``பாரம்பர்ய கல்வெட்டுகளை இழப்பது நம் தொன்மத்தை அழித்துவிடும்!"- சு வெங்கடேசன் #WorldHeritageDay | World Heritage day special article about Tamil Monuments

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (18/04/2018)

கடைசி தொடர்பு:13:21 (21/04/2018)

``பாரம்பர்ய கல்வெட்டுகளை இழப்பது நம் தொன்மத்தை அழித்துவிடும்!"- சு வெங்கடேசன் #WorldHeritageDay

இந்தியாவின் பழைமையான கல்வெட்டான புலிமான் கோம்பை கல்வெட்டு, கீழடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் எனப் பல வரலாற்று குவியல்கள் உள்ளன. அவற்றில் மீனாட்சியம்மன் கோயில் மட்டுமே வெளியே தெரிகிறது. மற்ற இடங்களையும் மக்களிடையே கொண்டுசேரக்க வேண்டும். தனுஷ்கோடியில் ஒரு மியூசியம் உருவாக்கலாம்.

``பாரம்பர்ய கல்வெட்டுகளை இழப்பது நம் தொன்மத்தை அழித்துவிடும்!

இன்று, உலக பாரம்பர்ய சின்னங்கள் தினம். யுனெஸ்கோ அமைப்பால் உலகில் உள்ள பாரம்பர்யச் சின்னங்களைப் பராமரிக்கும் நோக்குடன்  ஒவ்வோர் ஆண்டும்  ஏப்ரல் 18-ம் தேதி இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஓர் ஊரில் உள்ள  பாரம்பர்யமான கட்டங்கள் வெறுமனே உயிரற்ற ஒன்றாக இருப்பதில்லை. அவை அந்த ஊரின், மக்களின் வரலாற்றைச் சுமந்து நிற்கின்றன. அவற்றைப் பாதுகாக்கவேண்டியது நம் தலையாய கடமை.

சு வெங்கடேசன்

இந்தியாவில் 36 இடங்களை, யுனெஸ்கோ அமைப்பு உலகின் பாரம்பர்யமான இடங்களாக அறிவித்துள்ளது. அவற்றில் கலாசாரப் பாரம்பர்யமிக்க இடங்களாக சில இடங்களையும், இயற்கைப் பாரம்பர்யமிக்க இடங்களாக சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், மகாபலிபுரத்தில் உள்ள பல்லவர் காலத்துச் சிற்பங்கள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட இடங்கள் கலாசாரப் பாரம்பர்யமிக்க இடங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

இவை தவிர, தமிழகத்தில் பாரம்பர்யமான  பல இடங்கள், கோயில்கள் சிதிலமடைந்து வருகின்றன. அவற்றையும் பாதுகாக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். தனுஷ்கோடியில் சிதிலமடைந்து கிடக்கும் தேவாலயத்தின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, அங்கு வாழ்ந்த, வாழ்விழந்த மக்களின் நினைவுகள் நம்மை நிம்மதியிழக்கச் செய்யும். தமிழகத்தின்  முக்கியமான வரலாற்று நாவலான `காவல் கோட்டம்' நாவலை எழுதியவர் சு.வெங்கடேசன். தமிழகத்தின் வரலாற்று நாயகர்களை, வரலாற்றைத் தொடர்ந்து தன் எழுத்துகளில் பதிவுசெய்துவரும் அவரிடம், நமது தமிழகத்தின் நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பது குறித்தும், பாதுகாக்கப்படாமல் சிதைந்துபோன இடங்கள் குறித்தும் பேசினோம். 

World Heritage Day

``நம் தொன்மத்தைக் காப்பாற்றுவதில் அனைவருக்குமே மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அடுத்த தலைமுறையினருக்கு நம் மரபின் வேர்களைச் சுட்டிக்காட்டி, அவற்றைப் பற்றிய விழிப்புஉணர்வை... அவற்றைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு, நமது பாரம்பர்யத்தைக் காப்பதில் சில நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். தமிழகத்தின் மரபான இடங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பராமரிக்கலாம். தஞ்சை மற்றும் நாகையையொட்டிய பகுதிகளை ஒரு குழுவாகவும், மதுரையையொட்டிய, தென் பிராந்தியங்களையொட்டிய பகுதிகளை ஒரு குழுவாகவும், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளை ஒரு குழுவாகவும் பிரித்துப் பராமரிப்பதன் மூலம், பொதுமக்களே அறிந்திடாத வரலாற்று இடங்களையும் அறிந்துகொள்ள வழிசெய்ய முடியும்.  

சிலை

இப்படி மூன்று `ஹெரிடேஜ் சர்க்கிள்' உருவாக்கி அதற்கான வரைபடம் ஒன்றை அரசு கொண்டுவர வேண்டும். நாகப்பட்டினத்தில் உள்ள பழைய புத்த விஹாரங்கள் தொடங்கி தஞ்சாவூரில் உள்ள சரபோஜி அரண்மனை வரை 2000 வருட பாரம்பர்யத்தை மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும். நவீன வாழ்க்கை  முழுக்கவே சினிமா மற்றும்  ஊடகம் சார்ந்து  கட்டமைத்துவிட்டோம். நமக்கு அருகில் உள்ள கற்களின், பாறைகளின் வரலாற்றை, கலை மதிப்பை அறிய மறந்துவிட்டோம். கண்டுபிடிக்கப்படவேண்டிய கல்வெட்டுகள் நிறைய இருக்கின்றன. இதற்கிடையில் கண்டுபிடிக்கப்பட்ட பலவற்றையும் அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

கழுகுமலையில் உள்ள கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளோம். அதை மக்களிடையே கொண்டு செல்லவேண்டியதும் முக்கியம். மிகச் சொற்பமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த இடங்களை, மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்தியாவின் பழைமையான கல்வெட்டான புலிமான் கோம்பை கல்வெட்டு, கீழடி, மதுரை மீனாட்சியம்மன் கோயில் எனப் பல வரலாற்றுக் குவியல்கள் உள்ளன. அவற்றில் மீனாட்சியம்மன் கோயில் மட்டுமே வெளியே தெரிகிறது. மற்ற இடங்களையும் மக்களிடையே கொண்டுசேரக்க வேண்டும். தனுஷ்கோடியில் ஒரு மியூசியம் உருவாக்கலாம்.

இயற்கை

அவை 70-களில் நமக்குத் தெரிய நடந்த ஒரு நிகழ்வு. அந்தப் பகுதியைப் பற்றி அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தவேண்டியது நமது கடமை. பாதுகாக்காமல்விட்டால் நம் வரலாறும் தொன்மமும் நம்மோடு அழிந்துவிடும். அப்படி ஓர் அசம்பாவிதம் நிகழவிடக் கூடாது" என்றார்  வேதனையுடன். 

ஜப்பான் போன்ற ஆசியாவின் பிற நாடுகள் எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்தாலும், தங்களின் தொன்மத்தை இன்னும் கட்டிக்காக்கின்றன. நமது நாட்டிலும் வட இந்தியாவில் பல மாநிலங்கள் அவர்களின் தொன்மத்தை அழியவிடாமல் பாதுகாத்துவருகின்றன. நாமும் நமது தொன்மத்தை அறிந்துகொள்வோம். அதற்கான சாட்சிகளாக விளங்கும் கல்வெட்டுகளையும் புராதன இடங்களையும் பாதுகாப்போம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close