தினகரன் திடீர் 'என்ட்ரி'-வெளுத்து வாங்கிய கனிமொழி- BJP-யும் ஆட்சிக் கவிழ்ப்பும்|விகடன் ஹைலைட்ஸ்

தினகரன் திடீர் 'என்ட்ரி'-வெளுத்து வாங்கிய கனிமொழி- BJP-யும் ஆட்சிக் கவிழ்ப்பும்|விகடன் ஹைலைட்ஸ்

கதவை மூடிய இ.பி.எஸ்... கலங்கி நிற்கும் ஓ.பி.எஸ்... தினகரன் திடீர் 'என்ட்ரி'!
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தை முன்வைத்து ஒ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணி இடையே நடக்கும் மல்லுக்கட்டு, அந்தக் கட்சியை கலகலத்துப்போக வைத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகளிடையே காணப்பட்ட பெருவாரியான ஆதரவு, கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் அவமதிக்கப்பட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது, அவரது ஒப்புதல் எதுவும் இல்லாமலேயே ஜூலை 11-ம் தேதியன்று அடுத்த பொதுக்குழுவை நடத்தலாம் என எடப்பாடி தரப்பு நாள் குறித்தது உள்ளிட்ட நிகழ்வுகளெல்லாம், கட்சியில் யார் கை ஓங்கி நிற்கிறது என்பதைப் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
இந்த நிலையில், அடிபட்ட புலியாக நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என எடப்பாடிக்கு 'செக்' வைக்க பன்னீர் செல்வம், படு தீவிரமாக மேற்கொண்டு வரும் முயற்சிகளும், அதனைச் சமாளிக்க எடப்பாடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களால் இரட்டை இலைச் சின்னத்தைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளி உள்ளன.
ஆனாலும், 'தற்காலிகமாக சின்னம் முடக்கப்பட்டாலும் பார்த்துக் கொள்ளலாம்... முதலில் ஓ.பி.எஸ்-ஸைக் கட்சியிலிருந்து கட்டம் கட்டித் தூக்கிவிட வேண்டும்' என்பதில் முனைப்பாக இருக்கிறார் எடப்பாடி. அதன் காரணமாகத்தான், " உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார்" என்று ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்து உள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக, அவர் பன்னீர் செல்வத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.
அதே போல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றம் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
மொத்தத்தில், " நீங்கள் கழக ஒருங்கிணைப்பாளரே இல்லை... அப்புறம் எப்படி சின்னத்துக்காக நீங்கள் கையெழுத்துப்போட முடியும்..?" என்ற ரீதியில் எடப்பாடி எழுதியுள்ள இந்தக் கடிதம் பன்னீர் செல்வத்தைக் கலங்க வைத்துள்ளது. சுருக்கமாக சொல்வதானால், ஓ.பி.எஸ்-ஸுக்கு அ.தி.மு.க-வின் கதவு சாத்தப்பட்டு விட்டது என்கிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள்.
இந்த நிலையில்தான், முதலமைச்சராக்கிய சசிகலாவையே முதுகில் குத்தியதாக எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் உள்ள அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க-வில் நடக்கும் தற்போதைய விவகாரத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவாக திடீர் என்ட்ரி கொடுத்துள்ளார். அ.தி.மு.க-வில் நடக்கும் தற்போதைய பிரச்னை குறித்தும், ஓ.பி.எஸ் குறித்தும் தினகரன் என்ன சொன்னார் என்பதைப் படிக்க க்ளிக் செய்க...

கழுகார் அப்டேஸ்: வெளுத்து வாங்கிய கனிமொழி... வெலவெலத்த மாவட்டச் செயலாளர்!
"`ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே..." - வருத்தத்தில் அமைச்சர்!
கழக மூத்த நிர்வாகி இல்லத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக புதுக்கோட்டைக்கு வந்திருந்தார், ‘சின்னவர்.’ அவரை எப்படியாவது அசத்திவிட வேண்டும் என்று நினைத்த உள்ளூர் அமைச்சர், விழாவுக்குச் செல்லும் ரூட்டையே தன் சொந்த கிராமம் வழியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார்.
ஜே.சி.பி வாகனங்கள், புல் வெட்டும் கருவிகள் உதவியுடன் ஊரையும், சாலையோரப் புதர்களையும் ஒரு வாரமாக அழகுபடுத்தியிருக்கிறார் அமைச்சர். இந்த வேலைக்காக 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களையும் ஈடுபடுத்தியிருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு சாலையின் இரு ஓரங்களிலும் கட்சிக்கொடிகள், பேனர்கள், ஆங்காங்கே மக்கள் கூட்டம் என்று பல லட்சம் செலவு செய்து வரவேற்பு கொடுத்திருக்கிறார்.

