வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (27/04/2017)

கடைசி தொடர்பு:18:39 (27/04/2017)

'தமிழுக்கு ஏன் ஞானபீட விருது கிடைப்பதில்லை?' - பிரபஞ்சன் பேட்டி #Prapanchan55

எழுத்தாளர் பிரபஞ்சனின் எழுத்து வாழ்க்கைக்கு, இது 55-வது ஆண்டு. இந்தச் சாதனையைக் கொண்டாடும்விதமாக எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், பவா செல்லதுரை, பதிப்பாளர் வேடியப்பன் ஒருங்கிணைப்பில், ஏப்ரல் 29-ம் தேதி சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் மிகப்பெரிய இலக்கிய விழா நடக்கவிருக்கிறது. விழாவில், எழுத்தாளர் பிரபஞ்சன் படைப்புகள் வெளியீடு, ரூபாய் 10 லட்சம் நிதி அளிப்பு, ஆவணப்படம் திரையிடல், நாடக அரங்கேற்றம், எழுத்தாளர்களின் உரை... என ஓர் இலக்கியத் திருவிழாவே நடைபெற இருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் இயங்கும் முன்னோடி எழுத்தாளரான பிரபஞ்சனின் பிறந்த நாளான இன்று, அவரோடு பேசினேன்...

பிரபஞ்சன்

``பிறந்த நாள் வாழ்த்துகள் சார்...’’

``நன்றி... இந்த நாளில் அப்படி ஒன்றும் விசேஷம் இல்லை. பிறந்துவிட்டோம். அதனால் இந்த நாள் வரும்... போகும். அவ்வளவுதான். ஆனால், நண்பர்களோடு இணக்கமாக இருக்க இன்னும் ஒரு நாள் கிடைத்திருக்கிறது. அதுதான் இதிலிருக்கும் மகிழ்ச்சியே.’’

``ஆரம்ப கால எழுத்து வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வாக எதைச் சொல்வீர்கள்?’’

``1961-ம் ஆண்டு நான் எழுத ஆரம்பித்தேன். 1982-ம் ஆண்டுதான் என் கதைகளைப் புத்தகமாகப் பார்க்க முடிந்தது. 8-ம் வகுப்பு படிக்கும் காலத்தில்தான் புதுமைப்பித்தனின் எழுத்துகள் என்னிடம் வந்தன அல்லது அவற்றை நான் அடைந்தேன். புதுச்சேரியில் `கலைக்கோயில்’ பத்திரிகை ஆசிரியர்தான் புதுமைப்பித்தனை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதுவரை புதுமைப்பித்தனை யார் என்றே எனக்குத் தெரியாது. அதற்கு முன்பு வரை என் எழுத்தாளர்கள் அகிலனும் நா.பார்த்தசாரதியும்தான்.  புதுமைப்பித்தனின் எழுத்துகளை வாசிக்கத் தொடங்கிய பிறகு, எனக்கு அவர் வித்தியாசமாக இருந்தார். கையில், அகங்கை புறங்கை என இரண்டு உண்டு. அதுவரை அகங்கையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். புதுமைப்பித்தன்தான் புறங்கையை எழுதிக்காட்டினார். இதைத்தான் முக்கியமான நிகழ்வாகச் சொல்ல வேண்டும்.’’

 

prapanchan

``காவிரிக்கரை எழுத்தாளர்களோடு நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்களேன்?’’

