வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (27/10/2017)

கடைசி தொடர்பு:14:25 (27/10/2017)

“எம்மா.. தாகமா இருக்கு... ஒருமடக்கு தண்ணி தாம்மான்னு கேட்டானே..!’’ மருகும் தீக்குளித்த இசக்கிமுத்துவின் தாய் #VikatanExclusive #EndKanthuVatti

“சித்திர மாசந்தாம்யா பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு கோயமுத்தூர் போறேன்னு சொன்னான். ரெண்டு புள்ளைங்களையும் வெச்சிக்கிட்டு ஏம்யா தெரியாத ஊருல போயி கஷ்டப்படுற. ரெண்டாவது புள்ளய வேணா இங்க விட்டுட்டு போயா. நாங்க ஆளும்பேருமா பாத்துக்கிடுறோம்னு சொன்னேன். சரிம்மான்னு சொல்லி அட்சயாவ என்கிட்டதான் விட்டுட்டுப்போயிருந்தான். அஞ்சு மாசங்கூட ஆவல. பாவிப்பய இப்படிப் பொண்டாட்டி புள்ளைகளோட தீயில கருகிப்போயிட்டானேயா” தொண்டை அடைக்க அழுதுகொண்டே பேசுகிறார் பேச்சியம்மா. 

கந்துவட்டிக் கொடுமையால் கடந்த திங்களன்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு குடும்பத்தோடு தீக்குளித்து இறந்துபோன காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்துவின் அம்மா பேச்சியம்மாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.

தீக்குளித்த இசக்கிமுத்துவை பத்திரிகையாளர்கள் அழைத்து செல்கிறார்கள்

“எனக்கு மொத்தம் மூணு பசங்கய்யா. எசக்கி ரெண்டாவது மவன். பெரியவனுக்கும், எசக்கிக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. சின்னவன் கோபிக்கு இன்னும் கல்யாணம் ஆவல. எசக்கியோட பொண்டாட்டி சுப்புலெட்சுமி என் மைனி மவதான். சொந்தக்காரப் புள்ள, அதோட நல்லாப் படிச்ச புள்ளைங்கிறதுனாலதான் அவள கட்டி வெச்சோம். படிச்சதுக்கு தகுந்த மாதிரி அவளும் கல்யாணம் ஆனதுலேருந்தே எங்ககிட்ட நல்லபடியாத்தான் இருந்தா. மாமனார், மாமியார்கிட்ட நல்லா மரியாதையாத்தான் நடப்பா. குடும்பத்துல எல்லாரையும் அனுசரிச்சுப் போறபுள்ள. புருசனும் பொண்டாட்டியும் இந்தப் பக்கத்துலதான் ஒரு வீட்ட ஒத்திக்கு எடுத்து தனியா தங்கிட்டு இருந்தாவோ. அவ பாட்டுக்கு வருவா எது வேணும்னாலும் எடுத்துக்கிட்டுப் போவா. ஏதாவது கறிக்கொழம்பு செஞ்சிருந்தான்னா புள்ளக்கிட்ட கொடுத்து விடுவா. அவளப்போலத்தான் எம்பேத்திங்களும். ஆச்சி, தாத்தான்னா அதுங்களுக்கும் அம்புட்டு இஷ்டம். பெரியவ எந்நேரமும் என் காலத்தான் சுத்திச் சுத்தி வந்துட்டே கெடக்கும்” சொல்லிக்கொண்டிருக்கும்போதே விசும்பி அழ ஆரம்பித்துவிட்டார். அவரை இளைய மகன் கோபி சமாதானம் செய்ய சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பேச ஆரம்பித்தார். 

