வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (01/11/2018)

கடைசி தொடர்பு:16:08 (01/11/2018)

``அவ டிரெஸ், வண்டி, போன்லாம் பார்த்து அழறோம்!'' - பேரிடர் மேலாண்மைப் பயிற்சியில் பலியான லோகேஸ்வரி குடும்பம்

``அவ டிரெஸ், வண்டி, போன்லாம் பார்த்து அழறோம்!'' - பேரிடர் மேலாண்மைப் பயிற்சியில் பலியான லோகேஸ்வரி குடும்பம்

ஜூலை 13-ம் தேதி... கோவை, நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது. அன்றைய தினம்தான், லோகேஸ்வரியின் குடும்பத்திலும் பேரிடி விழுந்தது. பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்துவந்தாள் லோகேஸ்வரி. பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது, மாடியிலிருந்து பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளிவிட, அதன்பிறகு நடந்தது தமிழகம் அறிந்ததே.

லோகேஸ்வரி

``லோகேஸ்வரியைத் தள்ளிவிட்டவர், எங்களது பயிற்சியாளரே இல்லை" என முதல் குண்டை போட்டது, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம். ``அந்த நபரை நாங்கள் அழைக்கவே இல்லை. அவராகத்தான் வந்தார்" என்று அசால்டாகப் பதில் சொன்னது, கல்லூரி நிர்வாகம்.

வழக்கம்போல, தமிழக அரசு 5 லட்ச ரூபாய் நிதியை அறிவித்து இரங்கல் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட கலைமகள் கல்லூரி, ஆளுங்கட்சியின் ஆசியில் இயங்குவதால், அரசு அறிவித்த நிதியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே நேரில் சென்று வழங்கினார். போலிப் பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார்.

இதெல்லாம் நடந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. லோகேஸ்வரியின் குடும்பத்தினர் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய, நாதே கவுண்டன்புதூர் கிராமத்துக்குச் சென்றோம். சிறிய தோட்டம், அதன் அருகே மிகச் சிறிய ஓட்டு வீடு. அந்த வீட்டில்தான் லோகேஸ்வரி 18 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். லோகேஸ்வரியின் தந்தை, நல்லா கவுண்டர் மற்றூம் தாய் சரவஸ்தியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். வீட்டுக்குள் வேகவேகமாகச் சென்ற சரஸ்வதி, மகளின் போட்டோ ஆல்பங்களை எடுத்துவந்து காண்பித்து, கண்ணீர்விட்டார்.

லோகேஸ்வரி

``எங்களுக்கு ரெண்டு குழந்தைகள். பெரியவன் சுரேஷ், சின்னவ லோகேஸ்வரி. அவளை தாரணினு கூப்பிடுவோம். பையன் ஒன்பதாவது வரைக்கும்தான் படிச்சான். அதுக்கு மேலே படிப்பு வரலை. எங்க வம்சத்துல காலேஜ் போன மொத ஆளு லோகுதான். அவளுக்கு போலீஸ் ஆகணும்னு ஆசை. சின்ன வயசிலிருந்தே ஆம்பளை மாதிரி வளர்த்தோம். ரொம்ப தைரியசாலி. அண்ணனைவிட சாமர்த்தியம் ஜாஸ்தி. போலீஸ் ஆசையில, ஜிம், கபடினு எதையும் விட்டுவைக்க மாட்டா. படிப்பைவிட விளையாட்டுலதான் ஆர்வம் ஜாஸ்தி. `நீ குண்டா இருக்க உனக்கு இது செட் ஆகாது'னு சொன்னால், கேட்கவே மாட்டா. வைராக்கியக்காரி. `என்னால் முடியும்'னு ஆம்பளைகளுக்குச் சரிசமமா நிப்பா. காலேஜ் போக ஸ்கூட்டி வாங்கித் தந்தோம். 15,000 ரூபாய்க்கு செல்போன் வாங்கிக்கொடுத்தோம்.

`போலீஸாகி, அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சுட்டுத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்'னு சொல்லிட்டிருப்பா. அண்ணன் மேலே உசுரு. அந்தக் கொடுமை நடந்தப்போ, என் பையன் டூர் போயிருந்தான். சம்பவம் நடக்கறதுக்குக் கொஞ்சம் முன்னாடி அவனுக்கு போன் பண்ணி, 'டேய் கவனமா இரு. ஆத்துல எல்லாம் பார்த்து இறங்கு. சீக்கிரம் வீட்டுக்கு வந்துரு'னு சொல்லிருக்கா. அவன் பத்திரமா வந்துட்டான். ஆனா, லோகு...." எனப் பேசமுடியாமல் கதறி அழுதார் சரஸ்வதி.