``என் தஞ்சை வாழ்க்கை 1965-ம் ஆண்டு ஆரம்பித்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான்குஞ்சு ஆகியோரைச் சந்திக்கவும் அவர்களோடு நட்பாடவும் வாய்ப்பு கிடைத்தது.
தி.ஜானகிராமன் மகாகலைஞன். ஆனால், அதைப் பற்றிய எந்தப் புரிதலும் அகங்காரமும் அவருக்கு இல்லை. டிபன், காபி, மனித வாழ்க்கை, மிராசுகளின் பெண்கள் சார்ந்த ஈர்ப்புகள், காவிரியில் தண்ணீர் ஓடும் வைபவம்... போன்ற எளிய விஷயங்களைத்தான் அவர் சிலாகித்துப் பேசுவார்.
அவர் கதைகள் குறித்த விமர்சனம் போன்ற ஏதோ ஒன்றை நானும் தஞ்சை ப்ரகாஷும் ஆரம்பிப்போம். `அதைவிடுங்கள் சார்... அவை எல்லாம் நேற்றின் விஷயங்கள். நாளை எழுதப்போகும் கதைகளை மனதுக்குள் வார்த்தைகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு சாயங்காலம் எந்த ஹோட்டலில் இட்லி சாப்பிடப் போகலாம் என்று சொல்லுங்கள்’ என்பார். உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களை அவர் அறிவார். தன் படைப்புகளை அவர்களோடு ஒப்பிட்டு, மனதுக்குள் மதிப்பெண் போட்டுக்கொள்வார். ஆனால், எதையும் பேச மாட்டார்.
என்னுடைய `பிரும்மம்’ கதை, தி.ஜானகிராமன் `கணையாழி' இதழின் ஆசியராக இருந்தபோது அதில் பிரசுரமானது. அன்று மாலை 4 மணிக்கெல்லாம் என்னை வரச் சொல்லி, திருவல்லிக்கேணி ரத்னா கஃபேயில் ஸ்வீட், காரம், காபி வாங்கிக் கொடுத்து அதைக் கொண்டாடினார். நான் புகழப்படும்போதெல்லாம், எனக்குப் புளகாங்கிதமோ ஆணவமோ வருவதில்லை. காரணம், தி.ஜானகிராமனோடு நான் பழகியிருந்ததுதான்.
எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமன் கடல்போன்ற ஆழமுடையவர். அவருடைய சொத்து, பொருளாதாரம் எல்லாம் வீழ்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தில்தான் நானும் தஞ்சை ப்ரகாஷும் அவரைச் சந்தித்தோம். அந்த இழப்பின் சுவடை நாங்கள் அறியாவண்ணம் சிரித்துச் சிரித்துப் பேசினார். பிறகுதான் அவரின் மாபெரும் இழப்புகள் குறித்து நாங்கள் அறிந்தோம். பிற எழுத்தாளர்கள் மீது காழ்ப்போ வெறுப்போ இல்லாமல், அவர் தன் மனதைப் பக்குவப்படுத்தி வைத்திருந்தவிதம் எனக்கு இப்போதும் ஆச்சர்யம் தரும்.
எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு, மகத்தான சம்ஸ்கிருத அறிஞர். அவருடைய மேதமைத்தனத்தை வெளியிட, வாழ்க்கை அவரை அனுமதிக்கவே இல்லை. அது குறித்து அவருக்கு நிறைய சோகங்கள் உண்டு. அவரிடமிருந்து சில உபநிஷத்துகளை நான் அறிந்துகொண்டேன். சாதனையாளர்களை நான் சந்தித்த வரை, அவர்கள் பல நல்ல விழுமியங்களோடுதான் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இவர்கள் போன்றோரின் அடியையொற்றி, மேன்மையான மனிதனாக வாழ வேண்டும் என்பதே இந்த அரை நூற்றாண்டு எழுத்து வாழ்வு எனக்குக் கற்றுத்தந்திருக்கிறது.’’

prapanchan

``புதுச்சேரிபோலவே உங்களுக்குச் சென்னையும் பிடித்தமான ஊர்... சென்னை இலக்கிய வாழ்வில் உங்களால் மறக்க முடியாத எழுத்தாளர் யார்?’’

``ஜெயகாந்தன். நான் அவரிடம் கூர்ந்து கவனித்த ஒன்று, எந்த நிலையிலும் அவர் பெண்களை இழிவாகவோ, மரியாதைக் குறைவாகவோ பேச மாட்டார். அவருடைய `அக்கினிபிரவேசம்’ கதைக்கு எதிராக, ஒரு பெண் எழுத்தாளர் கதை எழுதினார். ஜெயகாந்தன் மடத்தில் அந்தப் பெண் எழுத்தாளர் குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்தார் ஒரு தோழர். உடனே பொங்கியெழுந்த ஜெயகாந்தன், `வெளியே போங்கள்’ என்று அவரைக் கத்தித் தீர்த்துவிட்டார். அதன் பிறகு அவரை நான் ஜெயகாந்தன் மடத்தில் பார்த்ததே இல்லை.
பிறகு, அசோகமித்திரனைச் சொல்ல வேண்டும். நான் 1961-ம் ஆண்டில் எழுத ஆரம்பித்து 1982-ம் ஆண்டு அதைப் புத்தகமாகக் கொண்டுவந்தபோது, அறிமுகமே இல்லாத எனக்கு அழகான முன்னுரை  எழுதிக்கொடுத்தவர் அசோகமித்திரன். இவர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்டது, புதிதாக எழுத வரும் தகுதிவாய்ந்த எந்த எழுத்தாளரையும் வரவேற்று, அவருக்கு ஆதரவான அபிப்பிராயத்தை எழுதவேண்டியது மூத்த எழுத்தாளரான என் கடமை என்பதைதான்.’’