நெல்லை தீக்குளிப்பு சம்பவம்

“எசக்கி காலைல அஞ்சு மணிக்கு வேலைக்குப் போறவன் சாயந்தரம் நாலு மணிக்கிட்டதான் வீட்டுக்கு வருவான். இங்கயும் அப்பப்போ வந்து அப்பனும் ஆத்தாளும் என்ன செய்யுதியன்னு விசாரிச்சுட்டுப் போவான். ஆனா, இந்தக் கடன் வாங்குன விஷயத்தப்பத்தி மட்டும் ரெண்டு பேரும் மூச்சே விடல. சித்திர மாசம்னு நெனக்கென். திடீர்னு ஒருநாளு வந்து இங்க வேல எதுவும் சரியில்ல. கொஞ்ச நாளைக்கு புள்ளைகள கூட்டிட்டு கோயமுத்தூர்ல போய் தங்கிக்குறேன். அங்கனயே எதாவது வேல, சோளியப் பாத்து பொழச்சிக்கிடுதேம்னு சொன்னான். சரி பொண்டாட்டி புள்ளைகளோடதானே போறான். எங்க இருந்தாலும் நல்லபடியா பொழச்சிக்கிட்டா சரிதாம்னு சொன்னேன். கோயமுத்தூருக்கு கௌம்புனதுக்கு அப்பறம்தான் கடக்குட்டிய வேணா என்கிட்ட விட்டுட்டு போ. பேத்தியப்பாக்காம ஒங்கப்பாரால இருக்க முடியாது. நான் புள்ளய பத்திரமா பாத்துக்கிடுதேம்னு சொன்னதும் அட்சயாவ கொடுத்துட்டுப் போனான். அங்க போனதுக்கு அப்பறம் போன் போட்டாவோ. நல்லாத்தான் இருக்கோம்னு சொன்னாவோ” என்றவரிடம் திங்கள்கிழமை கலெக்டர் ஆபீசில் நடந்த அந்தச் சம்பவம் பற்றிக் கேட்டதுமே அதிர்ந்துவிட்டார். “அதமட்டும் கேக்காதய்யா. எனக்குப் படபடன்னு வருது. கை கால்லாம் நடுங்குது” என்றவரை அவராகப் பேசும்வரை போன் லைனிலேயே காத்திருக்க ஆரம்பித்தேன்.

''என்னத்தையா சொல்லச் சொல்லுத. வெளியூர் போயி பொண்டாட்டி புள்ளயோட நல்லபடியா பொழச்சிக்கிட்டு இருக்கானேன்னு பெத்தவ சந்தோஷப்பட்டுக்கிட்டு கெடந்தேன். அப்போதான் ஞாயித்துக்கெழம போன் போட்டு திங்ககெழம காலையில நானும் உன் மருமவளும் திருநெல்வேலி வாரோம். நீ தம்பிய கூட்டிக்கிட்டு பாப்பாவையும் தூக்கிக்கிட்டு வந்துடுன்னு சொன்னான். நானும் புள்ளைக்கு தொக்கு எடுக்கலாம்ன்னு அவளையும் தூக்கிக்கிட்டுப் போனேன். காலைல ஜங்க்ஷன்ல எல்லாரும் ஒன்னா பாத்துக்கிட்டோம். ஒன்னாத்தான் சாப்புட்டோம். ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து கலெக்டர் ஆபீஸ் வரைக்கும் நடந்தேதான் போனோம். போற வழியில என் தங்கச்சியும் வந்திருந்தா. கலெக்டர் ஆபீஸ்கிட்ட இருக்குற ரோட்ட என்னாலயும் என் தங்கச்சியாலயும் தாண்ட முடியல. அப்போ எசக்கிதான் சரி நீங்க இந்த ரோட்டுக்குப் பக்கத்துலயே உக்காந்துருங்க. நான் போய் பெட்டிஷன் கொடுத்துட்டு வந்துடுதேம்னு பொண்டாட்டியையும் புள்ளைங்களையும் கூட்டிக்கிட்டுப் போனான்.

Body

‘பெட்டிசன் கொடுக்கத்தானே போயிருக்கான் கொஞ்ச நேரத்துல வந்துடுவாம்னு நெனச்சிக்கிட்டு இருந்தோம். அப்போதான் ஆத்துல காலு கழுவ போயிருந்த கோபி அடிச்சி பெரண்டு ஓடிக்கிட்டு வந்தான். என்னலே ஆச்சுன்னு கேக்குறதுக்குள்ள எம்மா எசக்கி தீயில கருகிட்டாம்மான்னு சத்தம் போடவும் என் உசுரே அந்துடுச்சு. 'யாத்தே எம்புள்ளங்க இப்புடி தீயில எரியுதுங்களேன்னு' கலெக்டரு காலுல விழுந்து கெஞ்சுனேன். அவரு காருலயே என்னையும் ஏத்திக்கிட்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிட்டாரு. புள்ளைங்க ஒண்ணு ஒண்ணா என்ன விட்டுப் போயிட்டே இருந்துச்சுங்க. செவ்வாக்கிழம எசக்கிய ஆஸ்பத்திரி உள்ள போய் பாத்தேன். 'எம்மா என் கூடவே இருமா. எனக்கு ரொம்ப தாகமா இருக்குதும்மா. ஒரு மடக்கு தண்ணி தாம்மான்னு கெஞ்சுனான்'. டாக்டருங்க யாருமே தண்ணி கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எம்புள்ள தண்ணி கேட்டு கொடுக்க முடியாம தவிச்சிக்கிட்டுக் கெடந்தேன். என்கூடவே இருமான்னு சொல்லிட்டு பாவிப்பய என்ன தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டானேயா” என்றவரின் கதறலும், அன்றைய புகைப்படங்களும் மனதை அறுக்க... தொடர்பை துண்டித்தேன்.


டிரெண்டிங் @ விகடன்