விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம் #MyVikatan | Introducing My Vikatan

வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (19/02/2019)

கடைசி தொடர்பு:10:25 (21/02/2019)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம் #MyVikatan

ஃப்ரெண்ட்ஸ் லிஸ்டில் 5,000 பேர் கொண்ட ஃபேஸ்புக் பிரபலம் அவர். தனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி ஃபேஸ்புக்கில் தொடர்ந்து எழுதிவந்தவர், முதல்முறையாக விகடனில் விஜய் சேதுபதி பற்றி ஒரு கட்டுரை எழுதினார். மறுநாள் அவருக்கு ஒரு கால் வந்தது. அழைத்தவர் விஜய் சேதுபதி. “என்னைப் பத்தி அப்படியே எழுதிருக்கியேயா... நாம ஒருநாள் சந்திக்கலாம்” என்ற அந்தக் குரல் கேட்டு நெகிழ்ந்துபோனார். 

மதுரையில் ஒரு கல்லூரி, மாணவர்களுக்குரிய டெபாசிட் பணத்தைத் திருப்பித் தராமல் பல மாதங்களாக இழுத்தடித்துக்கொண்டிருந்தது. விகடன் ஸ்டூடண்ட் ரிப்போர்டராக இருக்கும் ஒரு மாணவி, பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேசி அதைச் செய்தியாக்கி அனுப்பினார். அந்தச் செய்தி விகடனில் வெளியான சில மணி நேரங்களில், மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகத்திடமிருந்து ஒரு மெசேஜ், ‘உங்க செக் ரெடியாக இருக்கு... வந்து வாங்கிக்கோங்க.’

சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் எம்.எஸ்.பாஸ்கரின் பேட்டி அவருடைய குடும்பப் படத்துடன் வெளியானது. அந்தப் படத்தில் அவருடைய பையனைப் பார்த்த ஒரு இயக்குநர், எம்.எஸ்.பாஸ்கரை அழைத்து, “உங்க பையன் என் படத்துல நடிப்பாரா?” என்று கேட்டார். கேட்டவர் ‘96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார். அந்தப் பையன்தான் சின்ன வயது ராமாக நடித்த ஆதித்யா பாஸ்கர். 

இந்த மூன்று சம்பவங்களிலும் அந்த மேஜிக் எப்படி நடந்தது?

ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தால் விஜய் சேதுபதிக்கு அது போய் சேர்ந்திருக்குமா? வாட்ஸ் அப் ஃபார்வர்டுகளுக்காக அந்தக் கல்லூரி நிர்வாகம் பயந்திருக்குமா. ஆதித்யா பாஸ்கர் எத்தனை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருப்பார்?

ஒரு கட்டுரை... ஒரு செய்தி... ஒரு போட்டோ...  ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற நெருங்கிய வட்டத்துக்குள் வெளியாவதற்கும், விகடன் போன்ற தளத்தில் வெளியாவதற்குமான வித்தியாசம் இதுதான். 

இந்த மேஜிக் இனி உங்களுக்கும் சாத்தியமாகப்போகிறது. கோடிக்கணக்கான தமிழர்கள் தினமும் வாசிக்கும் நேசிக்கும் ரசிக்கும் விகடனில் உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு பக்கம். #MyVikatan 

எதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களுக்குள்ளோ அல்லது உங்களுக்கு அருகிலோகூட அப்படி வைரல் கண்டண்ட் ஒளிந்திருக்கலாம். அதை உலகுக்குச் சொல்வதற்கான களம்தான் இந்த #MyVikatan தளம். இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். போட்டோ, மீம்ஸ், வீடியோ என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம். அது மற்றவர்களுக்கும் பிடித்திருந்தால் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார். 

அப்பறம் என்ன உங்களுக்கான தளம் ரெடி... உற்சாகமா களமிறங்கிக் கலக்குங்க மக்களே..!

FAQ:-

எதையெதை அனுப்பலாம்?

