Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளின் உலகத்தை வண்ணமயமாக்கும் காமிக்ஸ் கதைகள்! #WorldBookDay - #GoodRead

வரும் 23ம் தேதி உலக புத்தக தினம். அதற்கு ஏற்ற மாதிரி கோடை விடுமுறையும்  தொடங்கி விட்டது. வகுப்பறை இருண்மைகளில் இருந்து விலகி, குழந்தைகள் கொஞ்சம் சுதந்திரமாக சுவாசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். பள்ளி விடுமுறை தொடங்குவதற்கு முன்பிருந்தே, `கோடையை வீணாக்காதீர்கள்' என்ற `ஹேஷ்டேக்'-கோடு விடுமுறைக்கால விளம்பரங்கள் குவியத் தொடங்கி விட்டன. இசைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடனப்பயிற்சி என மீண்டும் குழந்தைகளை வகுப்பறைக்குள் அடைக்க ஆயத்தமாகி வருகிறார்கள் பெற்றோர். 

உலக புத்தக தினம்

 

குழந்தைகளின் இயல்பே சுயமாக சிந்திப்பது தான். ஆனால், நம் வகுப்பறை அதற்கு இடம் தருவதில்லை. பேசாதே, கேள்வி கேட்காதே என்று குழந்தைகளின் இயல்பை கட்டிப்போடுகிறது. அதிகாலை எழுந்து, அவசர அவசரமாக குளித்து முடித்து, சீருடைக்குள் திணித்து வாகனங்களில் நசுங்கி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு வீடு திரும்பியும் விடுதலை கிடைப்பதில்லை. மீண்டும் வீட்டுப்பாடம், டியூசன்...  

 கோடை விடுமுறையிலேனும் குழந்தைகளை அதன் இயல்போடு இருக்க விடுங்கள். அவர்களது இயல்பான கற்பனைத் திறனையும், செயல்பாடுகளையும் ஊக்குவியுங்கள். குழந்தைகளின் உலகை வண்ணமயமாக்குவது வாசிப்பு.  

அடைபட்டு இறுகிக் கிடக்கும் மனக்கதவுகளைத் திறக்கும் சாவி தான் வாசிப்பு. நம் கருத்தாக்கங்களை கட்டுடைத்து புதிய புதிய தரிசனங்களை உருவாக்கும் வல்லமை வாசிப்புக்கு உண்டு. குறிப்பாக, குழந்தைகள் வாசிப்பின் மூலம் புத்தம் புது உலகத்தைக் கண்டடைகிறார்கள். கட்டமைக்கிறார்கள். 

 

உலக புத்தக தினம்

காமிக்ஸ் புத்தகங்கள் குழந்தைப் பருவத்தைக் குதூகலமாக்குபவை.  தன்னம்பிக்கையையும், கற்பனைத் திறனையும், புதிய சிந்தனைகளையும் உருவாக்குவதில் காமிக்ஸ்களுக்கு இணையில்லை. 

இன்று முன்னணி படைப்பாளிகளாக இருக்கும் பலரும் தங்கள் வாசிப்பை காமிக்ஸ்களில் இருந்து தொடங்கியவர்கள் தான். கடந்த தலைமுறை வரை, எல்லோருக்கும் காமிக்ஸ் வாசிக்கும்  வாய்ப்புகள் வாய்த்தன. இந்த தலைமுறையின் நேரத்தை தொலைக்காட்சிக் கார்ட்டூன் நிகழ்ச்சிகள் பறித்துக் கொண்டன. ஆனால் உளவியலாக, கார்ட்டூன் சேனல்கள் குழந்தைகளுக்குள் விபரீதமான வன்முறையைப் புகுத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்களும், உளவியல் மருத்துவர்களும் அஞ்சுகிறார்கள். குழந்தைகளின் சின்ன விழிகளை தொலைக்காட்சியில் இருந்து விடுவித்து புத்தகங்களால் மென்மையாக ஒற்றியெடுக்க வேண்டும். அதற்கான எளிய வழி, காமிக்ஸ் நூல்கள். 

