வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (14/02/2018)

கடைசி தொடர்பு:14:33 (14/02/2018)

`நன்றி!' - முன்னொரு காலத்தில் எல்லாமுமாய் இருந்த உயிருக்கு ஓர் கடிதம்!

முன்பொரு காலத்தில் எல்லாமுமாய் இருந்த உயிருக்கு...

வெண்பஞ்சாய் சிகைநரைத்து மூன்றாம் காலாக மரத்தடி இணை சேருங்காலத்திலும் புடைத்து வெளிறியிருக்கும் நரம்புகளெனும் பச்சைப் பாம்புகளில் வெப்பச்சலனமாய் நீ இருப்பாய் என நம்பியதுண்டு. அதனாலேயே நலம் நலமறிந்துகொள்ளும் காலம் வரும் என நினைத்துப் பார்த்ததே இல்லை. அந்திமக் காலத்தில் இருளடையும்போதான கடைசிக் கேவலின் முன் என் விழி நிறைக்கும் முகம் உன்னுடையதாக இருக்கும் என நம்பியிருந்ததால் நலம் நலமறிந்துகொள்ளும் காலம் வரும் என நினைக்கவே இல்லை. எல்லாம் முடிந்தபின் மீண்டுமொரு நாள் மேகத்துளிகளாக வானில் சந்திப்போம் என திடமாய் நம்பியதால் நலம் நலமறிந்துகொள்ளும் காலம் வரும் என நினைக்கத் தோன்றவே இல்லை. 'நிரந்தரமில்லை நான்காம் பரிமாணம்' என்ற கோட்பாட்டின் கீழ் யாவரும் தோற்றுப்போக நீயும் நானும் மட்டும் விதிவிலக்காய் இருப்போம் என நம்பித் தோற்றதில் ஒளிந்திருக்கிறது நம் கதை.

காதல்

ஒற்றைப் பார்வை... அதில் தொடங்கியதுதானே இந்த ஆயுளுக்குமான காதல். அது இனி எப்போதும் கிடைக்கப்பெறாத கடவுளின் துகள். பார்வைக் குறுஞ்செய்திகளாகப் பிறப்பெடுத்து உரையாடல்களாக வளர்ந்தன. பேரண்டத்தின் கீழடங்கும் அனைத்துமே இந்த உரையாடல்களுக்கான எரிபொருளாயின. கதை பேசிக்கொண்டே காற்றில் தூர தேசங்களுக்கும் பயணப்பட்டிருக்கிறோம். உரையாடல்கள் தீர்ந்தபாடில்லை. இவற்றை முடிவிலிகளாக ஆக்கியதில் இசைக்கு பெரும்பங்குண்டு. காதலைக் கொண்டாடும்... வர்ணிக்கும்... சிலாகிக்கும் அத்தனை பாடல்களுக்கும் தலைவனும் தலைவியுமாக நாம் இருந்திருக்கிறோம்.

உன் பிரத்யேக மணத்தை பெருமையாக வரித்துக்கொண்டன என் ஆடைகள். உடைகள் நெகிழ்ந்து உடல்கள் உரச கட்டுண்டு கிடக்கும் நேரத்தில் இருளும் கதகதப்புமான உன் மார்பு என் இரண்டாம் கருவறை. மடிகொடுத்து உனைத் தாங்கிய தலையணைக்கு நீ பரிசாக அளித்த மயிர்க்கற்றைகளை நான்தான் திருடி வைத்திருக்கிறேன். பதிலுக்கு நீ கிசுகிசுத்த குரலை தன்னுடையதாக்கிக்கொண்டன வீட்டுச் சுவர்கள். காதலின் முடிவுரை காமம் என்பதில் நமக்கு உடன்பாடிருந்ததில்லை. கலவி நிகழ்ந்து காமமும் வடிந்தபின்னான ஒற்றை நீண்ட முத்தம் சொல்லியிருக்கிறது நாம் கொண்டிருந்த காதலை. பெருமூச்சுகளினூடே... வரவிருக்கும் மூன்றாம் உயிருக்கான பெயர் சூட்டு விழாவும் போர்வைக்குள்ளேயே நடந்து முடிந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்து புகைச்சலோடு நம்மை எழுப்ப முயன்ற கடிகார முட்களுக்கு கிடைத்ததோ வெறுப்பும் தோல்வியுமே!