  ``இப்போதைய இலக்கியப் போக்குகள் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

``எனக்கு சில வருத்தங்கள் இருக்கின்றன. நான் அறிந்தமட்டில் மிக முக்கியமான கவிஞர்கள், கதையாளர்கள் என இருபது பேரையாவது சொல்லிவிட முடியும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் எந்தவிதமான எழுத்தும் பேச்சும் தமிழில் இல்லை. சக எழுத்தாளர்களைத் தூஷிப்பதும் புறக்கணிப்பதும் அதிகமாகிவிட்டன. அவர்கள் குறித்து மௌனம் காப்பதன் மூலம் ஆழமாகப் புறக்கணிக்கும் போக்குக் காணப்படுகிறது.
பெண்கள் எழுத வந்தால் ஆண்கள் கோபப்பட எந்தவித நியாயமும் இல்லை. எல்லாவற்றையும்விட மிகப்பெரிய இழிவு, தன்னைத்தானே மிகப்பெரிய எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்வதுதான். இவையெல்லாம் இலக்கியம் சார்ந்த எந்தவிதமான நல்ல பண்புகளையும் வளர்க்காது.’’

``இலக்கிய வாழ்வில் மிக முக்கியமான பழக்கமாகக் கடைப்பிடிக்க விரும்புவது?’’

``மூன்று விஷயங்கள் . ஒன்று, எந்தச் சூழ்நிலையிலும் என்னைப் பற்றிய பெருமித உணர்வை அடையக் கூடாது. இரண்டு, எந்தக் காரணத்தைக்கொண்டும் சக எழுத்தாளரைக் காழ்ப்புஉணர்ச்சியுடன் அணுகவோ, வெறுப்புகொண்டு தூஷிக்கவோ, புறக்கணிக்கவோ கூடாது. மூன்றாவது, இன்று வெளிவரும் புதிய எழுத்தாளனின் படைப்பை நாளையே படித்துவிட வேண்டும்.’’

``வேறு எந்த இந்திய மொழிகளைக் காட்டிலும் மிகக் காத்திரமான படைப்பாளிகள் தமிழ் மொழியில் உண்டு. ஆனால், அகிலன், ஜெயகாந்தன் தவிர வேறு எவருக்கும் ஞானபீடம் விருது வழங்கவில்லை. இந்தப் பாரபட்சம் ஏன்?’’

``ஞானபீட விருது கமிட்டியில் மிக முக்கியஸ்தராக இருந்த கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தியிடம், இதுகுறித்த என் ஆதங்கத்தைச் சொன்னேன். அப்போது அவர் சொன்னார்... `மலையாளம், கன்னடம், வங்காளம்... மொழி எழுத்தாளர்கள், அவர்கள் ஊரில் பகையாக இருந்தாலும், விருது விஷயம் என வரும்போது `எங்கள் மொழி எழுத்தாளர்களுக்கே கொடுக்க வேண்டும்' என வாதிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் மட்டும் எதுவும் சொல்லாமல் மௌனமாகத் திரும்பிவிடுகிறார்கள்’ என்றார். அவர் இப்படிச் சொன்னதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏனெனில், நமது எழுத்தாளர்கள் குறித்துதான் நமக்குத் தெரியுமே.


தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டான இந்த ஆண்டில், தமிழின் சிறந்த 25 சிறுகதைகளைத் தொகுத்து புத்தமாகக் கொண்டுவரலாம் என்று நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் முடிவுசெய்திருக்கிறோம். இதை முதலில் தமிழர்கள் வாசிக்க வேண்டும். பிறகு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற உலக மொழிகளிலும் வர இருக்கிறது. அதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டேன். தமிழிலும் ஆங்கிலத்திலும் வரும் டிசம்பர் மாதமே கொண்டுவர வேண்டும் என்பது எங்கள் திட்டம்.’’

தமிழக அரசியல் மற்றும் சமூக நிலவரம் குறித்த பிரபஞ்சன் அவர்களின் பார்வைகள் நாளை... 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்