கட்சி உடைப்பு, ஆட்சி கவிழ்ப்பு... 10 மாநிலங்களில் நடந்த பாஜக-வின் பரமபத ஆட்டம்!
மகாராஷ்டிரா அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்துவந்த நிலையில் தற்போது க்ளைமாக்ஸை நெருங்கியிருக்கிறது. ஆளும் சிவசேனா கட்சியின் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகத் திரும்பினர். பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கவைக்கப்பட்டனர். இந்தச் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர், உத்தவ் தாக்கரேவுக்கு உத்தரவிட்டார். இதனால், அவர் தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும், முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

" 'இந்திரா' பெயரிலான பள்ளியில் படிக்க மாட்டேன்..!" - தேவேந்திர பட்னாவிஸ் அப்பவே அப்படி!
மகாராஷ்டிரா முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பா.ஜ.க தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
சிவசேனா உடனான கூட்டணி அரசில் முதலமைச்சர் பதவி வகித்த பட்னாவிஸ்ஸுக்கு, 2019 தேர்தலில் சிவசேனா முதலமைச்சர் பதவியை விட்டுத்தர மறுத்ததைத் தொடர்ந்து கூட்டணி முறிந்து முதலமைச்சர் வாய்ப்பு பறிபோனது. அப்போதிருந்து இழந்த பதவியை மீண்டும் பெற்றிட வேண்டும் என்ற முனைப்புடன் அவர் மேற்கொண்ட முயற்சிதான், சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பட்னாவிஸ் யார், அவர் அரசியலில் வளர்ந்தது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்களை விரிவாக படிக்க க்ளிக் செய்க...

"கட்சி என்ன... கத்தரிக்கா வியாபாரமா..?" - மணிவண்ணன்
டைரக்டராக ஆரம்பித்து அவ்வப்போது வில்லனாக முகம் காட்டி, காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் மணிவண்ணன் பெயர் சொன்னால் ஏரியா விற்கிறது! `ரஜினியை விடவும் அதிகம் சம்பாதிக்கிறார்' என்று கவுண்டமணியைக் கை காட்டுவார்கள்.
அவரையும் நைஸாக ஓரங்கட்டிவிட்டுப் பறக்கிறது மணிவண்ணக்கொடி!
''எனக்கு எப்பவுமே நம்பிக்கை கொஞ்சம் அதிகம். நான் முதன்முதலாகக் கதை வசனம் எழுதின 'நிழல்கள்’ எனக்குப் பலத்த அடி வாங்கித் தந்த படம்தான் தெரியுங்களா? 'பதினாறு வயதினிலே’ல ஆரம்பிச்சு, அதுவரைக்கும் தொடர்ச்சியா ஹிட் படங்களாத் தந்துட்டு இருந்த பாரதிராஜாவுக்கும் அந்தப் படம்தான் முதல் அடி.
'வழக்கமா பாரதிராஜாவுக்குக் கதை வசனம் எழுதுற பாக்யராஜ், செல்வராஜ் ரெண்டு பேரையும் விட்டுட்டு, சினிமா தெரியாத ஒரு புதுப் பையனை எழுதவெச்சதாலதான் படம் விழுந்துடுச்சு’னு இண்டஸ்ட்ரில பேச்சு கிளம்பிடுச்சு. அந்த வெறியிலதான் அடுத்து 'அலைகள் ஓய்வதில்லை’க்குக் கதை வசனம் எழுதினேன். ஃபீலிங்ஸை ஒதுக்கிவெச்சுட்டேன். படத்துல யதார்த்தத்தை மீறின காதல் இருக்கும். செக்ஸ் கொஞ்சம் பிரதானமா இருக்கும். பட், படம் ஜெயிச்சது. நானும் படத்தை ஜெயிக்கவைக்கிற சூத்திரத்தைக் கத்துக்கிட்டேன்னு வெச்சுக்கங்களேன்!''என சினிமாவின் வெற்றிச் சூத்திரம் சொல்லும் மணிவண்ணன், டைரக்டராக ஆரம்பித்து வில்லனாக முகம் காட்டி, காமெடியனாக வலம் வந்தது குறித்து விகடனுக்கு அளித்த சுவாரஸ்ய பேட்டியைப் படிக்க க்ளிக் செய்க...