கிங் விஸ்வா

உலகெங்கும் காமிக்ஸ் நூல்களுக்கு ஏக வரவேற்பு உண்டு. சிறியவர்கள் மட்டுமின்றி அனைத்து வயதினரும் காமிக்ஸ்க்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். ஆனால், தமிழில் அவை விளிம்புக்குப் போய் விட்டன. அதன் அருமை இங்கே உணரப்படவில்லை. 
காமிக்ஸ் சேகரிப்பிலும், அவற்றை இக்கால குழந்தைகள் மத்தியில் கெண்டு சேர்ப்பதிலும் தீவிரமாக  செயல்பட்டு வருபவர் கிங் விஸ்வா. காமிக்ஸ்கள் பற்றிப் பேசினால், மணிக்கணக்கில் உணவு உறக்கம் மறந்து பேசுவார் மனிதர். காமிக்ஸ் உருவான வரலாறு குறித்து விரிவாகப் பேசுகிறார் அவர்.  

"வாழ்வியல் இயக்கங்களை வரலாறாக பதிவு செய்யும் பாணி தொன்றுதொட்டே இருந்து வருகிறது. எழுத்துருக்கள் தோற்றுவிக்கப்படும் முன்பே குகை ஓவியங்கள் மூலமாக அப்போதைய வரலாற்றை பதிவு செய்தார்கள். இதன்பின்னர் பேச்சுமொழி உருவாக, வாய்வழிக் கதைகளாகவும், பாடல்களாகவும் இவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் எழுத்துருக்கள் மூலமாக எந்த ஒரு விஷயத்தையும் துல்லியமாக பதிவு செய்வது சுலபமாகிவிட்டது. இப்படியாக ஓவியங்கள் மூலமாகவும், எழுத்து மூலமாகவும் சம்பவங்களை பதிவு செய்யும் இரண்டு வழிமுறைகள் நம்மிடையே இருந்து வந்தது.

மனிதனின் முதல் தகவல் சேமிப்பு வழிமுறையான ஓவியங்கள் மூலமாக கதையைச் சொல்லும் பாணிக்கு பெயர்தான் காமிக்ஸ். காமிக்ஸ் ஜாம்பவானாகிய `வில் ஐஸ்னர்' காமிக்ஸை `sequential Art' என்று பெயரிட்டு இதற்கென்று ஒரு வரையறையை எழுதினார்: ”ஓவியங்களையும், வார்த்தைகளையும் ஒரு முறைப்படி ஒழுங்கு செய்து, ஒரு கதையை சொல்வதே / ஒரு யோசனையை நாடகப்படுத்துவதே காமிக்ஸ்” என்பது அவரது கருத்து. 

ஒரு காமிக்ஸ் புத்தகத்தைப் படிக்கும்போது, நாமே ஒரு கதை சொல்லியாக மாறுகிறோம். காமிக்ஸ் புத்தகங்கள் கட்டங்களால் (Panels) ஆனவை. ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு கதை நகரும்போது, இந்த இரு கட்டங்களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதியை நமது சிந்தனையின் கற்பனைக்கு என்று விட்டுவிடுகிறார்கள் படைப்பாளிகள். உதாரணமாக டார்ஜான் ஒரு மரத்தின் விழுதைப் பிடித்து தொங்குவதாக ஒரு கட்டத்தில் இருக்கும். ஆனால், அடுத்த கட்டத்தில் அவர் இன்னொரு மரத்தில் இருப்பார். ஆக, இந்த இரண்டு கட்டங்களுக்கு இடையே டார்ஜான் எப்படி சென்றிருப்பார் என்பதை நாம்தான் கற்பனை செய்து, யூகித்துக்கொள்ள வேண்டும். 

