வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (19/04/2017)

கடைசி தொடர்பு:20:30 (19/04/2017)

“இதுதான் ஜெயலலிதாவின் கனவு!” - அ.தி.மு.க சர்ச்சைகள் குறித்து தீபக்

ஜெயலலிதா

.தி.மு.க-வில் இருந்து தினகரன் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுள்ளார். கட்சியையும் ஆட்சியையும் நடத்த புதிய உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று மூத்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய அளவில் பிரச்னை செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட தினரகன் “நானே ஒதுங்குகிறேன்” என்று சொல்லி சரண் அடைந்துவிட்டார். இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு தீபக்கை நேரில் சந்தித்தோம். அவர் பேசியது.

அ.தி.மு.க-வில் இருந்தும், அதன் தலைமையில் அமைந்த ஆட்சியில் இருந்தும் தினகரன் ஒதுக்கப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

தீபக்அ.தி.மு.க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி. ஆனால், அவர் இறந்தபிறகு அந்தக் கட்சியைக் கட்டிக்காத்து, காப்பாற்றி வளர்த்தது என் அத்தைதான். அவர் ஒன் மேன் ஆர்மியாக இருந்து கட்சியை வளர்த்தார். கட்டுப்பாடாக வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் இறந்தபிறகு 4 முறை தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்ததற்கும் என் அத்தைதான் காரணம். அவர் சசி அத்தையைத் தவிர அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த மற்ற அனைவரையும்  மொத்தமாக ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் இருந்தவரை அவர்களை கட்சியிலும் சரி... ஆட்சியிலும் சரி... தலையிடாமல் பார்த்துக் கொண்டார். ஆனால், அவர் இறந்ததும் சசி அத்தையின் குடும்பத்தினர், குறிப்பாக டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட சிலர் கட்சியைக் கைப்பற்ற நினைத்தனர். அதன்மூலம் ஆட்சியைக் கட்டுப்படுத்த நினைத்தனர். அதை யாரும் விரும்பவில்லை. தமிழக மக்களும் விரும்பவில்லை. அ.தி.மு.க-வின் கடைக்கோடித் தொண்டனும் விரும்பவில்லை. நானும் விரும்பவில்லை. ஆனால், சில காரணங்களுக்காக கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் பொறுமையாக இருந்தனர். ஆனால், தற்போது மக்களின் மனநிலையை, அ.தி.மு.க தொண்டர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு தினகரனை வெளியேற்றி உள்ளனர். அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவை நான் முழுமையாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இதுதான் கட்சிக்கு நல்லது. ஆட்சிக்கும் நல்லது. இப்போதுதான் என் அத்தையின் ஆன்மா நிம்மதி அடைந்திருக்கும். இப்போதுதான் அவருடைய கனவு நனவாகி இருக்கிறது.

ஆனால், ஆரம்பத்தில் சசிகலாவின் தலைமையை நீங்கள் வரவேற்றீர்களே?

ஆம்... நான் வரவேற்றேன். அதற்குக் காரணம், என் அத்தை சசி அத்தையை அவர்கூடவே வைத்திருந்தார். அதனால் நான் சசி அத்தையின் தலைமையை வரவேற்றேன். ஆனால், என் அத்தை தினகரனையோ அல்லது சசி அத்தையின் மற்றக் குடும்பத்தினரையோ பக்கத்தில் வைத்துக் கொள்ளவில்லை. அதனால் நானும் அவர்களை கட்சியில் வைத்துக் கொள்வதை, அவரகள் ஆட்சியில் தலையிடுவதை விரும்பவில்லை. எதிர்த்தேன். இதை நான் ஜூனியர் விகடனுக்கு முதன்முதலாக கொடுத்த பேட்டியிலேயே தெளிவுபடுத்தி இருந்தேனே.

இப்போது சசிகலாவையும், ஒதுக்கிவைப்பதாக மூத்த அமைச்சர்கள் முடிவு எடுத்துள்ளார்களே... அதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

சசி அத்தையின் தலைமையை நான் அன்றைக்கு ஏற்றுக்கொண்டதற்கு காரணம், அப்போது கட்சியை அவரால் கட்டுப்பாடாக கொண்டு செல்ல முடியும் என்று நினைத்துத்தான். ஆனால், அவர் சிறைக்குச் செல்லும் முன், என் அத்தையின் விருப்பத்துக்கு மாறாக, தினகரனைத் துணைப்பொதுச் செயலாளர் ஆக்கினார். அதை நான் விரும்பவில்லை. மேலும் இப்போது சசி அத்தை சிறையில் இருக்கிறார். அவர் இல்லாத நிலையில் கட்சியையும் ஆட்சியையும் என் அத்தையின் கனவு, இலட்சியங்களோடு கொண்டு செல்பவர்கள் கையில்தான் அந்தப் பொறுப்புகள் இருக்க வேண்டும். மாறாக, என் அத்தையால் துரத்திவிடப்பட்டவர்களின் கைகளில் இருக்கக்கூடாது. 

தினகரனுக்கும் உங்களுக்கும் தனிப்பட்ட பகை காரணமாக இப்படிப் பேசுகிறீர்களா?