லோகேஸ்வரி

``எனக்குச் சொந்தமா காடு இருந்தாலும், தண்ணி இல்லே. நானும் சம்சாரமும் கூலி வேலை செஞ்சு, கஷ்டப்பட்டுத்தான் பொண்ண படிக்கவெச்சுட்டிருந்தோம். என் மேலே அவளுக்கு ரொம்பப் பாசம். என்னை ஏதாவது சொல்லிட்டா, அம்மாகிட்ட சண்டக்குப் பாஞ்சுருவா. 12-வது முடிச்சதுமே கல்யாணம் கட்டிவெச்சரலாம்னு பார்த்தோம். `நான் படிக்கணும், இனி இந்தப் பேச்சை எடுத்தா வீட்ல இருக்க மாட்டேன்'னு சொல்லி காலேஜ்ல சேர்ந்தாள். அன்னிக்கு காலேஜ் கிளம்பினப்ப, ஏதோ பரீட்சைனுதான் சொல்லிட்டுப் போனா. இந்த விளையாட்டு பற்றி எதுவும் சொல்லலை. தெரிஞ்சுருந்தா விட்ருக்க மாட்டேன். அவளும் ஃப்ரெண்டும் ஸ்கூட்டிலப் போனாங்க. அன்னிக்கு சாயங்காலம் பசங்கதான் எங்களுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொன்னாங்க. காலேஜிலிருந்து யாருமே சொல்லலை. என் மகளே போய்ட்டா. இனி என்ன பேசி என்ன ஆகப்போகுது?" என்று விரக்தியுடன் சொல்கிறார் நல்லா கவுண்டர்.

சகோதரருடன் லோகேஸ்வரி

சகோதரருடன் லோகேஸ்வரி

தாய் சரஸ்வதி, ``தீபாவளிக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடிதான் அவள் பொறந்தா. அவ பொறந்ததிலிருந்து எல்லா தீபாவளியையும் நல்லா கொண்டாடினோம். இந்தத் தீபாவாளிக்கு அவள் இல்லே. காலேஜ்ல அவள் எல்லாரும் செல்லப்புள்ள. துக்கத்துக்கு வந்த முக்காவாசி பேர் எங்களுக்குத் தெரியாதவங்க. எல்லாம் அவளோட நட்பு வட்டாரம். ஃப்ரெண்ட்ஸுக்கு நிறைய பண்ணுவா. ஏற்கெனவே, அவளுக்கு மூணு தடவை விபத்து நடந்திருக்கு. ஸ்கூல் டைம்ல, ஒரு டெம்போகாரன் அடிச்சுட்டுப் போய்ட்டான். பேச்சுமூச்சே இல்லே. இன்னொரு முறை, ஒரு பஸ்காரன் இடிச்சுட்டான். அந்த பஸ்ஸை தனி ஆளா விரட்டிப் பிடிச்சு, செம டோஸ் விட்டிருக்கா.

லோகேஸ்வரி பெற்றோர்

இவ்ளோ பெரிய கண்டத்திலிருந்து தப்பிச்சவள் உசுரு இப்படிப் போய்டுச்சேனு நினைக்கறப்போ தாங்கிக்கவே முடியலை. அவள் காலேஜ் போற நேரம், வர்ற நேரம், டி.வில அவளுக்குப் பிடிச்ச பாட்டு போடற நேரம்னு ஒவ்வொண்ணா நினைச்சு அழுதுட்டிருக்கோம். அவளோட டிரெஸ், வண்டி, போன் எல்லாம் அப்படியேதான் வெச்சுருக்கோம். இப்படிப் பாதியிலே போறதுக்கா 18 வருஷம் வளர்த்து ஆளாக்கினோம்? எதுக்காக அந்த ஆளு தள்ளிவிடணும்? அந்த வீடியோவைப் பார்த்ததும் செத்துப்போயிடலாம்னு தோணுச்சு. கேஸ் போடலாம்னுதான் பார்த்தோம். ஆனா, எங்களை மாதிரி பல தாய், தகப்பன் கஷ்டப்பட்டு அவங்க புள்ளகளைப் படிக்க வெச்சுட்டிருக்காங்க. எங்களால தொந்தரவு ஆகிடக்கூடாதுன்னு விட்டுட்டோம். கவர்மென்ட் 5 லட்சம், காலேஜ்ல 6 லட்சம் கொடுத்தாங்க. பணத்தால் பொண்ணு உசுரு வந்துருமா? போலியான ஒரு ஆளு ஜெயிலுக்குப் போறதுக்காக, என் பொண்ணு உசுரு போகணும்னு இருக்கு. இனியாவது இப்படி நடக்காமப் பார்த்துக்கிட்டா சரி. என் பொண்ணுக்காக நாடே வருத்தப்பட்டுச்சு அது போதும்" எனக் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் அந்தத் தாய்.


டிரெண்டிங் @ விகடன்