வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (14/02/2017)

கடைசி தொடர்பு:15:04 (24/02/2017)

தீராக்காதலில் திளைக்கச் செய்யும் தேவதைகள்! #MustRead

கூதற்காலத்து கணப்பிற்கு:

காதல் ரோஜா

லித்தேனிய புராணங்களில் அவளுக்கு 'மில்டா' என பெயர் வைத்திருந்தார்கள். அவனுக்கு அவள் 'கூதற்காலத்தின் கணப்பு.' முதலும் முற்றிலுமான வரம். அவளின்றி அணுவும் அசைந்ததில்லை அவனுக்கு. இருளும் குளிரும் மாறி மாறி வேட்டையாடிய தருணங்களில் அவளின் மார்புச்சூட்டில் புதைந்திருந்து மீண்டிருக்கிறான். அகதியாய் அலைந்த காலங்களில் அவளின் மடிதான் கடைசி புகலிடம். எழுதித் தீரா பக்கங்களுக்குச் சொந்தக்காரி. வாஞ்சையும் விருப்பமுமாய் அவர்கள் இளைப்பாறிய பச்சை மரம் பின் வந்த கோடையில் பட்டுப்போனது. அதன் கடைசி இலை உதிர்கையில் அவளும் இல்லை. இருவரின் ஊடல்களுக்கும் கள்ள மவுனம் காத்த போர்வை இப்போது கேட்பாரற்று நைந்துபோய் மூலையில் கிடக்கிறது.

ஆனாலும் மாறிலிகளின் வழியே கடந்தகாலம் காண்கிறான் அவன். அவளை வர்ணிக்கும் வரிகளை எதேச்சையாக கடக்கையில் எழுதியவரின் விரல்களை வருடிக்கொடுக்க முனைகிறான். பதில் வாராக் கடிதங்கள் தரும் வாதை உணர்ந்தவனாக இருந்தும் ஆண்டிற்கொரு முறை அஞ்சல் அனுப்புகிறான். காதோர மடிப்புகளை நிரடுகையில் அவளின் நகைப்பொலி கேட்கிறது. அவள் வெட்டி எறிந்த நகத்துணுக்குகள் சிலவற்றுக்கு அவன் விளக்கு காத்த பூதம். அவனின் இந்த மொத்தக் கதைக்குமான ஒற்றை சாட்சியம் ஓரங்களில் பழுப்படைந்த ஒரு புகைப்படம் மட்டும்தான். இந்தக் குறையைப் போக்கவே சில இசைக்குறிப்புகளுக்கு அவள் உருவம் கொடுத்து தனிமை விரட்டுகிறான். இன்றும் முகவரி இல்லா எண்கள் அலைபேசியில் ஒளிரும்போது அவனின் ஐம்புலன்களும் அனிச்சையாய் விழிப்படைவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. இப்போதைக்கு இல்லை அவற்றுக்கான ஓய்வு. 

மழை மேகங்களின் தூரிகைக்கு:

காதலர் தினம்

பால்ய காலம் தொட்டு அவனோடு நடை பழகியவள். துண்டுக் கடிதங்களின் மூலம் பிரியமும் மழலைக் காதலும் கொண்டார்கள். புற உலகின் சந்தடிகள் எதையுமே அவர்களின் குமிழ் உலகு பொருட்படுத்தியதில்லை. நான்காம் பரிமாணத்தின் வளர்ச்சியில் குமிழ் உடைய, அவள் காணாமல் போனாள். மெய்நிகர் உலகம் தோன்றிராத அந்தத் தருணங்களில் அவனின் தேடலும் மட்டுப்பட்டுப் போனது. பதினான்கு கோடைகள் கழித்து ஒருநாள், கூட்டத்தில் தனித்துத் தெரிந்தவளை கண்டுகொண்டான். பின்தொடர்ந்த கதைத்தலில் அவர்களின் குமிழ் உலகை மீண்டும் மீட்டார்கள்.

இம்முறை அந்தப் பிரியத்தில் கொஞ்சம் முதிர்ச்சியும் இருந்தது. அழுத்தம் அதிகமானால் குமிழ் உடையும் என்பதுதானே விதி. தந்தை சொல்லை மந்திரமாய் உச்சரிக்கும் தங்கமீன் அவள். ஒரு மழைநாளின் பின்னிரவில் மண்வாசனை சூழ்ந்த பேருந்து நிலையத்தில் 'அவ்வளவுதான்' என்ற இறுதி வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கார்கால இருளில் குதிங்கால்கள் அதிர விலகிப் போனாள். பிரேமம் நிறைந்த சம்பாஷணைகளால் விழித்திருந்த புலனம் தற்சமயம் இவர்களின் சம்பிரதாய குறுந்தகவல்களைக் கண்டு சோக சிரிப்பான்களை அனுப்புகிறது. காற்று வெளியிடை கடற்கரையோர கிளிஞ்சல்கள் அவளின் கடிதத் துணுக்குகளை நினைவூட்டுகின்றன. ஒன்றை பொறுக்கி எடுத்தபடி நடக்கிறான் அவன்.