ஒரு வரலாற்று புத்தகத்தையோ, அறிவியல் கோட்பாட்டையோ படிப்பது போரடிக்கும். ஆனால், அதுவே காமிக்ஸ் வடிவில் இருந்தால், எளிமையாக வாசித்துவிடலாம். யாராவது காமிக்ஸ் படித்துக்கொண்டிருந்தால், “பொம்மை போட்ட புத்தகத்தைப் பார்க்கிறான்” என்று இன்றும் தமிழகத்தில் கிண்டல் செய்பவர்கள் உண்டு. காமிக்ஸ் என்பது வெறும் பொம்மைப் புத்தகத்தைப் பார்ப்பது மட்டுமல்ல. காமிக்ஸ் படிப்பவர்கள் ஒரே நேரத்தில் காட்சிகள் வாயிலாக, இடம் சார்ந்த மற்றும் கருத்து சார்ந்தவற்றை உள்வாங்கி, அனைத்தையும் ஒருங்கிணைத்து, ஒரு கதையாக கிரகித்துக்கொள்ள வேண்டும். காமிக்ஸ் படிப்பதால் நமது சிந்தனை வலுப்படுகிறது. ஒருங்கிணைந்த புரிதலுக்கான திறன் கூடுகிறது..." என்கிறார் அவர். 

காமிக்ஸ் படிப்பது எப்படி? 
எந்த ஒரு படைப்பையும் போல, காமிக்ஸ் புத்தகங்களை படிப்பதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. வழக்கமாக புத்தகம், நாவல் படிப்பவர்கள் காமிக்ஸ் படிக்கும்போது, அதில் இருக்கும் எழுத்துகளை மட்டும் படித்துவிட்டு, கடந்து சென்று விடுவார்கள். ஆனால், அது சரியான படிக்கும் முறை அல்ல.

உலக புத்தக தினம்

ஓவிய வாசிப்பு 
எழுத்துசார் படைப்புகளில் இருந்து காமிக்ஸ் வேறுபடுவது, ஓவியங்களாலேயே. ஒரு காமிக்ஸ் புத்தகத்தில் 60% முதல் 75% வரை ஓவியங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆகவே, ஓவியங்களைப் படிக்கும் பழக்கத்தை, ஆமாம் – படிக்கும் பழக்கத்தைத்தான் – வளர்த்துக்கொள்ள வேண்டும். ஓவியங்களைக் கூர்ந்து கவனித்து, நிதானமாகப் படிக்க வேண்டும்.

இலக்கணம் 
நல்ல காமிக்ஸ் புத்தகங்களுக்கு என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. ஒரு கதாசிரியர், ஓவியர் வெறுமனே ஒரு ஓவியத்தை வரைந்து விடுவதில்லை. ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருந்து திடீரென்று வேறு கோணத்தில் ஒரு ஓவியம் இருக்கிறதென்றால், அதற்குப் பின்னர் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொரு படைப்பாளியும் தனது வாசகர்களுடன் ஒரு பகடி ஆட்டம் ஆடுகிறார். தனது படைப்புகளில் வெளிப்படையாகத் தெரியும் பேசுபொருளைக் கடந்து வேறொரு கருத்தை முன் வைப்பார். அதை Decode செய்யும் வாசகன், ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்து படைப்பாளிக்கு இன்னமும் நெருக்கமாகிறான்.

 

குழந்தைகள் மட்டுமல்ல... பெரியவர்களும் படிக்க வேண்டிய 5 காமிக்ஸ் கதைகளை பரிந்துரைக்கிறார் கிங் விஸ்வா.  

 1.    ரகசிய உளவாளி

காமிக்ஸ்


கதாசிரியர்: முல்லை தங்கராசன்
ஓவியர்: கஸ்தூரி ராஜா

தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகனும், அசாத்திய கதைசொல்லியுமான முல்லை தங்கராசனின் புதுமையான படைப்பு இது. 1969-ம் ஆண்டு, எம்ஜியாரை ஹீரோவாக வைத்து காமிக்ஸ் கதையொன்றை உருவாக்கி இருக்கிறார் என்றால், அவரது படைப்பூக்கம் பற்றி சிந்தித்துப் பாருங்கள். சரோஜா தேவி, அசோகன் என்று பிரபல திரையுலக நட்சத்திரங்களை வைத்து, எம்ஜியாரின் திரையுலக பிம்பத்தை அதிநாயக லெவலுக்கு மாற்றி எழுதப்பட்ட காமிக்ஸ் தொடர் இது. கஸ்தூரி ராஜாவின் ஓவியத்திறமை அற்புதமாக வெளிப்பட்ட காமிக்ஸ்களுள் இதுவும் ஒன்று. முழு வண்ணத்தில் வந்த காமிக்ஸ்.
 
