Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐ.டி ஊழியர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும்! #ITLayoffs #ITCrisis

சில நாள்களாக `இந்திய  ஐ.டி துறையில் மிகப்பெரிய அளவில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் நடந்துவருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோரின் வேலை பறிபோகும் ஆபத்துள்ளது' என்ற செய்தி, காட்டுத் தீபோல சமூக ஊடகங்களில் பரவியது. அமெரிக்க அதிபராக ட்ரம்பின் வருகைக்குப் பிறகே இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது. சில ஐடி நிறுவனங்களில், சிறிய நிலையில் இந்த ஆள்குறைப்பு நடவடிக்கையைத் தொடங்கிவிட்டனர் என்றும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில், தானும் ஆள்குறைப்பு நடவடிக்கைக்கு உள்ளாகக்கூடுமோ என நினைக்கும் பாலாஜி என்கிற ஐ.டி நிறுவன ஊழியரிடம் பேசியபோது...

IT Layoffs ஐ.டி

"பெரிய நிறுவனங்கள் ஏன் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புகின்றன  என்றால், இந்திய ஐடி துறை பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்து வரும் பிசினஸை நம்பி இருப்பதும், டொனால்டு டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றபிறகு ஐடி துறைக்கு விதிக்கப்படும் பகாசுரக் கட்டுப்பாடுகளும்தான். இவையே ஐ.டி நிறுவனங்களின் எதிர்காலத்தின் மீது நிலையற்ற  தன்மையை உருவாக்கிவிடுகின்றன.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் மட்டுமல்ல, லாபத்தில் இயங்கும் நிறுவனங்களும் வருடாவருடம் ஆள்குறைப்பு செய்வது வழக்கம்தான். இந்த முறை பல்வேறு காரணங்களால் அந்த நடவடிக்கை மிகப்பெரிய அளவில் இருக்கிறது என்பதாலும், சமூக ஊடகங்களின் தாக்கத்தால் ஊழியர்கள் பயம் இல்லாமல் இதை வெளிப்படையாகச் சொல்ல முன்வருவதாலும் இந்தப் பிரச்னையின் வீச்சு அனைவரையும் எட்டியுள்ளது. 

நீண்ட காலமாகப் பணியாற்றுபவர்கள் மாற்றத்துக்குத் தயாராக இருப்பதில்லை. உதாரணமாக, 2010-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர், கணினிவழி ஜாவா மொழியைக் கையாள்வதில் திறமையானவர். ஆனால் இன்றோ, பைத்தான், ஆர்.புரொகிராமிங், ஸ்கேலா, ஸ்விப்ட், கூகுள் கோ எனப் பல்வேறு புதிய கம்ப்யூட்டர் லாங்குவேஜ்கள் வந்துவிட்டன. அவருக்கோ ஜாவா மட்டும்தான் தெரியும்; அதில் மட்டுமே பணியாற்ற விருப்பம் என்றால், அங்குதான் அவர் தேவையற்றவராகிவிடுகிறார். என்னதான் மிகச்சிறப்பாகப் பணியாற்றுபவராக இருந்தாலும் நிறுவனத்தைப் பொறுத்தவரை அவர் அப்டேட் ஆகாதவராகவே மதிக்கப்படுவார். 

அதிகச் சம்பளம் பெறுபவர்கள் / நீண்ட காலமாக நிறுவனத்துக்கு உழைத்தவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு குறிப்பிட்ட வருட பேக்கேஜுக்கு வந்திருப்பார்கள். ஆனால், அதே வேலையைச் செய்யும் ஒருவரை அவருக்குக் கொடுக்கும் சம்பளத்தில் 60 முதல் 70 சதவிகிதம் கொடுத்தாலே போதும் என்ற நிலை வரும்போது, அவரை வீட்டுக்கு அனுப்ப நாள் குறித்துவிடுகிறார்கள். ஒரு பணியாளர் என்பதைவிட, 50 - 100 பேர் எனக் கணக்குப் போட்டால் அது நிறுவனத்துக்கு மிகப்பெரிய சேமிப்பாக இருக்கும்.