பீத்தோவனின் பத்தாவது சிம்பொனிக்கு:

காதலர் தினம்

அபிநய உடல்மொழியும் அழகுக்குரலுமாய் பொழுதுகளை குளிர்வித்த தென்றல் அவள். ஒரு நண்பகல் நேரத்தில் இருவருக்குமான தொடக்கப் புள்ளியாய் இருந்தது இசை. அறிமுகப் படலத்திற்கு பின்னான கோடிட்ட இடங்களை தன் ஆர்மோனியம் கொண்டு நிரப்பினார் ராஜா. ஸ்வரங்களின் வழி சூல் கொண்ட அந்த உறவிற்கு உருவும் உயிரும் கொடுத்தன வடுகப்பட்டிக்காரரின் வரிகள். மொழி, அந்தஸ்து என இருவருக்குமிடையே அறுபது வித்தியாசங்களை வெறும் கண்களாலேயே கண்டறிய முடியும். ஆனால் தீரா உரையாடல்கள் தந்த போதை இந்தக் குறைகளைத் தாண்டும் கயிறாய் இருந்தது. எழுதியே பழக்கப்பட்ட அவனை எழுத்துகளில் வாழ வைத்து அழகு பார்த்தாள். 'உரை' - எல்லாவற்றுக்குமான விளக்கம். 'கவிதை' - தர்க்கம் தேவையில்லாத கற்பனை சூழ் உலகு. 'அவன்' - 'வா கவிதைகளில் தொலைந்து போகலாம்' என அவளின் காதோரம் அழைக்கும் குரல். 'அவள்' - உரைக்கும் கவிதைக்கும் நடுவே தொலைந்து பின் மீண்டவள். 'ஆழ்மனதின் அழுக்கு ஓரத்தையும் அழகியலோடு ஏற்றுக்கொள்பவர்கள் கிடைப்பது வரம். அந்த வகையில் உன்னால் நான் தன்யனானேன்' - அவனுக்கு அவள் எழுதிய இறுதிக்கடிதம் இப்படியாகத்தான் முடிந்திருந்தது. இப்போதும் உள்டப்பியில் வந்து விழும் அவளின் குரல் குறிப்புகளில் தொடங்குகிறது அவனின் வார இறுதிகள்.   

பிளாட்டோவின் தொலைந்து போன புத்தகத்திற்கு:

தேவதை

அவனின் மின்னற்பொழுது காதலி இவள். புதிதாய் அச்சான புத்தகத்தின் பக்கங்களைப் போல பிரத்யேக வாசனையைக் கொண்டவள். ஆர்தர் கானன் டாயலின் கதாநாயகனைக் கண்டு சிலிர்ப்பவள் 'ஏழாம் உலக'த்து பிரஜைகளுக்காக கண்ணோரம் கரைவாள். அவளின் உணர்ச்சிகளைக் கடன் பெற்ற புத்தகங்கள்தான் பதிலுக்கு வாசனையை பரிசாய் அளித்தன போலும். நடுநிசிகளில் காற்றில் கிசுகிசுக்கும் இவர்களின் உரையாடல்களுக்கான எரிபொருள் - ரஹ்மான். 'யாரோ... யார் அறிவாரோ' என உச்சம் தொடும் அவரின் குரல் இவர்களுக்கான கொலம்பிய கோக்கைன். குழல் இசை கேட்டால் சர்வமும் மறக்கும் அவளுக்கு. அவனுக்கான காதல், காமம், மோகம் மொத்தமும் அவளின் மூக்கு நுனியில் இருந்தது. இன்றும் கடந்து செல்லுகையில் ஒலிக்கும் ஒரு சின்ன இசைக்குறிப்பின் மூலம் அவன் மூளை சுருக்கங்களில் இருந்து அவள் கிளர்ந்தெழுகிறாள். இப்படியாக, மூக்கு நுனி வழி அவனுக்கு மோட்சம் உணர்த்தியவள் பிளாட்டோவின் மூன்றாவது தொகுதி போல ஒருநாள் காணாமல் போனாள். அவளுக்காக எப்போதும் பிரத்யேக பிரயத்தனங்கள் எடுக்கும் அவன் இம்முறை எதையும் கைக்கொள்ளவில்லை. காரணம், அவள் சென்றது அட்லாண்டிஸ் தீவிற்கு...

இப்படி... தீராக்காதலில் திளைக்கச் செய்யும் தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் இவன். பதிலுக்கு அத்தேவதைகளுக்கு அவனால் தரமுடிந்ததெல்லாம் பேரன்பும், பெருங்காதல் கலந்த பிரிய முத்தங்களுமே...! 

காதல் சூழ் உலகத்து குடிமக்களுக்கு வாழ்த்துகள்.

-நித்திஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்