கதைகள், கட்டுரைகள், கவிதைகள், புகைப்படங்கள், எவரையும் காயப்படுத்தாத, சுவாரஸ்யமான மீம்ஸ்கள், ஃபோட்டூன்கள், ஓவியங்கள், நகைச்சுவைகள், லைஃப் ஸ்டைல் விஷயங்கள், மினிமலிஸ படைப்புகள், பயணச் சுவாரஸ்யங்கள், துறைசார் பதிவுகள், உலக, இந்திய மற்றும் தமிழ் சினிமா பார்வைகள், சமையல் குறிப்புகள், குறைந்த நிமிடத்தில் நிறைவான சேதி சொல்லும் வீடியோக்கள், இன்னும் இன்னும்!  

யார் பெயரில் வெளிவரும்?

உங்கள் பெயரில்... உங்களுக்கென்று ஒரு பக்கம் உருவாக்கப்பட்டு அதில் வெளிவரும். 

என் புகைப்படம் இடம்பெறுமா?

நிச்சயமாக. 

என்னைப் பற்றிய விபரங்கள் அனுப்ப வேண்டுமா?

ஆம். பெயர், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட உங்கள் விபரங்கள்.

என் படைப்பு திருத்தப்படுமா?

தேவைப்பட்டால்! சமயங்களில் திருத்திய copy உங்கள் பார்வைக்கும் அனுப்பப்படும்!

படைப்பின் உரிமை யாருக்கு?

படைப்பாளிக்குத்தான். அதன் கருத்துகளும் பார்வைகளும் படைப்பாளிக்குச் சொந்தமானவை.

வேறு தளத்தில் வெளியிட்டவற்றை அனுப்பலாமா?

வேண்டாமே! விகடனுக்கு என்று பிரத்யேகமாக எழுதி அனுப்புபவை மட்டுமே பரிசீலிக்கப்படும்.

படைப்பாளி குறித்த விவரங்கள் இருக்குமா?

நீங்கள் தொடர்ந்து படைப்புகள் அனுப்பும் பட்சத்தில், உங்களுக்கான தனிபக்கம் தொடங்கப்பட்டு, அதில் நீங்கள் தரும், உங்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெறும். மின்னஞ்சல் முகவரி வெளியிட விரும்பினால் அதுவும் வாசகர்களின் பார்வைக்கு இருக்கும். முதல் பக்கத்தில் வெளியாகும் உங்கள் படைப்பில், உங்கள் பெயரைக் க்ளிக்கினால், மொத்தமாக விகடன் ப்ளாக்கில் நீங்கள் எழுதிய எல்லாம் ஓரிடத்தில் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அவற்றை ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ளலாம். சேமித்துக்கொள்ளலாம். இவையெல்லாம், நீங்கள் அனுப்பும் படைப்புகளின் எண்ணிக்கையையும் தரத்தையும் பொறுத்தே அமையும். 

வெளியான என் படைப்புகளை, வேறு சமூக வலைதளங்களில் வெளியிடலாமா?

விகடன் பிளாக்குக்கு என்று நீங்கள் எழுதியதை, குறிப்பிட்டு ஷேர் செய்து கொள்ளலாம். அப்படியே வேறு தளங்களிலும் வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழில் மட்டும்தான் எழுத வேண்டுமா?

அப்படி எந்தக் கட்டுப்பாடுமில்லை. ஆங்கிலத்தில்கூட இருக்கலாம். மொழியே தேவையில்லாமல், ஒரு சின்ன கார்ட்டூனில், மைம் வீடியோவில், ஃபோட்டோவில் எல்லையற்று உங்கள் சிறகை விரிக்கலாம்.

படைப்புச் சுதந்திரத்தின் எல்லை என்ன?
 
கற்பனைச் சிறகு விரிந்தால், வானம்கூட எல்லை இல்லைதான். உங்கள் படைப்பு ஒரு நல்ல விவாதத்துக்கு வழிவகுக்கலாம். ‘அட.. இப்படி ஒரு பார்வை இருக்கா?!’ என்று விழி விரிய வைக்கலாம். ஆனால், அது யாரையும் காயப்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம்.  

என்னவெல்லாம் செய்யக் கூடாது?

வெற்று கவன ஈர்ப்புக்காக, யாரையேனும் புண்படுத்தக்கூடிய, சிலரது சென்டிமென்டைக் காயப்படுத்தக் கூடிய எதுவும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

எப்படி அனுப்பணும்?

உங்கள் படைப்புகளை my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்க! 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close