கணக்கில்லாமல் ஆள்களை எடுத்துவிட்டு, அவர்களுக்குத் தகுந்த பணி வழங்க முடியாத நிலை ஏற்படும் நேரத்தில்தான் ஆள்குறைப்பு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட புராஜெக்ட்டுக்கு 100 பேர் தேவை என ஆள்களை எடுத்துவிட்டு, அந்த புராஜெக்ட்டுக்கு 75 பேர் போதும் என்ற நிலை வரும்போது, மீதம் உள்ள 25 பேரை ஓய்வாக வைத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபோல் எந்த புராஜெக்ட்டும் இல்லாமல் இருப்பவர்களை `பெஞ்சில் இருப்பவர்கள்' என்று சொல்வார்கள். இவர்களுக்கு அடுத்த புராஜெக்ட்டுக்குத் தேவையான தொழில்நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்து, அவர்களைத் தயார்படுத்துவதன் மூலம் நிறுவனம் உபயோகப்படுத்த முடியும். ஆனால், இவர்கள் சிறப்பாக இயங்கும் துறை - உதாரணமாக ஜாவா என்றால், அடுத்த புராஜெக்ட்டுக்கு ஜாவா ஆள்கள் தேவையில்லை, ஐபோன் அப்ளிகேஷன் செய்யக்கூடியவர்கள்தான் தேவை எனும்பட்சத்தில், அவர்கள் உபயோகமற்றவர்களாகிவிடுகிறார்கள்.

பணியில் கவனமின்மை மற்றொரு காரணம். 10 பேர் பணியாற்றும் ஒரு குழுவில், ஒன்று அல்லது இரண்டு பேர் ஏனோதானோவாகப்  பணியாற்றுவார்கள். குடும்ப/உறவுச் சிக்கல்கள், திறமையின்மை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். அப்ரைஸல் நேரத்தில், மேலாளர்கள் இவர்களைக் குறிவைத்து அடித்துத் தூக்கிவிடுவார்கள். 

எதிர்பார்த்த புராஜெக்ட்டுகள் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போவதும், மற்ற போட்டி நிறுவனங்கள் பெரிய புராஜெக்ட்டுகளைத் தள்ளிப்போடுவதும், அதனால் பல பணியாளர்கள் வேலையில்லாமல் இருப்பதும் பெரிய காரணங்களே! ஐடி பணியாளர்களுக்கான ஊழியர்கள் சங்கம் எதுவும் இல்லாத / செயல்படாத நிலையில், ஊழியர்களின் மனஉளைச்சலுக்கு என்ன மருந்து? அடுத்த மாத இ.எம்.ஐ எப்படிக் கட்டுவது என்ற தவிப்புக்கும் ஆதங்கத்துக்கும் உள்ளாகிறார்கள் ஐடி ஊழியர்கள்" என்று ஐ.டி ஊழியர்களின் மனநிலையை விளக்கினார் பாலாஜி. 

சிறிய அளவிலான ஐடி நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் ஜெகன் மோகனின் கருத்து, மேற்குறிப்பிட்ட கருத்தோடு உடன்படுகிறது என்றாலும் ஓர் இடத்தில் மாறுபடுகிறது.  

"பெரிய பெரிய நிறுவனங்கள், புராஜெக்ட் கைவசம் இருந்தாலும் இல்லையென்றாலும் புதிய புராஜெக்ட்களை எடுப்பதற்காக ஒன்றைச் செய்கிறார்கள். அதாவது, குறிப்பிட்ட புராஜெக்ட் கிடைக்கும் முன்னரே அதைச் செய்வதற்கான ஆள்களை வேலைக்காக எடுத்து வீட்டில் இருக்கச் சொல்லியே சம்பளம் கொடுப்பார்கள். காரணம், அதற்கான மனிதவளம் இருந்தால்தான் கான்ட்ராக்ட் கிடைக்கும் என்பதால். இப்படி 'சும்மா' சம்பளம் கொடுத்துவைத்திருப்பதின் பெயர் 'பெஞ்சில் அமரவைப்பது'. வருடாந்திர ஆள்குறைப்பின்போது இதுபோன்று பெஞ்சில் இருப்பவர்களைத்தான் முதலில் தூக்க முடிவுசெய்வார்கள்.

