Published:Updated:

`நான்தான் எங்க கிராமத்தோட முதல் டாக்டர்!' - வறுமையிலும் தளராமல் முன்னேறிய டாக்டர் தசரதன்

மருத்துவப் பணியில் தசரதன்
மருத்துவப் பணியில் தசரதன்

``எங்க கிராமத்துல டாக்டருக்குப் படிச்ச முதல் நபர் நான்தான். என் பெற்றோர் முகத்துல இப்பதான் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன்."

பெற்றோருடன் செங்கல் சூளையில் பணியாற்றிக்கொண்டிருந்த சிறுவன் தசரதன், தனியார் அமைப்பினால் மீட்கப்பட்டு கல்வி பயின்றார். குடும்பத்தில் வறுமை வாட்டியது. பெற்றோர் இன்றளவும் செங்கல் சூளையில்தான் வேலை செய்கின்றனர். இதற்கிடையே தசரதனுக்கு மருத்துவராகும் கனவு இந்தியாவில் நிறைவேறவில்லை. ரஷ்யா சென்று மருத்துவப் படிப்பை முடித்தார். மகிழ்ச்சியுடன் இந்தியா திரும்பியவருக்கு அடுத்தடுத்து சோதனைகள் துரத்தின.
தசரதன்
தசரதன்

வெளிநாட்டில் மருத்துவம் படித்து இந்தியாவில் பணியாற்றுவதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்து இன்டர்ன்ஷிப் செய்ய சில லட்சம் ரூபாய் கட்ட வேண்டிய சூழல். போராடிப் படித்தாலும், டாக்டராகும் கனவுக்கு தடைகள் தொடரவே தவித்த தசரதனின் கஷ்ட நிலையை விகடன் இணையதளத்தில் கட்டுரையாக வெளியிட்டோம்.

மூத்த மருத்துவர்கள் உட்பட விகடன் வாசகர்கள் பலரும் தசரதனுக்கு உதவினர். அந்த வகையில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைத்தது. பின்னர், தசரதனைப் படிக்க வைத்த 'சுயம்' அமைப்பின் முயற்சியால் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைத்தது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அதிக கட்டணம் தேவைப்படவே, இறுதியாக காஞ்சிபுரத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்டர்ன்ஷிப் தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் செலுத்தினார். கடந்த இரண்டு மாதங்களாக அங்கு பயிற்சி மருத்துவராகப் பணியாற்றும் தசரதன், இன்னும் பத்தே மாதங்களில் முறைப்படி மருத்துவராகிவிடுவார். இதுகுறித்து நெகிழ்சியாகப் பேசினார் தசரதன்.

தசரதன்
தசரதன்

"சின்ன வயசுல இருந்து கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கூட நிறைய கஷ்டப்பட்டேன். செங்கல் சூளையில இருந்து என்னை மீட்ட 'சுயம்' அமைப்பினர், படிப்புக்கும் நிறைய உதவினாங்க. டாக்டராகும் என் கனவு கனவாவே போயிடுமோங்கிற அளவுக்கு ஏராளமான தடைகள். போதிய பணம் இன்றி இன்டர்ன்ஷிப் செய்ய முடியாம தவிச்சேன். அப்பதான் விகடன்ல என்னோட பேட்டி வெளியாச்சு. கஷ்டங்களைக் கடந்து முன்னேறி வந்ததைத் தெரிஞ்சுகிட்டு, பல இடங்கள்லயும் எனக்கு மதிப்பு கிடைச்சது. இன்டர்ஷிப்புக்குத் தேவையான பண உதவியும் கிடைச்சது. கடந்த அக்டோபர்ல இருந்து பயிற்சி மருத்துவரா வேலை செய்யுறேன்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எங்க துலங்கம்பட்டு கிராமத்துல டாக்டருக்குப் படிச்ச முதல் நபர் நான்தான். நான் போன் பண்ணும்போதெல்லாம், 'நம்ம ஊர் டாக்டர் பேசுறான். என் பையன் டாக்டராகிட்டான்'னு தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி அம்மா சந்தோஷப்படுறாங்க. என் பெற்றோர் முகத்துல இப்பதான் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன். காஞ்சிபுரத்துலயே தனியா வாடகைக்கு வீடு பிடிச்சு தங்கியிருக்கேன். நானே சமையல் செய்துக்கிறேன். அடுத்த வருஷம் செப்டம்பர் மாசத்துடன் இன்டர்ன்ஷிப் முடிஞ்சுடும். பிறகு, வேலைக்குப் போகணும். நீட் எக்ஸாம் எழுதி மருத்துவ மேற்படிப்பு செய்யும் ஆசையும் இருக்கு.

தசரதனுக்கு உதவிய நல்ல உள்ளங்கள்
தசரதனுக்கு உதவிய நல்ல உள்ளங்கள்

மருத்துவப் படிப்புக்காக வாங்கின பல லட்சம் ரூபாய் வங்கிக் கடன் இருக்கு. அதுக்கான வட்டியும் அதிகரிச்சுகிட்டே இருக்கு. மருத்துவராகி கடனை அடைக்கும் முனைப்போடு, ஏழை மக்களுக்கு இலவசமா மருத்துவ உதவிகள் செய்ற நோக்கத்தையும் நிச்சயம் நிறைவேத்துவேன். கொரோனா கஷ்ட சூழ்நிலையிலும் எனக்கு உதவி செஞ்ச மக்களுக்கு ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கேன்" என்று உருக்கமாகக் கூறுகிறார் தசரதன்.

அடுத்த கட்டுரைக்கு