாகவமாகத் தொகுத்திருந்தது இவர்களின் கத்தரி. லாக்கப் வதைக் காட்சிகளில் இருந்து இறுதி என்கவுன்ட்டர் வரை நீள ஆழங்களைக் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறது இவர்களின் உழைப்பு. கிஷோரின் வெற்றிடத்தை இன்னும் தீவிரமாக உணரவைத்தது இந்தப் படம். இன்னும் கொஞ்சம் கண்ணீரும்… பெருமையும்!


சிறந்த கதை

சுசீந்திரன் - மாவீரன் கிட்டு

மிழ் சினிமா சொல்லத் தயங்கும் கதை. அதை சினிமாவாக்கிய துணிவுக்கும் அக்கறைக்குமே சுசீந்திரனுக்கு சல்யூட். தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்த பிறகும் கடக்க முடியாத ஆதிக்கச் சாதித் தெருக்களைக் கொண்ட ஊரில், தன் மக்களுக்காகப் போராடி தலை நிமிரவைத்த ஒரு தியாக இளைஞனின் கதை `மாவீரன் கிட்டு'. காதல் தொடங்கி கல்வி வரை கரையாகப் பரவிக்கிடக்கும் ஆதிக்கச் சாதி ஆணவத்தை நேர்மையாகப் பேசினான் இந்தக் கிட்டு. கௌரவக் கொலையில் இருந்து கல்வி வரையிலான அடக்குமுறை, அதற்குள் சுழலும் சுயநல அரசியல் என அதிகம் பேசாத, பேசத் தயங்கும் கதையைச் சொல்லியதற்காக சுசீந்திரனுக்கு மரியாதை.


சிறந்த திரைக்கதை

வெற்றி மாறன் - விசாரணை

‘லாக்கப்’ நாவலை சிறந்த சினிமாவாக மாற்றியது, வெற்றி மாறனின் இறுக்கமான, நெருக்கமான திரைக்கதை. நாவலின் நிஜ சம்பவங்கள், ஒரு லாக்கப்பும் அங்கே மாட்டிக்கொண்ட அப்பாவிகளை அடித்துப் பிய்த்து  செய்யாத குற்றத்துக்கான ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் சித்ரவதைகளும்தான். அதையே உயிர்ப்புள்ள திரைப்படமாக மாற்றியது திரைக்கதை. ஆடிட்டர் படுகொலை, போலி என்கவுன்ட்டர் என, சமகால செய்திகளையும் அரசியலையும் மையக்கதையோடு இணைத்தது அழகு. எல்லா தரப்பு ரசிகர்களுக்குமாக எழுத்து இலக்கியத்தை காட்சிமொழியில் சொன்ன வகையில் இந்தத் திரைக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.


சிறந்த வசனம்

ராஜு முருகன், சி.முருகேஷ் பாபு - ஜோக்கர்

`ஒருத்தியோட அன்புக்குச் சமானமா இந்த உலகத்துல ஒண்ணுமே கிடையாதுடா!' என்ற பேரன்பின் சொற்களில், `ஜோக்கர்' நெகிழவைத்தான். `அப்போலோவுக்கு எடுத்துட்டுப் போகணும்னா, அப்புறம் எதுக்கு கவர்மென்ட்? ஓட்டை எல்லாம் அப்போலோவுக்குக் குத்தலாமா?' எனக் கோபத்தைக் கிளறிக் கொதிக்கவைத்தான். `கொடுமை என்னன்னா, நாம யாருக்காகப் போராடுறோமோ, யாருக்காகச் சாகிறோமோ, அந்த மக்களே நம்மள காமெடியனாப் பார்க்கிறதுதான்' என அனல் வசனங்களால், சினிமாவையே போராட்டக்களமாக மாற்றிக்காட்டியது இவர்களின் எழுத்து. `தோழா… நாளை ஒரு போராட்டம்' என நம்மை அழைத்த குரல், தமிழ் சினிமாவில் தனித்து ஒலித்த குமுறல் குரல்; கௌரவிக்கவேண்டிய அசலான மனிதனின் விரல்.