 2.    கனவா, நிஜமா?

காமிக்ஸ்


கதாசிரியர்: வாண்டுமாமா
ஓவியம்: செல்லம்

தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னரான வாண்டுமாமா, ராஜா ராணி காலத்து கதையில் அறிவியல் புதினத்தை நுழைத்து செய்த அட்டகாசமான காமிக்ஸ் இது. `பிரிமானிஷன்' என்ற எதிர்காலத்தைப் பார்க்கும் சக்தியை மையமாக வைத்து 1979-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த காமிக்ஸ் தொடரின் ஹை லைட்டே ஓவியச் சக்கரவர்த்தி செல்லம் அவர்களின் சித்திரங்கள்தான். கருப்பு வெள்ளையில் வரைய வேண்டி இருந்தாலும், கியாரஸ்க்யூரோ, ஸ்டிப்ளிங், ஷேடிங், கிராஸ் ஹாட்சிங் என்று பல ஓவிய நுணுக்கங்களை இதில் புகுத்தி ஒரு விருந்தே படைத்திருப்பார், செல்லம். 


 3.  நோவா

கதாசிரியர்: சுஜாதா
ஓவியர்: டிராட்ஸ்கி மருது


தமிழின் ஆகச்சிறந்த விஞ்ஞான புனைவு ஒரு கிராஃபிக் நாவல் வடிவில் வந்த நோவா தொடர்தான். 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வார இதழில் எழுத்தாளர் சுஜாதாவும் ஓவியர் மருதுவும்  இணைந்து படைத்த ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் காமிக்ஸ் தொடர் இது. காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்களில் கலரிங் என்றழைக்கப்படும் வண்ணக்கலவை எவ்வளவு முக்கியமானது என்பதை இத்தொடரின் ஒவ்வொரு ஓவியமும் உணர்த்தும். சில படைப்புகளை, நேரத்திற்கு முன்பாக படைக்கப்பட்டது என்று சொல்வார்கள். சர்வநிச்சயமாக நோவா அதில் ஒன்று.

 4.    பஞ்சதந்திரம்

காமிக்ஸ்

கதாசிரியர் & ஓவியர்: புஜ்ஜாய் (பத்மபூஷன் டாக்டர் தேவுலப்பள்ளி கிருஷ்ண சாஸ்திரி)


தென்னிந்தியாவின் மேஸ்ட்ரோ என்றழைக்கப்ப்டும் புஜ்ஜாய்தான் இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் வந்த முதல் இந்திய காமிக்ஸ் தொடரை வரைந்தவர். பஞ்சதந்திர கதைகளை தினமணியில் காமிக்ஸ் தொடராக படைத்தார். நாமெல்லாம் நன்கறிந்த பஞ்சதந்திரக் கதைகளை தனக்கே உரித்தான பாணியில் அனைத்து வயது குழந்தைகளும் ரசிக்கும்படியாக வரைந்தார். மனிதர்களைப் போல விலங்குகளுக்கும் உடையணிவித்ததில் இருந்து பல புதுமைகளைச் செய்தவர் புஜ்ஜாய்.

 5. கிமுவில் சோமு

காமிக்ஸ்


கதாசிரியர் & ஓவியர்: சிம்புதேவன்

ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்த அட்டகாசமான காமிக்ஸ் இது. டைம் மெஷின், காலப் பயணம், பறக்கும் கம்பளம், டைனோசர், சக்கரத்தைக் கண்டுபிடிக்கும் மனிதன் என்று பல விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் அழகாக கோர்த்து உருவாக்கப்பட்ட காமிக்ஸ் இது. தாத்தாவின் கண்டுபிடிப்பான காலப்பயண எந்திரத்தை அவரது மறைவுக்குப் பிறகு தொடர்ந்து மேற்கொள்ளும் சோமுவின் சாகசங்கள் தான் கதை. 

வெ.நீலகண்டன்
 

     

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close