பன்னீர்செல்வத்தை இயக்குபவர் இவரா?! - என்ன சொல்கிறார் ரெட்டி? #VikatanExclusive

பன்னீர்செல்வத்தை பின்னால் இருந்து இயக்கியவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி என்றும், அவர் பா.ஜ.க.வின் உளவு ஏஜென்ட் என்றும் சமூக வலைத்தளத்திலும் தகவல்கள் வெளியாகி வைரலானது. யார் அவர் என்று விசாரித்தோம். நீண்ட தேடலுக்குப்பிறகு அவரிடம் பேசினோம். 

 உங்களை பா.ஜ.க.வின் உளவு ஏஜென்ட் என சொல்கிறீர்களோ, அது உண்மையா?

 "நான் பிறந்தது சென்னையில்தான். தொழில்முனைவோர் கூட்டமைப்பு கழகத்தின் தலைவராக இருக்கிறேன். ஓ.பன்னீர்செல்வத்துடன் நீண்ட நட்பு எனக்கு உள்ளது. அது அரசியல் சார்ப்பற்றது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தேன். வர்தா புயலின்போது அவருடைய பணிகளைப் பாராட்டினேன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பன்னீர்செல்வம் எடுத்த முடிவுக்கும் ஆதரவு அளித்தேன். இதைத்தவிர என்னை பா.ஜ.க.வின் உளவு ஏஜென்ட் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள். இதுகுறித்து விளக்கமும் கொடுத்துள்ளேன்" 

நீங்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதன் நோக்கம் என்ன?
 
"ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலாவின் ஆதிக்கம் அ.தி.மு.க.வில் அதிகரித்தது. முதல்வர் பதவி மீது சசிகலாவுக்கு ஆசை ஏற்பட்டது. அதற்காக கட்சியின் பொதுச் செயலாளரானார். அடுத்து அ.தி.மு.க. சட்டசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. மன்னார்குடி குடும்பம் தமிழகத்தில் ஆள்வது எனக்குப்பிடிக்கவில்லை. இதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தேன்"

பா.ஜ.வின் தலைவர்களுடன் நீங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படமும், ரஜினியுடன் எடுத்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறதே?

 "என்னைப்பிடிக்காதவர்களின் செயல் இது. அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை. எனக்கு பா.ஜ.க.வில் மட்டுமல்ல முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் நட்பு இருக்கிறது. அதோடு முன்னணி நடிகர்களுடனும் நட்பில் உள்ளேன். இதனால் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளேன். அதற்காக அவர்களது ஆதரவாளர்கள், உளவாளி என்று சொல்வது எல்லாம் தேவையற்ற செயல். நாட்டில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும் சமயத்தில் என்னைக் குறித்த தவறான தகவலைப் பதிவு செய்து யாரும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்" 

சமூக வலைத்தளத்தில் பதிவான கமென்ட்ஸ்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

"அதையெல்லாம் பார்த்து வருத்தப்படும் அளவுக்கு எனக்கு நேரமில்லை. நான் பிஸியாக இருக்கிறேன்"

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமீபத்தில் எப்போது சந்தித்தீர்கள்?

 "சில நாட்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அப்போது அவரிடம் நிச்சயம் உங்களுக்கு எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு பெருகும் என்று தெரிவித்தபோது ஓ.பன்னீர்செல்வம் சிரித்தார். வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு வந்து விட்டேன். அங்கு அரசியல் பேசவில்லை. பன்னீர்செல்வத்துக்கு கட்சியிலும், மக்களிடையேயும் ஆதரவு அதிகரித்து வருகிறது. இதனால் சசிகலா, மன்னார்குடி குடும்பம் அ.தி.மு.க.விலிருந்து விரட்டியடிக்கப்படும்"

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் உங்களது பெயர் அடிப்பட்டதே?

 "சமூக வலைத்தளத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக பல தகவல்களைப் பதிவு செய்தேன். இதனால் ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் என்னை விமர்சித்தனர். எந்த விமர்சனத்தையும் கண்டுக் கொள்ளப்போவதில்லை"

பன்னீர்செல்வத்தை நீங்கள் இயக்குவதாக சொல்லப்படுகிறதே?

 "நான் சொன்னால் பன்னீர்செல்வம் கேட்பாரா... மக்களுக்கு உண்மை தெரியும்"

- எஸ்.மகேஷ் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!