சிறந்த கலை இயக்கம்

அமித் ரே, சுப்ரதா சக்ரபோர்ட்டி - 24

றிவியல் புனைவில் காலத்தையே காதலியாக்கிய கலர்ஃபுல் படத்தில், உழைத்து இழைத்திருந்தது இவர்களின் கலை. டைம் மெஷின், ஆய்வுக்கூடம், கடிகாரம் பழுதுபார்க்கும் பழமையான வீடு, எந்நேரமும் காலத்தை நிறுத்தி மாற்றும் வித்தைக்காரனின் உலகம் என எழுத்துக்களால் உடனே உருவாக்கிவிடக்கூடிய அசாத்தியமான ஒரு கதைக்கு, கற்பனையால் களமும் தளமும் அமைத்துக் கொடுத்த வித்தகர்கள். மலைப்பாதை ரயில் தொடங்கி, குழந்தையை உறங்கவைக்கும் இயந்திரப் பெட்டி வரை பெரிதும் சிறிதுமான நுணுக்கமான வேலைகள் படம் நெடுக... எதற்குமே முன்மாதிரிகள் கிடையாது. அனைத்தையும் அத்தனை துல்லியமாக உருவாக்கியிருந்தது இவர்களின் கலை.


சிறந்த ஒப்பனை

ரோஷன் - காஷ்மோரா

ரலாற்றுப் படம், பேய்ப் படம் இரண்டும் கலந்த ‘காஷ்மோரா’ ஒப்பனைக் கலைஞர்களுக்கு சரியான தீனி. அதைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார் ரோஷன். ஃப்ராடு பேயோட்டி, சரித்திர ராஜ்நாயக் என இரண்டு கார்த்திக்குமான வித்தியாசங்களிலேயே மின்னுகிறது ரோஷனின் திறமை. அதுவும் ராஜ்நாயக்கின் அந்த மொட்டை கெட்டப்பும், அவரே ஆவியாகி வரும்போதுமான ஒப்பனையும் செம மிரட்டல். பயத்தையும் அழகையும் ஒருசேரக் கொண்டுவந்த இவரது ஒப்பனைத் திறமைக்கு, மரியாதை.


சிறந்த நடன இயக்கம்

தினேஷ் - வா மச்சானே - இறுதிச்சுற்று

த்தனை மனங்களையும் ஆடவைத்த எனர்ஜி நடனம். இரண்டு சகோதரிகள் குப்பத்துத் தெருக்களில் போடும் செம குத்தாட்டத்தை, துள்ளத் துடிக்க அமைத்திருந்தார் தினேஷ் மாஸ்டர். ஒழுங்கு இல்லாத ஆனால் உற்சாகம் கொப்புளிக்கும் அசைவுகள்,  நளினம் மறந்த குத்துச்சண்டைப் பெண்களின் முரட்டுத்தனம் வெளிப்படும் ஜாலி அடவுகள் என இது சிம்ப்ளி சூப்பர்ப். ஆர்ப்பாட்டமான செட்டுகள், கண்கள் கூசும் ஒளி அமைப்புகள் இல்லாமல் அழுக்குத் தெருக்களில் பிரித்து மேய்ந்த ‘வா மச்சானே…’ ஆட்டம்  மாஸ்… க்ளாஸ்… சியர்ஸ்!


சிறந்த சண்டைப் பயிற்சி

திலிப் சுப்பராயன், கலோயன் வோடனிசரோவ் - தெறி

பாரீஸ் கார்னரில் தெறிக்கும் அந்த ஒரு சண்டைக்காட்சியே போதும், இவர்களின் எகிறியடிக்கும் வேகத்துக்கு. ஆயிரக்கணக்கான வண்டிகள் சீறிப்பாய, வில்லன்களை, விஜய் விரட்டி விரட்டி அடிக்கும் லாகவம், தேர்ந்த கலைஞர்களுக்கான நேர்த்தியை வெளிப்படுத்தியது. எக்கச்சக்க மிரட்டல்களோடும் கொஞ்சம் நகைச்சுவையோடும் எடுக்கப்பட்ட அந்தச் சண்டைக்காட்சி செம! இரவில் கொட்டும் மழையில் வில்லன்களை அடித்துத் துவைப்பது, க்ளைமாக்ஸில் வெறியேறி வெளிநாட்டு வில்லனை வெளுத்தெடுப்பது என ‘தெறி’ முழுக்கப் பொறி பறக்கவைத்தது இவர்கள் இணை.