கடிகார முட்களின் தோல்வி தற்காலிகமானதுதான் என்பதை இப்போது நீயும் நானும் உணர்ந்தே இருக்கிறோம். உன் இறுதிச் செய்தியை தாங்கிவந்த அலைபேசி மெளனத்தின் சாட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பாதியில் நிறுத்தப்பட்ட உரையாடல் இன்னும் அந்தரத்தில் தொக்கி நிற்கிறது. காற்றில் நாம் போய்வந்த தூர தேசங்கள் இன்னமும் நம் கால்பட காத்திருக்கின்றன. நமக்கெனவே வடிக்கப்பட்டவையாய் கொண்டாடிய வரிகள் இப்போது வலிகடத்திகளாகிவிட்டன. குறிப்பாக உன்னை வர்ணிக்கும் வரிகள் பின்னிரவுகளில் பூதாகரமாக ஆட்கொள்வதால் இருளைக் கிழித்து ஓடித் தப்பிக்கிறேன்.

மனங்களும் மணங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்ட அந்த தேவநொடிகளை ஏக்கமாக அசைபோடுவதைத் தவிர வேறென்ன வழியிருக்கிறது? முன்பு உன் மயிர் அச்சு பதிந்த தலையணையில் இப்போது இருப்பதெல்லாம் நீர் வடிந்த தடங்கள் மட்டுமே. முன்பொரு காலத்தில் கற்பனையாக நாம் பெயர் வைத்த குழந்தை இன்னும் பூமி தொடாததை எண்ணி தனக்குள்ளே குமைகிறது போர்வை. காமம் வெறும் இயக்கமாகிவிட்ட இந்தப் பொழுதில் மின்னலாய் தோன்றி மறைகிறது உன் முகம்.

காதல்

நம்பமாட்டாய் நீ... நாம் கடைசியாக சந்தித்த மரநிழலில் நீ விட்டுச்சென்ற மூச்சுக்காற்று இன்னமும் மிச்சமிருக்கிறது. உன் நினைவுப் படிமங்கள் நுரையீரலை நிறைத்து அழுத்தும் தருணங்களில் நான் தஞ்சமடையும் சரணாலயம் அதுதான். ஆழி அலையில் தடுமாறும் உயிருக்கு மூன்றாம் தூக்கலில் கிடைத்த மிதவைபோலத்தான் உனக்காக நான் எழுதுவதும். ஒவ்வொரு வார்த்தையையும் சூல் கொள்ள நான் கடந்தகாலத்திற்கு நடைப்பயில வேண்டியதாக உள்ளது. ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊனை உருகச் செய்யும் உயிர்வதை அது. அவ்வளவு வாதையைத்தாண்டி அதைச் செய்வதற்குக் காரணம் அணு இடைவெளி இல்லாமல் அதில் விரவியிருப்பது நீ என்பதால்தான். அந்த எழுத்துகளை தொட்டுவருடும்போது உணர்வது உன் ஸ்பரிசம் என்பதால்தான். மலையுச்சியில் தனித்திருக்கும் மரத்திற்கு அதைத் தொட்டு இறங்கும் மழைத்துளிகள் மட்டும்தானே துணை?

குறையொன்றுமில்லை. சவலைப்பிள்ளையாக இருந்த என்னை உளிதாங்கும் கல்லாகப் பக்குவப்படுத்தியது இந்த உறவுதான். எதுவுமில்லை இதற்குமேல் என இருந்த என்னை `இதுவும் கடந்து போகும்' என உணரச் செய்தது இந்த உறவுதான். யாதுமாகி இருப்பவர்கள்கூட யாரோவாகிப் போவார்கள் என்ற நிதர்சனத்தை உணர்த்தியது இந்த உறவுதான். நீ.... காதலைக் கொண்டாட கற்றுக்கொடுத்திருக்கிறாய், பிரிவின் வலி பழகக் கற்றுக்கொடுத்திருக்கிறாய், நினைவுகளை வார்த்தைகளாக வடித்துப் பொக்கிஷமாக்க கற்றுக்கொடுத்திருக்கிறாய், `வருங்காலம் என ஒன்றுமில்லை இந்தப் பொழுதே வாழ்க்கை' என வாழக் கற்றுக்கொடுத்திருக்கிறாய், பலன் எதிர்பாராது அன்பு செய்யக் கற்றுக்கொடுத்திருக்கிறாய், சின்னச் சின்ன விஷயங்களில் குடியிருக்கும் அழகை, எளிய மனிதர்களின் மனமெனும் கடவுளை உணரக் கற்றுக்கொடுத்திருக்கிறாய். இவை அனைத்தும் அடங்கியதுதான் என் வாழ்க்கை. நீ கொடுத்த இந்த வாழ்க்கைக்கொரு நன்றி. இறுதியாக, ஒன்று மட்டுமே சொல்ல  மிச்சமிருக்கிறது. காதலர்கள் தின வாழ்த்துகள்.

இப்படிக்கு,
யாதுமாக இருந்து யாரோவாகிப் போன உயிர்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்