முதலில் அவர்கள் வேறு ஏதாவது புராஜெக்ட்களில் பொருந்துவார்களா எனப் பார்ப்பார்கள். இல்லையெனில் தூக்கிவிடுவார்கள். இரண்டாவது, பெர்ஃபாமன்ஸில் வீக்கானவர்கள். மூன்றாவது, நீண்ட நாள்களாக வேலையில் இருப்பவர்கள். இவர்கள் இல்லாமலும் நிர்வாகம் நடக்கும் என நம்பினால், இவர்களையும் வருடாந்திரக் கழித்துக்கட்டும் லிஸ்ட்டில் இணைத்துவிடுவார்கள். காரணம், நீண்ட நாள்களாக வேலைசெய்பவர்களுக்கு அதிக அளவு ஊதிய உயர்வு தரவேண்டியிருக்கும்.  இதில் பாதிக்கப்படுவது கேம்பஸ் நேர்முகத் தேர்வில் உள்ளே வந்தவர்களும், புதிய பணியாளர்களும்தான்.

கல்லூரிப் படிப்பை முடித்த உடனே பல ஆயிரங்களில் சம்பளம் வாங்கத் தொடங்கியிருக்கும் இவர்கள் இ.எம்.ஐ வாழ்க்கைக்குள் புகுந்து சில வருடங்கள் ஆகிய நிலையில், வெளியே போகச் சொல்வார்கள். `புதிய வேலை தேடுவதா... கையிருப்பைக்கொண்டு இ.எம்.ஐ-யைக் கட்டுவதா அல்லது வாங்கிய சொத்தை விற்பதா...' எனப் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்" என்றவர் "ஒரு ஊழியரை ஃப்ரெஷ்ஷராகப் பணிக்கு எடுத்து இரண்டு ஆண்டுகள் பணியும் பயிற்சியும் கொடுத்துத் தேற்றிவைத்திருக்கும்போது சில ஆயிரங்கள் சம்பள வேறுபாட்டுக்காக நிறுவனத்திலிருந்து விலகுகின்றனர். ஒருசிலர் தங்களை அப்டேட் செய்துகொள்ளாமல் குறிப்பிட்ட துறையில் சிறப்பானவராக இருந்துகொண்டு ஒவ்வொரு இன்க்ரிமென்ட்டின்போதும் பெரிய பங்கை எடுத்துக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட சிக்கல்களும் நிறுவனங்களுக்கு இருக்கின்றன" என மாறுபட்ட பார்வையை முன்வைத்தார்.  
 

senthazal raviஐடி ஊழியர்களுக்கான தொழிற்சங்கங்கள் இந்தியாவில் சிறப்பான வகையில் இல்லாதது குறித்தும், அவர்களின் பணிப்பாதுகாப்பு குறித்தும்,  ஸ்வீடன் நாட்டிலிருந்து இயங்கும் 'ஓபரா மினி' நிறுவனத்தின் தர கட்டுப்பாட்டுத் தலைவர் ரவியைத் தொடர்புகொண்டு பேசினோம். " நான் பணிபுரியும் ஸ்வீடன் நாட்டில் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிபவர்களுக்கான சங்கம் அமைத்துக்கொள்ள உரிமை உண்டு. ஐடி துறைக்கும் மிகப்பெரிய சங்கம் உண்டு. ஒரு பணியாளரை வேலையைவிட்டு நீக்க வேண்டும் என்றால், அவர் சார்ந்திருக்கும் சங்கத்தின் அனுமதியை முதலில் பெறவேண்டும். உதாரணமாக, வருமான இழப்பைச் சந்திக்கும் ஒரு நிறுவனம் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவுசெய்தால், அவர் சார்ந்திருக்கும் சங்கத்துக்கு முதலில் தகவல் அளிக்க வேண்டும். பிறகு, பணியாளர் - ஹெச்.ஆர் துறையைச் சேர்ந்தவர்கள் - சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் அமர்ந்து பேசி, நிறுவனத்தின் நிலை என்ன, நிறுவனத்தால் என்ன செய்ய முடியும் என்பதிலிருந்து, பணியாளரின் விருப்பம் என்ன, தேவைகள் என்ன என்பதை அறியும் வரை அனைவருக்கும் ஏற்புடைய உறுதிப்பாட்டைக் கையொப்பமிட்டுச் செயல்படுத்துவார்கள். உதாரணமாக, ஒன்பது மாதங்களிலிருந்து ஓர் ஆண்டுக்கான சம்பளத்தை மொத்தமாக வழங்கும் வகையில் பணியாளருக்கும் மிகவும் உகந்ததாக ஒரு முடிவை சங்கத்தினர் பெற்றுத்தருவார்கள். 

