பிக் பில்லியன் ஃப்ளிப்கார்ட்... கிரேட் இந்தியன் அமேஸான்...மக்களின் ஃபேவரிட் எது?! #SurveyResult | People are waiting for Amazon great Indian sale

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (14/10/2018)

கடைசி தொடர்பு:12:59 (15/10/2018)

பிக் பில்லியன் ஃப்ளிப்கார்ட்... கிரேட் இந்தியன் அமேஸான்...மக்களின் ஃபேவரிட் எது?! #SurveyResult

தீபாவளி நெருங்கிக்கொண்டிருப்பதால், அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல் என ஏகப்பட்ட ஆன்லைன் தளங்கள் விதவிதமான ஆஃபர்களை போட்டிபோட்டு வழங்கிவருகின்றன. உண்மையில் இந்தச் சலுகைகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்களா? எதனால் ஆன்லைன் ஷாப்பிங்கை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்? ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் விற்பனையா? அல்லது அமேசானின் கிரேட் இந்தியன் சேலா? எந்தச் சலுகைக்காக மக்கள் `வெயிட்டிங்' போன்ற கேள்விகளோடு, விகடன் நடத்திய சர்வேயின் ரிசல்ட் இதோ...

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 41.7 சதவிகிதத்தினர் 31 வயது முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள். 30.6 சதவிகிதத்தினர் 20-திலிருந்து 30 வயதுக்குள் உள்ளவர்கள். 27.7 சதவிகிதத்தினர் 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள். இவர்களில், பெரும்பாலானவர்கள், தீபாவளி ஆன்லைன் சலுகைக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்களே!

`அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் சலுகைகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, 59.7 சதவிகிதத்தினர் `ஆம்' எனப் பதிவிட்டிருக்கிறார்கள். இணையதளம் அடிக்‌ஷனுக்கு முன், பல கடைகள் ஏறி இறங்கி, பொருள்களைப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கொண்டிருந்தோம். அதிலும், பேரம் பேசி வாங்குவதிலிருக்கும் சந்தோஷம், சில பெண்களுக்கு மட்டுமே புரிந்த விஷயம். இந்தக் காலத்திலோ, பெரும்பாலானவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் மூலம், அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே `தளம் தளமாய் மாற்றி'ப் பார்த்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு வகையில் அலைச்சல் இல்லா ஷாப்பிங் என்றாலும், இதில் `Liveliness' இல்லை. அந்த வகையில், `கடைகளுக்குச் சென்று வாங்குவீர்களா? அல்லது ஆன்லைன் ஷாப்பிங்தானா?' என்ற கேள்விக்கு, 4.9 சதவிகிதம், `எப்போதுமே ஆன்லைன்தான்' எனப் பதிவிட்டிருக்கிறார்கள் (ஹய்யய்யோ!). 7.3 சதவிகித மக்கள், கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குகிறார்கள். 28.2 சதவிகிதத்தினர் பெரும்பாலும் ஆன்லைனிலும், 16.5 சதவிகிதத்தினர் நேரடிக் கடைகளிலும் வாங்குகிறார்கள். 43.1 சதவிகிதத்தினர், 50-50 ஆப்ஷனை க்ளிக் செய்திருக்கின்றனர் (நல்ல வேளை, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்குவதை இன்னும் முழுசா மறக்கல!)

அமேஸிங் அமேஸான்

`ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு அப்படி என்னதான் காரணம்?' என்ற கேள்விக்கு, `சலுகைகளே காரணம்' என்று பெரும்பாலானவர்கள் பதில் அளித்திருக்கின்றனர். 51.9 சதவிகிதத்தினர், `ஏராளமான நல்ல சலுகைகள் கொடுப்பதால் ஆன்லைன் ஷாப்பிங்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்' என்றும், 21.4 சதவிகிதத்தினர் `நேரம் மிச்சமாகிறது' என்றும் பதிவுசெய்திருக்கிறார்கள். 20.4 சதவிகிதத்தினர் `நேரடிக் கடைகளைவிட ஆன்லைனில் வெரைட்டி அதிகம்' என்று கூறியிருக்கிறார்கள்.

நேரடிக் கடைகளில் ஒவ்வொரு பொருளையும் சரிபார்த்து வாங்க முடியும். ஆனால், எதையும் உறுதிசெய்ய முடியாமல்போகும் ஆன்லைனில் `அதிகம் வாங்கும் பொருள்கள் என்னவாக இருக்கும்?' என்ற கேள்வி எழாமல் இல்லை. அதற்கு, 67.5 சதவிகித மக்கள் `எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள்' எனப் பதிவிட்டிருக்கிறார்கள். 13.1 சதவிகிதம் பேர் `ஆடை ஆபரணங்கள்' என்றும், 7.3 சதவிகித மக்கள் `புத்தகம்' என்றும் பதிவிட்டிருக்கிறார்கள். மளிகைப் பொருள்களை 2.9 சதவிகித மக்கள் ஆன்லைனில் வாங்குகிறார்கள்.

முக்கியமான சில ஆன்லைன் தளங்களைத் தேர்ந்தெடுத்து, `மக்களின் ஃபேவரிட் என்ன?' என்று கேட்டிருந்தோம். Snapdeal, ஜபாங் தளங்களுக்கு சுமார் 1 சதவிகித மக்கள் வாக்களித்திருக்கின்றனர். 28.6 சதவிகித மக்கள் ஃப்ளிப்கார்ட்டைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். 65 சதவிகித வாக்குகளைப் பெற்று அமேசிங் அமேசான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நேரடி பெட்டிக்கடைகளைப்போல், ஆன்லைனிலும் ஏராளமான சின்னச் சின்னத் தளங்கள் உள்ளன. ஆனால், அவர்கள் அமேஸான், ஃப்ளிப்கார்ட்டைபோல் அதிரடி சலுகைகள் கொடுப்பது குறைவுதான் என்றாலும், 3.4 சதவிகித மக்கள் மற்ற தளங்களுக்கும் ஆதரவளித்துள்ளனர். (அடேங்கப்பா! லாயல் கஸ்டமர்ஸ்!)


டிரெண்டிங் @ விகடன்