சிறந்த ஆடை வடிவமைப்பு

வி.அனுவர்தன், நிரஞ்சனி அகத்தியன் - கபாலி

நாயகன் அணியும் கோட்கூட அரசியல் ஸ்டேட்மென்ட்தான் என்கிறபோது, ‘கபாலி’யின் ஒவ்வோர் உடையையும் பார்த்துப் பார்த்து நெய்திருந்தார்கள். ரஜினியின் மேச்சோவை வெளிப்படுத்தும் லினன் உடைகளைத் தேர்ந்தெடுத்ததில் தொடங்கி, ஃப்ளாஷ்பேக் ரஜினிக்கு அந்தக் கால டிராகன் சட்டை பிடித்தது, மனவலிமை உள்ள எளிமையான பெண் என்பதைச் சொல்லும் ராதிகா ஆப்தேவின் உடைகள், மலேசியத் தமிழர்களின் உடைகள், தன்ஷிகாவின் சீற்றமான ஆளுமை, கலையரசனின் குணத்தைப் பிரதிபலிக்கும் வகையில் என, படத்துக்கே ஆடை வடிவமைப்பு பெரிய பலம்.


சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்

ஜூலியன் ட்ராசெல்லியர் - 24

டம் முழுக்க விஷுவல் எஃபெக்ட்ஸ் ஒரு கதாபாத்திரம். டைம் மெஷின் கதை என்பதால், அவ்வளவு வேலை. அதைப் பிரமாதமாகச் சாத்தியப்படுத்தின ஜூலியன் ட்ராசெல்லியர் அணியின் கணினி விரல்கள். பெய்யும் மழையை நிறுத்திவைத்து, அந்தரத்து மழையைத் தட்டிப்பார்த்து, கிரிக்கெட் மேட்ச்சை நிறுத்திவைத்து, மலிங்காவிடம் இருந்து கேட்ச்சைத் தட்டிப்பறித்து, துப்பாக்கியில் இருந்து கிளம்பிய குண்டை உறையவைத்து இடம் மாற்றி என படம் நெடுக விளையாடியது இவரது தொழில்நுட்பம். இந்த மாதிரியான படங்களில் நம்பகத்தன்மை ஏற்படுத்துவது பெரிய வேலை. அதை அழகாகச் செய்திருக்கிறார் ஜூலியன் ட்ராசெல்லியர்.


சிறந்த பாடலாசிரியர்

தாமரை - தள்ளிப்போகாதே - அச்சம் என்பது மடமையடா

‘தள்ளிப்போகாதே…’ புதிய தலைமுறைக்கான தாமரையின் இனிய தமிழ். இந்த வருடம், இதுதான் இளைஞர்களின் பேரன்பு ஆன்த்தம். இதயங்களின் நெருக்கத்தில் நெடுஞ்சாலைப் பயணத்தில் திடுக்கென வரும் பிரமாதமான மெட்டில், வானவில்லைக் குழைத்திருந்தது தாமரையின் பேனா. `கடல்போல பெரிதாக நின்றாய் நீ… சிறுவன் நான் சிறு அலை மட்டும்தான் பார்க்கிறேன்… பார்க்கிறேன்…’ என, பாடல் முழுக்க மின்மினி ஹைக்கூக்கள். மார்பின் வேகம்கூட, பல மில்லியன் செவிகளை மலர்த்திப்போட்டது ‘தள்ளிப்போகாதே..!’


சிறந்த பின்னணிப் பாடகர்

பிரதீப் குமார் - வானம் பார்த்தேன், மாயநதி - கபாலி

ரண்டு பாடல்களையும் பாடியவர் வெவ்வேறு பாடகர்கள் என்றால் நம்பலாம். ‘மாயநதி’யில் அகம் திறந்து பாடிய குரல், ‘வானம் பார்த்தேன்’ பாடலில் தனிமையின் துயரில் ஒடுங்கி ஒலிக்கும். ‘மாயநதி’ முழுக்க பிரிவுத்துயர் நீங்கிய காதலனின் மகிழ்ச்சியைத் தன் மாயக்குரலால் உருகவிட்டவர், மற்றதில் கண்ணீரின் வலியைக் கசிய விட்டிருப்பார். கேட்கும்போதே உள்ளே புகுந்து உலுக்கும் மேஜிக்கைச் செய்யும் பிரதீப்பின் குரல்… சோல்ஃபுல்!