தினகரனோடு எனக்கு தனிப்பட்ட பகை ஏற்பட ஒரு காரணம்கூட இல்லையே... நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்து ஏதாவது தொழில் செய்திருந்தாலோ... அல்லது அரசியலில் அவருக்குப் போட்டியாக நான் இருந்தாலோ உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கும். அப்படி எதுவுமே இல்லையே. பிறகு எப்படி அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் இருக்க முடியும். அப்படி அவரோடு எந்த விரோதமும் இல்லை. என் அத்தை எப்படி இருக்கவேண்டும் என்று விரும்பினாரோ நான் அப்படி இருக்கிறேன். என் அத்தை கட்சியும் ஆட்சியும் யாரிடம் இருக்க வேண்டும் என்று விரும்பினாரோ அதற்காக நான் பேசுகிறேன். மற்றபடி தினகரனோடு மட்டுமல்ல... சசி அத்தையின் குடும்பத்தில் இருக்கும் யாருடனும் எனக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் இல்லை. விரோதமும் இல்லை.. வெறுப்பும் இல்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, “கட்சிப்பொறுப்பை தினகரனிடம் கொடுத்துவிட்டு நான் ஒய்வு எடுக்கும் முடிவில் இருக்கிறேன்” என சசிகலாவிடம் சொன்னதாக தினகரன் ஊடகங்களிடம் தெரிவித்தாரே?

அத்தை மருத்துவமனையில் அட்மிட் ஆன அன்று இரவு நான் அங்கு இல்லை. அன்று இரவுதவிர மற்ற மூன்று மாதங்களும் நான் மருத்துவமனையில்தான் இருந்தேன். என்னோடு சசி அத்தையின் குடும்பத்தினரும் இருந்தனர். நாங்கள் அனைவரும் அப்போலோ மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் இருந்தோம். ஒருநாள்கூட அத்தை அப்படிச் சொல்லவில்லை. அத்தை சொன்னதாக சசி அத்தையும் யாரிடமும் சொல்லவில்லை. தினகரன் தவிர்த்து சசி அத்தையின் மற்ற உறவினர்கள்கூட தினகரனின் இந்தக் கருத்தை ஏற்கமாட்டார்கள். ஏனென்றால், அவர்களுக்கும் இது முழுப்பொய் என்பது தெரியும். குறுக்குவழியில் கட்சியைக் கைப்பற்ற நினைத்த தினகரன் அவராக கற்பனை கதைகளை அவிழ்த்துவிடுகிறார். அதை யாரும் நம்பப்போவதில்லை.

தினகரனை ஒதுக்கிவிட்டார்கள். இனிமேல் அ.தி.மு.க எந்த வழியில் போகும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? யார் கட்சியிலும்ஜெயலலிதா ஆட்சியிலும் பொறுப்புக்கு வரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அ.தி.மு.க-வில் யார் பொறுப்புக்கு வரவேண்டும்; ஆட்சியை யார் முதல் அமைச்சராக இருந்து நடத்தவேண்டும் என்பது பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அதை உயர்மட்டக்குழு முடிவு செய்யும். ஆனால், இரண்டுமுறை ஓ.பன்னீர் செல்வம் அவர்களை நம்பித்தான் என் அத்தை ஆட்சியை ஒப்படைத்தார். அதனால், அவரே மீண்டும் முதல் அமைச்சராக இருந்து ஆட்சியை நடத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. இல்லை அதைவிட சிறப்பான தேர்வு இருக்கிறது என்று உயர்மட்டக்குழு முடிவு செய்து, அதை பன்னீர் செல்வம் அணியும் ஒத்துக்கொண்டால் அதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. என்னைப்பொறுத்தவரை சசி அத்தையின் குடும்பத்தினர் வரக்கூடாது. அவ்வளவுதான். அதன்பிறகு, தற்போது உடைந்துகிடக்கும் கட்சியை இணைக்க வேண்டும். இரட்டை இலையைக் மீண்டும் பெறவேண்டும். என் அத்தை எப்படி ஆட்சி நடத்தினாரோ, அப்படிப்பட்ட நல்லாட்சியை கொடுக்கவேண்டும். 2019 சட்டமன்றத் தேர்தலிலும் ஜெயிக்கும் நோக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்பதுதான். 

நீங்கள் அ.தி.மு.க-வில் பொறுப்புக்கு வருவீர்களா? 

காலமும் நேரமும் வரும்போது நான் நிச்சயம் கட்சியில் இணைந்து பணியாற்றுவேன். அதுவரை கட்சியின் எல்லா முயற்சிகளுக்கும் பணிகளுக்கும் நான் ஒத்துழைப்புக் கொடுப்பேன். முடிந்தவரை இணைந்து பணியாற்றுவேன். நான் மட்டுமல்ல... இனி தீபாவும் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்று நம்புகிறேன். ஏனென்றால், அவருக்கும் சசி அத்தையின் குடும்ப ஆதிக்கம்தானே பிரச்னையாக இருந்தது. இப்போதுதான் அது இல்லையே. பிறகு ஏன் அவர் தனியாக ஒரு அணியை நடத்தவேண்டும்.

உங்களிடம் அ.தி.மு.க-வில் இருந்து யாராவது பேசினார்களா?

எனக்கு அந்தக் கட்சியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் நண்பர்கள்தான். அதனால், அடிக்கடி பேசுவார்கள். ஆனால், அரசியல், பொறுப்புகள் என்று யாரும் பேசவில்லை. நானும் இதுவரை கேட்கவில்லை.

அ.தி.மு.க-வில் ஏற்பட்ட குழப்பங்களுக்குப் பின்னால் பி.ஜே.பி இருப்பதாகச் சொல்கிறார்களே?

அ.தி.மு.க-வில் தற்போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு சசி அத்தையின் குடும்பம் தான் காரணம். பி.ஜே.பி இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். அதை பி.ஜே.பியினர் மறுக்கிறார்கள். அதுபற்றி எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் இருந்தாலும்கூட, அ.தி.மு.க என்ற  கட்சிக்கு விரோதமாக எதையும் செய்யவில்லையே. போதும் இதோடு பேட்டியை முடித்துக்கொள்வோம். என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டார். 

ஜோ.ஸ்டாலின்


டிரெண்டிங் @ விகடன்