ஸ்வீடன் நாட்டில் நான் சார்ந்திருக்கும் ஐடி சங்கம் UNIONEN ( www.unionen.se) - ஒரு வருடச் சம்பளம் பெற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல், வேலை இழந்த எனக்குத் தகுந்த பணி வாய்ப்பு எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அங்கே நேர்முகத் தேர்வும் ஏற்பாடு செய்துதரும். இதற்காக, நான் மாதம்தோறும் ஒரு தொகையை அவர்களுக்குச் செலுத்திவருகிறேன். (நம் இந்திய ரூபாயில் 1,500 ரூபாய் வரை). இது மிகச்சிறிய தொகைதான். இந்தச் சங்கத்தில் இணைந்திருப்பதால் வரும் மனநிம்மதி அளவிட முடியாதது. மேலாளர் மனம்கோணும்படி நடந்துகொண்டால், `நம்மை வேலையைவிட்டு நீக்கிவிடுவாரோ, சனிக்கிழமை அலுவலகம் வந்து வேலை செய்யவில்லை என்றால், சம்பள உயர்வு கிடைக்காதோ' எனக் கவலைகொள்ளாமல், நம்மை பணியில் சேர்த்திருக்கும் நிறுவனத்துக்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்ற சிந்தனையுடன், எந்தவிதமான மன அழுத்தமும் இன்றி சிறப்பாகப் பணியாற்ற முடிகிறது.

மேலும், இதுபோன்ற சங்கங்கள் நடத்தும் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பணியாளர் உரிமைகள், நம் துறையில் நடைபெறும் மாற்றங்கள், எவ்வளவு சம்பள உயர்வு வருடம்தோறும் கொடுக்கப்படுகிறது, எனக்கு இந்த வருடம் கொடுக்கப்பட்ட சம்பள உயர்வு சரிதானா என்றும் விவாதிக்கலாம். 

இந்தியாவிலேயே தமிழகத்துக்குத்தான் முதன்முறையாகத் தகவல்தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான சங்கம் அமைத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மக்கள் கலை-இலக்கியக் கழகத்தின் ஐடி பிரிவு, இதைச் சட்டத்தின் மூலம் சாதித்திருக்கிறது. அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டாலும், இதுபோன்ற சங்கங்கள் கட்சி / அமைப்பு சார்ந்து இயங்குவதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. எந்த அமைப்பும் சாராத நடுநிலையாளர்கள், வழக்குரைஞர்கள், முன்னாள் நீதிபதிகள் இணைந்து ஐடி பணியாளர்களுக்கான சங்கத்தைக் கட்டித்தரவும், இரவும் பகலும் மிகுந்த மன அழுத்தத்தில் பணியாற்றும் ஐடி ஊழியர்களின் உரிமைகளை நிலைநாட்டிடவும் வேண்டும் என்பது என் ஆசை"  என்கிறார் ரவி. 

என்ன செய்யப்போகிறார்கள் இந்திய ஐ.டி துறை ஊழியர்கள்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close