சிறந்த பின்னணி பாடகி

நந்தினி ஸ்ரீகர் - கண்ணம்மா கண்ணம்மா - றெக்க

‘அக்கா, ஐ லவ் யூ!’ என அப்பாவியாகச் சொல்லும் சிறுவனுக்கும் அந்தப் பெண்ணுக்குமான தாய்மை கலந்த தூய்மையான அன்பை வெளிப்படுத்தும் பாடல். அதில் அவ்வளவு இனித்தது, நந்தினி ஸ்ரீகரின் நகாசுகள் அற்ற அழுத்தமான, அழகான குரல். ‘உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே...’ என உச்ச ஸ்தாயியில் ஊடுருவும் மலர்ச்சி, நந்தினி ஸ்பெஷல். நந்தினியின் இந்தக் `கண்ணம்மா' பாட்டுதான், இந்த வருடம் தமிழ்நாட்டின் இனிய தாலாட்டு.


சிறந்த தயாரிப்பு

ஜோக்கர் - ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

‘ஜோக்கர்’ படத்தின் திரைக்கதை வடிவத்தைப் படிப்பவர்கள்கூட, பயந்து விலகுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். கழிவறை ஊழல் தொடங்கி கருணைக் கொலை வரை சமகால இந்திய அரசியலைக் கிழித்தெடுத்த இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு, துணிச்சலும் அக்கறையும் வேண்டும். சென்சார் முதல் வியாபாரம் வரை அத்தனை அச்சங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, சமூகக் கோபத்துக்கான ஆயுதமாக சினிமாவை ஏந்திவந்த ஓர் இயக்குநருக்குப் பாதை போட்டதற்காகவே இந்தத் தயாரிப்பாளர்களைப் பாராட்டலாம். எளிமையான, வலிமையான சினிமா. அதைப் போதிய விளம்பரங்களோடு, சப்-டைட்டில் போட்டு எடுத்துச் சென்று வெற்றி பெற்றதில், நிஜமாகவே இவர்கள் தமிழ் சினிமாவின் ட்ரீம் வாரியர்ஸ்.


சிறந்த படக்குழு

இறுதிச்சுற்று

த்தனை பேரையும் வசீகரித்த சர்ப்ரைஸ் சினிமா. குப்பத்துப் பின்னணியில் இருந்து குத்துச்சண்டைக்குப் போகும் ஒரு பெண்ணின் கதை. பெண் இயக்குநர்களால் இப்படியான படங்களை எடுக்க முடியாது என்ற தமிழ் சினிமாவின் பழைய குரல்களை உடைத்து எறிந்தார் இயக்குநர் சுதா கொங்கரா. நிறையத் திட்டமிடல்கள், ஒத்திகைகளோடு எடுக்கப்பட்ட படம். அதனாலேயே இயக்கம், நடிப்பு, கேமரா, இசை என அத்தனை தளங்களிலும் ‘இறுதிச்சுற்று’ மின்னியது. இயக்குநர் சுதா கொங்கராவின் குழுவால் மட்டுமே இப்படி ஒரு திரைப்படம் சாத்தியம்.


அதிகக் கவனம் ஈர்த்த படம்

கபாலி

`வந்துட்டேன்னு சொல்லு... திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என `கபாலி' படத்தின் டீஸரே யூடியூபில் பல கோடி ஹிட்ஸ் அடித்து, ரஜினியின் மீள்வருகையை கெத்தா, ஸ்டைலாகப் பதிவுசெய்தார் இயக்குநர் பா.இரஞ்சித். `கபாலி'க் காய்ச்சல் உலகம் முழுக்கத் தொற்றிக்கொள்ள, `நெருப்புடா... நெருங்குடா!' தீம் பாடலைத் திகட்டத் திகட்ட உச்சரித்தனர் திரை ரசிகர்கள். ரஜினி படங்களுக்கு, இயல்பாகவே ஒரு பரபரப்பு இருக்கும். அதைப் பன்மடங்காகப் பெருக்கின கலைப்புலி தாணுவின் அதிரடியான விளம்பர உத்திகள். ஆட்டோவில், பஸ்ஸில் ஸ்டிக்கர் ஒட்டிய காலம் போய், பறக்கும் விமானத்திலும் பிரமாண்டமாகச் சிரித்தார் `கபாலி'. இந்த ஆண்டில் அதிகம் பேரால் உச்சரிக்கப்பட்ட வார்த்தை `மகிழ்ச்சி!'


இரண்டாம் பாகத்திற்கான லிங்க்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்